Mayor Priya: இத்தாலியில் மேயர் பிரியா..! சென்னைக்கு வரும் புதிய திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பம்
சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த வேண்டிய புதிய திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பத்தை அறிவதற்காக, மேயர் பிரியா வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த வேண்டிய புதிய திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பத்தை அறிவதற்காக, மேயர் பிரியா வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேயர் வெளிநாடு பயணம்:
திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேயர் பிரியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 17ம் தேதி சென்னயில் இருந்து புறப்பட்ட அவருடன், துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் ஆணயர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பயணம் மேற்கொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்துவதற்காக இத்தாலி நாட்டில் உள்ள ரோம்நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டு, திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தோம் pic.twitter.com/U5p7bRK1Uf
— Priya (@PriyarajanDMK) June 19, 2023
இத்தாலியில் ஆய்வு:
மேயர் பிரியா தலைமையிலான குழு முதலாவதாக இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள ரோம்நகரில் URBASER நிறுவனத்தின் திடக்கழிவு பெறப்படும் நிலையத்தை பார்வையிட்டு, திடக்கழிவுகளை கையாளும் முறை மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். அப்போது, அந்த தொழில்நுட்பம் செயல்படும் விதம், சென்னையில் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் மேயர் கேட்டறிந்தார்.
அடுத்தடுத்து பயணம்:
இத்தாலியை தொடர்ந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிலும் மேயர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதையடுத்து, வரும் 24ம் தேதியன்று இந்த குழு சென்னை திரும்புகிறது. தொடர்ந்து, சென்னையின் புவியியல் அமைப்புக்கு ஏற்ப, வெளிநாட்டு தொழில்நுட்பத்தை மாநகராட்சியில் அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையின் முக்கிய பிரச்னை:
சென்னையில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் தேங்குகிறது. இது பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது. பெருங்குடி உள்ளிட்ட குப்பை கிடங்குகள் செயல்பட்டு வந்தாலும், அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. எனவே, குப்பைகளை மறுசுழற்சி செய்வது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என மாநகராட்சி கருதுகிறது. இதனை கருத்தில் கொண்டே, மேயர் பிரியாவின் வெளிநாடு பயணம் அமைந்துள்ளது. அவர் சென்னையில் திரும்பியதும் சென்னை திடக்கழிவு மேலாண்மை அமைப்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.
ஸ்டாலின் வழியில் பிரியா:
தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் வகித்த சென்னை மேயர் பதவியை பிரியா அலங்கரித்த போதே, அதிக கவனம் பெற்றார். முதலமைச்சரின் கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்தை மறுபடியும் சிங்கார சென்னை 2.0 என்ற பெயரில் கையிலெடுத்து அதனை முனைப்புடன் செயலாற்றி வருகிறார் தற்போதைய மேயர் பிரியா. அதோடு அண்மையில் தான், முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அதன்மூலம், 3,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில், சென்னை மேயர் பிரியாவும் முதலமைச்சர் ஸ்டாலினின் வழியை பின்பற்றி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளார்.