சாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள்.. 133 கோடி இலக்கு.. நலிவடைந்த நெசவாளர்களின் நிலைமை என்ன ?
கடனில் தத்தளிக்கும் சிறிய சங்கங்கள், போதிய நெசவாளர்கள் கிடைக்காமல் கவலையில் உள்ளன.
காஞ்சிபுரம் பட்டு
கோயில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரத்தில் மற்றொரு பெருமை, காஞ்சிபுரம் பட்டு தான். காஞ்சிபுரம் நகரில் 500க்கும் மேற்பட்ட பட்டு கடைகள் உள்ளது, அனைத்து கடைகளிலும் தரமான மற்றும் உண்மையான கைத்தறி பட்டு கிடைக்கிறதா என கேட்டால் சந்தேகம்தான். குறிப்பாக காஞ்சிபுரம் நகர் முழுவதும் இடைத்தரவர்கள் தலையிட்டால், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் தவறான இடங்களுக்கு வழிகாட்டப்படுகின்றனர். தரமான கைத்தறி பட்டு மட்டுமே "காஞ்சிபுரம் பட்டு" என வேதனை தெரிவிக்கின்றனர் நெசவாளர்கள்.
நலிவடைந்த சங்கங்கள்
காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் சார்பில் கூட்டுறவு பட்டு சங்கங்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வந்தன. அதுவும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து சங்கங்களும் லாபத்துடன் செயல்பட்டு வந்தன. தனியார் ஜவுளி கடைகளில் பட்டு வியாபாரம் துவங்கப்பட்ட நாளிலிருந்து படிப்படியாக பட்டு வியாபாரமானது சரியத் துவங்கியது. இதே காலகட்டத்தில், கைத்தறி பட்டு தறி உரிமையாளர்கள் கைத்தறி பட்டு போதிய ஊழியர்களும் இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் அந்த காலகட்டத்தில் செயல்பட்டு வந்த, சிறு சிறு சங்கங்கள் அழிவை நோக்கி சென்று காலப்போக்கில் காணாமல் போனது.
தப்பி பிழைத்த சில சங்கங்கள்
இப்பொழுது காஞ்சிபுரம் நகரில் 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு செயல்பட்டு வரும் சங்கங்களில், 5க்கும் குறைவான சங்கங்களே லாப நோக்குடன் பெரிய அளவில் செயல்படுகிறது. மற்ற கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும், நலிவடைந்த சங்கங்களாகவே இருந்து வருகிறது. புரோக்கர்கள் ஒருபுறம், தனியார் பட்டு சேலை கடைகள் ஒருபுறம், போலி பட்டு சேலைகள், இது போன்ற பிரச்னைகளுக்கு நடுவிலும், கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் பட்டு சேலை விற்பனை, 2020 - 21ம் ஆண்டைவிட, 2021 - -22ல் அதிகரித்துள்ளது.கடந்த 2020- - 21ல், 77.5 கோடி ரூபாய் விற்பனையான நிலையில், 2021- - 22ல் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இந்தாண்டு, மாவட்டத்தில் உள்ள 11 கைத்தறி சங்கங்களுக்கும் சேர்த்து, 133.5 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறு சங்கங்களின் நிலைமை
கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் கூட்டுறவு பட்டு சங்கங்களில், வியாபாரம் நடைபெற்றால் , இந்த இலக்கை தாண்டி சுமார் 150 கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும் கூறுகின்றனர் சங்க நிர்வாகிகள். ஆனால் நலிவடைந்த சில சங்கங்களின் நிலைமையோ மோசமாகி வருகிறது. சிறு சங்கங்களில் கூலி பிரச்சினை காரணமாக பலரும், வேறு வேலைக்கு சென்று விட்டனர். ஆனால் இருக்கும் ஒன்று, இரண்டு பெரிய சங்கங்களில் நெசவாளர்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் கைத்தறி செய்யப்படும் தூய பட்டு, ஜரிகையில் 0.5 சதவீதம் தங்கம், 50 சதவீதம் வெள்ளி, மீதம் சதவீதம் செம்பு ஆகியவை பயன்படுத்தப்படும் இதுவே தூய பட்டு என தெரிவிக்கின்றனர் கைத்தறி நெசவாளர்கள். ஆனால் தனியார் கடைகளில் கிடைக்கும் பட்டு சேலைகள் பலவும், இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகி கார்த்திகேயன் கூறுகையில், “கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு , தொடர்ந்து பட்டு எழுத்து கொடுக்கும் நெசவாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 360 நபர்கள் தொடர்ந்து பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்பொழுது முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆக்டிவ் மெம்பர் (active memeber) எண்ணிக்கை 400 மேல் ஆகி உள்ளது” என தெரிவித்தார்.
விளம்பரப்படுத்தல் முக்கியம்
தனியார் கடைகள் போல, தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள், ஆகியவற்றில் தொடர் விளம்பரம் படுத்த வேண்டும். கைத்தறி பட்டுகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே பட்டு நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக காந்தி சாலையில் பல தனியார் கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன, அவற்றுக்கு போட்டியாக ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை அரசு ஏற்பாடு செய்து, அவற்றில் கைத்தறி பட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான நெசவாளர்களின் கனவாக இருந்து வருகிறது.