மேலும் அறிய
Advertisement

காஞ்சிபுரத்தில் தலைவிரித்தாடும் போலி பட்டு சேலைகள்; உண்மையான பட்டு சேலையை வாங்குவது எப்படி..?
National handloom day: இன்று தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சேலைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து பார்க்கலாம்.

காஞ்சிபுரம் பட்டுசேலை
காஞ்சிபுரத்தின் அடையாளம்
கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு, தனி அடையாளம் என்பது பட்டு சேலைகள் தான். காஞ்சிபுரம் பட்டு என்பது, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ்பெற்றது. கைகளால் நேர்த்தியாக செய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால், காஞ்சிபுரம் பட்டு புடவைகளை வாங்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமனோர் படையெடுப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக, 'போலி பட்டு' புடவைகளின் புழக்கம் அதிகரித்துள்ளன. காஞ்சிபுரம் பகுதியில் தனியார் கடைகளின் ஆதிக்கம் வந்த பிறகே, இந்த நிலைமை ஏற்பட்டதாக குமுறுகின்றனர் பட்டு நெசவாளர்கள். தனியார் கடை ஆதிக்கங்களால், கூட்டுறவு கடைகளால் போட்டியிட்டு விற்பனை செய்ய முடியாமல் போகிறது. நலிந்த பட்டு நெசவாளர்கள் சங்கங்களின் நிலைமையோ, இன்னும் மோசமாக இருக்கிறது. அசல் காஞ்சிபுரம் பட்டு சேலை எப்படி கண்டறிவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

உண்மையான காஞ்சிபுரம் பட்டு சேலையை கண்டறிவது எப்படி ?
கையால் செய்யப்பட்ட பட்டு சேலைக்கு, கைத்தறி முத்திரை கொடுக்கப்பட்டிருக்கும். அசல் பட்டு இழைகளை பயன்படுத்தி செய்யப்பட்டதற்கு, ' சில்க் மார்க் ' முத்திரை கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோன்று மத்திய அரசின் கைத்தறி முத்திரை. காஞ்சிபுரத்தில் செய்யப்பட்ட பட்டிற்கு 'புவிசார் குறியீடு' முத்திரை. கூட்டுறவு சங்கங்களால் செய்யப்பட்டு இருந்தால் கூட்டுறவு சங்கங்களின் முத்திரை ஆகியவை இடம் பெற்றிருக்கும். இவற்றில் 5 முத்திரைகள் இருந்தால், அவை காஞ்சிபுரம் பட்டு சேலை என்பதற்கான அடையாளங்கள்.

ஜரிகையில் உண்மைத்தன்மை தெரிந்து கொள்ள
காஞ்சிபுரம் பட்டுக்கு தனி அடையாளத்தை கொடுப்பது அதன் ஜரிகை அமைப்புதான், ஜரிகையை கண்டறிய தமிழ்நாடு ஜரிகை உற்பத்தி நிறுவனம் சார்பில் , காஞ்சிபுரம் காந்தி சாலையில் ஜரிகை பரிசோதனை நிலையம் உள்ளது. அங்கு ஒரு சேலையில் ஜரிகையில் உண்மை திறனை தெரிந்து கொள்ள, 80 ரூபாய் கொடுத்தால் போதும். பல ஆயிரக்கணக்கான, ரூபாய் செலவு செய்து வாங்கப்படும் பட்டுப் புடவைகளின் உண்மைத் தன்மையை ₹80 ரூபாயில் தெரிந்து கொள்வது அவசியமானது. பட்டு சேலைக்கு மதிப்பு என்பது இந்த ஜரிகை மூலமாகவே கிடைக்கிறது. பழைய பட்டு சேலைகளை வாங்கும் நபர்களை பார்த்திருப்போம், அவர்கள் இந்த ஜரிகைக்காகவே பழைய பட்டு சேலைகளை வாங்குகின்றனர்.
போலி ' சில்க் மார்க் ' லேபிள்
“சில்க்மார்க்” முத்திரை என்பது இயற்கையான பட்டுநூல் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பட்டு ஜவுளிகளில் அவற்றின் உண்மை தன்மையினை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதற்கு பயன்படுத்துவதாகும். இந்நிலையில் பாலியெஸ்டர் நூல்களை கலந்து உற்பத்தி செய்யப்படும் சேலைகளில் பிரத்யேக “சில்க்மார்க்” முத்திரை லேபிள்களை இணைத்து, விற்பனை செய்வது செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. சமீபத்தில் கூட சில கடைகளில், போலி பட்டுச்சேலை விற்பனை செய்ததாக பறக்கும் படையினர் சோதனையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு அவசியமாகிறது
வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருவதால், நகரின் நுழைவு வாயில்களில் பல்வேறு மொழிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. நகரின் நுழைவு வாயில்களிலேயே, பல இடைத்தரகர்கள் நின்று கொண்டு, பட்டுச்சேலை வாங்க வரும் வெளியூர் நபர்களை தவறான கடைகளுக்கு அழைத்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.
விசைத்தறியால் தொடரும் பிரச்னைகள்
கைத்தறி ரகங்களை விசைத்தறியில், உற்பத்தி செய்வதால் கைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெசவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தேசிய கைத்தறிவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நீங்களும் அடுத்த முறை காஞ்சி பட்டு எடுக்க சென்றால், இவற்றை கவனத்தில் வைத்துக் கொண்டு, உண்மையான பட்டு சேலையை வாங்கி, நெசவாளர்களின் வாழ்க்கையை வளமாக்குவோம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion