காஞ்சியில் விடிய விடிய மழை...! பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சொன்ன அந்த தகவல்..!
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.
விடிய விடிய மழை
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வெள்ளைகேட், ஒலிமுகமது பேட்டை,தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, பரந்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். மிதமான மழையே பெய்து வருவதால் வழக்கம் போல் கல்லூரிகளும் செயல்படும். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நகரின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, சின்னமலை, சைதேப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழையும், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எம்.ஆர்.சி நகர் அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பூமியின் உஷ்னம் தணிந்து உள்ளது. இந்நிலையில் காலை 10 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
21.09.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.