அரசியலில் திடீர் திருப்பம்.. திருமாவுக்கு பாமக அழைப்பு.. வாழ்த்து தெரிவித்த திருமா.
Pmk Invites Thirumavalavan: "செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாடு அழைப்பிதழை, திருமாவளவனிடம் பாமக நிர்வாகிகள் வழங்கினர்"

Vanniyar Sangam Manadu: வன்னியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் அருகே மே-11 அன்று சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர்கள் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகளில், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து செய்து வருகின்றன. இந்த மாநாட்டின் பனிக்குழு தலைவராக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருந்து வருகிறார்.
வன்னியர் சங்க மாநாடு
கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான பணிகள் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாநாடு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், அனைத்து தரப்பு மக்களையும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது : இந்த மாநாட்டின் மூலம் சமூக நீதியை வென்றெடுக்க, லட்சக்கணக்கான மக்கள் கூட உள்ளனர். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மேலும் வன்னியர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பிற பின் தங்கிய சமுதாயங்கள் அனைவருக்கும் அவரவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்.
கடந்த 70 ஆண்டு காலமாக வடதமிழ்நாடு கல்வியிலும், சுகாதாரத்திலும், தனிநபர் வருமானத்திலும், மனித வளர்ச்சி குறியீட்டிலும் மிக மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளது. அதே நேரத்தில் டாஸ்மாக் விற்பனையில் வட மாவட்டங்கள் தான் முன்னிலையில் உள்ளது. வட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் இல்லை வேலைவாய்ப்பு கிடையாது. இந்த பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை வழங்கி தமிழ்நாட்டை வளர்ச்சி அடைய தமிழக அரசை வலியுறுத்துகின்ற மாநாடாகவும் இது அமையும்.
தெலுங்கானா, பிஹார், கர்நாடகா, ஒரிசா, ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடுகளை உயர்த்தி கொடுக்கிறார்கள் இதுதான் உண்மையான சமூக நீதி. பட்டியல் இன சகோதரர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார்.
திருமாவளவனுக்கு அழைப்பு :
தொடர்ந்து மாநாடு தொடர்பாக, தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் சார்பில் கட்சி நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில வருடங்களாக தமிழக அரசியலில், எதிர்த துருவங்களாக பார்க்கக்கூடிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு பாமகவினர் நேரில், வன்னியர் சங்க மாநாடு அழைப்பிதழை வழங்கி இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அழைப்பிதழ் பெற்றுக் கொண்ட திருமாவளவன், மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். சிரித்த முகத்துடன் இந்த அழைப்பிதழை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு..
இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு பாமகவின் நிதி நிழல் அறிக்கையையும், பாமக நிர்வாகிகள் மற்றும் பாமகவின் விவசாய அணி சார்பில் அந்த அறிக்கையை திருமாவளவனிடம் பாமக வழங்கி இருந்தது குறிப்பிட்டுத்தக்கது.
வருத்தம் தெரிவித்த அன்புமணி
இதேபோன்று, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில், வி.சி.க. கொடிக்கம்பம் பாமக தொண்டர்களால் சேதப்படுத்திய தகவல் வெளியானது.
உடனடியாக இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வருத்தத்தைத் தெரிவித்தது மட்டுமில்லாமல், இனிவரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என கட்டளையிட்டு இருந்தார். இந்த அழைப்பின் பின்னணியில் அரசியல் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து, அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும் என ஒரு சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.




















