ஓமைக்ரான் தொற்று எவ்வாறு அறிவிக்கப்படும்? அமைச்சர் மா.சு., பேட்டி!
கொரோனா உறுதியான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முழுமையான பரிசோதனை முடிவு வரும் வரை ஒமைக்ரான் வைரஸ் என்று உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
வைரஸ்களின் பரிணாமச் சுழற்சியில் அவை பல உருமாற்றங்களை காலம் நகர நகர சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. 2019-ல் நாவல் கொரோனா வைரஸாகத் தோன்றி உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வைரஸ், தன்னகத்தே உருமாற்றங்கள் அடைந்துகொண்டே வருகிறது. அத்தகைய உருமாற்றங்களில் பலவும் அச்சறுத்தல் அற்றவையாகவும், சில மனித இனத்திற்கு அச்சுறுத்தல் தருபவையாகவும் விளங்குகின்றன. அப்படி புதிய அறிமுகம் ஆன ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கும் சமயத்தில் எல்லா நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆராய்ச்சி மையங்கள் முதல் கட்ட ஆராய்ச்சியில் மிதமான பாதிப்புகளே இருக்கும் என்று கூறிய நிலையில் அவை ஆரம்ப கட்ட ஆராய்ச்சிதான் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், எல்லா நாடுகளும் அதற்கான முன்னெச்சரிக்கை பணியில் உள்ளனர். அதே போல தமிழ்நாடும் விழிப்புடன் இருக்கிறது என்றும் மிகுந்த எச்சரிக்கையோடு தமிழ்நாடு அரசு கையாண்டு வருகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சர்வதேச விமான நிலையங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 11 நாடுகளில் இருந்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களை பரிசோதனை செய்து, தனிமை படுத்தியபிறகே வீட்டிற்கு அனுமதிக்கின்றோம், இரண்டாம் அலையை போன்ற தட்டுப்பாடுகளையும், உயிரிழப்புகளையும் அடையாமல் இருக்க 6 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா உறுதியான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முழுமையான பரிசோதனை முடிவு வரும் வரை ஒமைக்ரான் வைரஸ் என்று உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது. ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறோம். அதனால் யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை, "என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஓமைக்ரான் குறித்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து உள்ளன, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அதற்காக அஞ்ச வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று முன்பிருந்தே அரசுகள் கூறி வருகின்றன. இதுவரை ஒமைக்ரான் 29 நாடுகளில் பரவியுள்ள நிலையில் மொத்தம் 373 பேருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். ஒமைக்ரான் வைரஸ் பரவிய உலகம் நாடுகள் அனைத்திலும், கடுமையான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், மேலும் தொற்று குறித்து ஆதாரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.