கடலூரில் சிபிஐ நடத்திய மக்கள் நாடாளுமன்றம்...!- வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்...!
’’ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் இடித்துத் தகர்த்துள்ள மோடி அரசாங்கத்தை, மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட, ஊளர்கள் தோறும் "மக்கள் நாடாளுமன்றம்" நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் முடிவு'’
கடந்த வாரம் கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சென்ற வாரம் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மத்திய அரசை கண்டித்து "மக்கள் நாடாளுமன்றம்" என மாதிரி நாடாளுமன்றத்தை அந்தந்த ஊர்களில் நடத்தி புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்போவதாக அறிவித்தார். புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம் 300 ஆவது நாளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், 2021 ஜூலை 18ஆம் தேதி கூடிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு நாள் கூட மக்கள் பிரச்சினைகளைப் பேசவிடாமல் ஆளும் பாஜக, நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் இடித்துத் தகர்த்துள்ள மோடி அரசாங்கத்தை, மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட, ஊளர்கள் தோறும் "மக்கள் நாடாளுமன்றம்" நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த மக்கள் நாடாளுமன்றம் ஆனது வரும் 23.8.2021 திங்கள் முதல் 27.8.2021 வெள்ளி வரை ஒரு வாரம் தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த போகிறோம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று கடலூர் தபால் நிலையம் அருகே கடலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களின் பார்வையில் "மக்கள் நாடாளுமன்றம்" நடத்தப்பட்டது. அதில் கடலூர் தபால் நிலையம் அருகில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தேசிய கொடி ஏற்றி நாடாளுமன்றத்தை தொடங்கினர். பின் கட்சியின் மூத்த தலைவர் சபாநாயகராகவும் ,கட்சியின் பிற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்றனர். இந்த, மாதிரி நாடாளுமன்றத்தின் தொடக்கத்தில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளில் போராட்ட காலத்திலேயே உயிரிழந்த விவசாயிகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, அதற்கு பின் தொடங்கிய மக்கள் நாடாளுமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர் என அந்தந்த துறை அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
அதில் மத்திய அரசால் கடந்த வருட செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும், மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்ப பெற கோரியும், தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஓப்பந்த பண்ணைகள் மற்றும் சேவைகள் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றிட கோரியும், தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளை பறித்துவிட்ட தொழிலாளர் நல சட்டத்திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசின் பொது சொத்துக்களை தனியார்களுக்கு விற்கும் திட்டத்தினை கைவிடக்கோரியும் வாதங்கள் எழுப்பப்பட்டன, அதற்கு பின் முன் நிறுத்தப்பட்ட வாதங்களின் மீது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதம் நடைபெற்றது. அதற்கு பின் அனைத்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அனைத்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கூட்டாக மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப்பின் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் மத்திய அரசுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.