சிறுமிக்கு கள்ளக்காதலன் பாலியல் வன்கொடுமை : உடந்தையாக இருந்த தாயும் சித்தியும் கைது...!
30 வயது பெண்ணின் 9 வயது மகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தாயின் அனுமதியோடு பெருமாள், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்
சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (48). இவர் டிபி சத்திரம் பகுதியில் உள்ள ஜோதி அம்மாள் நகரில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த பெண்ணின் சகோதரியான 28 வயது பெண்ணுடனும் பெருமாளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சகோதரிகளின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்த பெருமாள், 30 வயது பெண்ணின் 9 வயது மகளை நான்கு முறை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததை அப்பெண்ணும் கண்டு காணாமல் இருந்து வந்துள்ளார். மேலும், பெருமாள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதேபோல் 9 வயது சிறுமியின் வீட்டுக்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளுக்கும், சிறுமியின் தாய் மற்றும் சித்தியின் அனுமதியுடன் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், அந்த டார்ச்சர்கள் அனைத்தையும் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதை வைத்தும் மிரட்டி தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெருமாள் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு எவ்வாறு கஞ்சா கிடைக்கிறது, யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக பெருமாளின் கைபேசியை கேட்டுள்ளனர். ஆனால் பெருமாள் செல்போன் தர மறுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவருடைய செல்போனை பரிசோதனை செய்தனர். அதில் குழந்தைகளை துன்புறுத்தும் வீடியோ பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமிவரை 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் அவரது செல்போனை பார்த்து போலீசார் மிரண்டு போயுள்ளனர், பெருமாள் செல்போனில், இருந்த அத்தனையும் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி பெருமாள், அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் ஆகிய 3 பேரையும் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கீழ்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். பெற்ற தாயே தனது குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டுகொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணத்திற்கு மீறிய உறவால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குழந்தைகளின், எதிர்காலங்களை மோசமாக பாதித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X