Health Minister interview : இன்னும் 15 நாளில் கொரோனாவுக்கு முடிவு - நம்பிக்கை தெரிவிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்
வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு தமிழக அரசு அனைத்து திட்டங்களையும் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுத்தி வருகிறது.எனவே வரும் 15 நாட்களில் வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டியுடன் கூடிய 100 படுக்கைகள் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்
அதனைத்தொடர்ந்து கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அதன் பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அலோபதி மருத்துவத்துக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் தற்பொழுது இந்திய மருத்துவ முறையான சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவற்றுக்கும் கொடுத்து தற்பொழுது கொரோனா சிகிச்சை அளிக்கபடுகிறது.
இந்திய மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி 52 இடங்களில் சித்தமருத்துவ முகாம்களையும் 11 இடங்களில் யோகா உள்ளிட்ட சிறப்பு பயிற்சி முகாம்களில் கொரோனாவுக்கு எதிரான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக வாணியம்பாடியில் யுனானி சிகிச்சை மையத்ம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், ’’எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை ஒன்றை கூறியுள்ளார் அதில் மருத்துவத்துறை இன்னமும் வேகமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர் இந்த கருத்திற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அவர் சொல்வதைப் போல இந்தத் துறை இன்னமும் வேகமாக செயல்படும். அதே நேரத்தில் மற்றொரு கருத்தையும் தெரிவித்துள்ளார் அதில் கடந்த கால ஆட்சியில் RTPCR பரிசோதனை இருந்த வேகம் இந்த ஆட்சியில் இல்லையென தெரிவித்துள்ளார். குறைவாக இருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.மார்ச் மாதத்தில் நாளொன்றுக்குசராசரியாக 69 ஆயிரத்து 413 பேருக்கு RTPCR பரிசோதனை செய்யப்பட்டது.
தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உருமாறிய வீரியமான வைரஸ் வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸை எதிர்த்து தற்போதைய தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டு வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பதை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தாம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
மேலும் காய்ச்சல் இருமல் சளி ஆகியவற்றைக் கண்டறிய வீடுகள்தோறும் சென்று களப்பணியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மார்ச் மாதத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 540பேருக்கு மட்டுமே வீடு தேடி பரிசோதனை செய்யப்பட்டது தற்போது மே மாதத்தில் மட்டும் 10 லட்சத்து 51 ஆயிரத்து 403பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு. இந்த வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு அனைத்து திட்டங்களையும் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுத்தி வருகிறது.எனவே வரும் 15 நாட்களில் வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தற்போது தமிழகத்தில் 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் தேவை தமிழகத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது என்றார்.