Chennai Suburban Railway : சென்னை எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல போறவரா நீங்க? நாளை முதல் சேவை
கொரோனா கால பொதுமுடக்கத்திற்கு பிறகு சென்னையில் புறநகர் ரயில் சேவைகளை கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது தெற்கு ரயில்வே
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழக அரசு கடந்த 20ஆம் தேதி வெளியிட்ட நிலையில் நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை மூலம் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் குறைப்பு
பெண்களை பொறுத்தவரை எந்த கட்டுப்பாடுகள் இன்றி புறநகர் ரயில்வேவையை எல்லா ரயில்வே நேரங்களிலும் பயன்படுத்தலாம் எனவும், இவர்களுக்கு ஒரு முறை பயணிப்பதற்கான டிக்கெட் மற்றும் திரும்பி வருவதற்கான டிக்கெட், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுடன் பயணிக்கும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
peak hours-ல் ஆண்கள் பயணிக்க முடியாது
ஆண்களை பொறுத்தவரை peak hours என சொல்லப்படும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையும் பயணிக்க அனுமதி இல்லை எனவும், இதனை தவிர்த்த நேரங்களில் ஆண்கள் ஒரு முறை மட்டுமே பயணிக்க கூடிய டிக்கெட்டை வாங்கி பயணிக்கலாம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அடையாள அட்டையை காண்பித்து அரசு ஊழியர்கள் பயணிக்கலாம்
மத்திய மாநில அரசு ஊழியர்கள், நீதிமன்ற பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் தகுந்த அனுமதிக் கடிதம் மற்றும் அடையாள அட்டை இருந்தால் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு எல்லா நேரங்களிலும் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் எனவும் வருகை மற்றும் திரும்பி வருவதற்கான டிக்கெட்டுகளும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவு ரயில் முன்பதிவு செய்தவர்கள் புறநகர் ரயிலை பயன்படுத்த அனுமதி
வெளிமாவட்டத்திற்கோ அல்லது வெளி மாநிலத்திற்கோ விரைவு ரயில் சேவையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் முன்பதிவு டிக்கெட்டை காண்பித்து புறநகர் ரயிலில் எல்லா ரயில்வே நேரங்களிலும் பயணிக்கலாம் எனவும் இவர்களுக்கு ரயிலில் ஒரு முறை பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் கொரோனா பாதுகாப்பு விதிகள்
ரயில் பயணத்தின் போது பயணிகள் முககவசம் அணிவது அவசியம் எனவும் தவறும் பட்சத்தில் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் ரயிலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை பின்பற்றி ரயில் பயணத்தை பயணிகள் தொடரவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து புறநகர் சேவையிலும் தெற்கு ரயில்வே மாற்றங்களை கொண்டு வந்தது. குறிப்பாக முன்களப்பணியாளர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு, பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.