சென்னை: 2-ஆம் வகுப்பு மாணவர் பலி.. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.. சிசிடிவி காட்சிகளால் வெளியான பகீர் தகவல்கள்..
சென்னை ஆழ்வார்திருநகரிலுள்ள பள்ளியில் இன்று காலை 2ஆம் வகுப்பு மாணவர் வேன் மோதி உயிரிழந்தார்.
சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது ஆழ்வார் திருநகர். இந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று காலை இந்தப் பள்ளியில் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரியும் பூங்காவனம் பள்ளி வேனை ஓட்டிச் சென்றுள்ளார். பூங்காவனம் மாணவன் தீக்ஷித் பின்னால் நடந்து வந்ததை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பூங்காவனம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதால் வேன் மாணவன் தீக்ஷித் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவன் தீக்ஷித் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த உயிரிழப்பு தொடர்பாக அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளியில் மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ் மற்றும் பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்தப் பள்ளியின் வேன் ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பள்ளி நிர்வாகம் இன்று மாலைக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பள்ளியின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன்படி பள்ளி வேனிலிருந்து இறங்கிய மாணவர் தீக்ஷித் நடந்து சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது வேனை பார்க்கிங் செய்ய முற்பட்ட ஓட்டுநர் பூங்காவனம் வலது புறம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த வேன் சிறுவன் தீக்ஷித் மீது மோதியுள்ளது. இதன்பின்னர் அந்த மாணவரை ஆசிரியர்கள் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்