மேலும் அறிய
நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை செய்தவர் பழங்குடியினர் இல்லை - தமிழக அரசு
உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவரல்ல. சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் தமிழக அரசு விளக்கம்
உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இரு நாட்களுக்கு முன்பு தீக்களித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பலியான வேல்முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும் பழங்குடியினர் சான்றிதழ் கோரி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அவர் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் செப்டம்பர் 23ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று அவரது விண்ணப்பம் செப்டம்பர் 26ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகவும் தன்னுடைய சகோதரர் எனக் கூறி, பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளவரசன் என்பவரின் சான்றை தாக்கல் செய்திருக்கிறார் எனவும், இளவரசனுக்கும், வேல் முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கள ஆய்வின்போது அண்டை வீட்டார்கள் இடமோ தெருவில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
மாவட்ட வருவாய் அதிகாரி, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அண்டை வீட்டார்கள், வேல்முருகனின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், சகோதரர் எனக் கூறிய இளவரசனிடமும் விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
மற்றொரு வழக்கு
தடை செய்யப்பட்ட அமைப்பின் கருத்துக்களை பரப்பியதால் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கிலிருந்து வழக்கறிஞரை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்தத்தை சமூக ஊடகத்தில் பரப்பியதாக உபா சட்டம் என அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் மோகன் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்ககோரி அவர் தொடர்ந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமையின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மோகன் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு முன்பு நடைபெற்றது.
அப்போது மனுதாரர் தரப்பில், சமூக ஊடகங்களில் செய்திகளை பதிவேற்றுவதால், இந்திய தண்டனைச் சட்ட விதிகள் மற்றும் தேசத் துரோகத்தின் கீழ் உள்ள விதிகள் எதுவும் பொருந்தாது என்றும், உபா பயங்கரவாதச் செயல் என்பது உடல் ரீதியான செயல்களை மட்டுமே குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது. ஆட்சேபனைக்குரிய சமூக ஊடகப் பதிவு மூன்று நாட்களுக்குள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், சமூக ஊடகங்களில் பல ஹேஷ்டேக்குகளுடன் ஆட்சேபனைக்குரிய செய்தியை பதிவேற்றியதாகவும், பலரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியதாகவும் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகநூல் பதிவை வாபஸ் பெறுவது மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு காரணமாக அமையாது என்றும், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், ஏழைகளைச் சுரண்டுவது போன்றவற்றில் இருந்து நாடு விடுபடவில்லை என்றும், சுதந்திரம் ஒரு கேலிக்கூத்து என்றும் செய்தி பரப்பியுள்ளதாகவும், உண்மையான சுதந்திரத்தைப் பெற நக்சல்பாரி காட்டிய போரின் பாதையில் அணிதிரள்வோம் என்றும் குறிப்பிட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரரை வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion