Flights Delay : அதிகாலை முதல் சென்னையில் அதீத பனிமூட்டம்.. விமானங்கள் தரையிறங்க தாமதம்..
சென்னையில் பனிமூட்டத்தால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் பனிமூட்டத்தால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானங்கள் சிறிதுநேரம் திருப்பிவிடப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டன.
ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, மும்பை, மலேசியா ஆகிய விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. இதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் ஹைதராபாத் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, மதுரை, மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
நேற்று திருப்பி விடப்பட்ட விமானங்கள்:
சென்னையில் நேற்று காலை முதல் அதீத பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டது. ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் பனி காரணமாக தரையிறங்க முடியாததால் பெங்களூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல், குவைத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பனிமூட்டம் காரணமாக 21 விமானங்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்தது.
கோவா மற்றும் டெல்லிக்கு சென்ற இரண்டு விமானங்கள் நான்கு மணிநேரம் தாமதமாக வந்தன. அதேபோல், ஜெய்ப்பூருக்கு இரண்டு விமானங்கள் 3.5 மணி நேரமும், மும்பை செல்லும் விமானம் 5 மணி நேரம் தாமதமானது.
பனிபொழிவு:
சென்னையில் இரண்டு நாட்களாக மழை பொழிவு இல்லாத நிலையில், அதிகாலை நேரத்தில் பனிபொழிவு அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பனி பொழிவு அதிகரித்தது கடும் பனிப்பொழிவானது காணப்பட்டது. பொதுவாக காலை சூரியன் உதித்தும் பனிப்பொழிவின் தாக்கம் குறையும் சூழலில் இன்று சூரியன் உதித்தும் சுமார் காலை 8 மணி வரை பனியின் தாக்கம் சற்றும் குறையாமல் இருந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியதால் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினர். இந்த திடீர் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர்.