நிவர் புயலின் போது சம்பவம் செய்த ராஜேஸ்வரி.. நினைவுகூர்ந்து பாராட்டிய சென்னை துணை டிஜிபி!
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியைப் பலரும் பாராட்டி வருகையில், தமிழ்நாட்டின் துணை டிஜிபி மகேஷ் அகர்வால், ராஜேஸ்வரி கடந்த ஆண்டு நிவர் புயலின் போது மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையை மீண்டும் ரீட்வீட் செய்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி, மரம் விழுந்ததால் மயக்கமடைந்த இளைஞரைத் தனது தோளில் தூக்கிபோட்டு, ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றியுள்ளார். இந்தப் படங்கள் தற்போது நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, சமயத்தில் தனது உதவியை இளைஞருக்குச் செய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறார்.
இன்று சென்னை மழை வெள்ளத்தின் போது, கீழ்ப்பாக்கத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரைக் காப்பாற்றியது மட்டுமின்றி, தொடர்ந்து மக்கள் சேவையில் கலக்கி வருகிறார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. உதவ யாரும் இல்லாத நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க உதவி செய்தது, மாற்றுத்திறனாளி பெண்ணுக்குத் தன் செலவில் சீர் செய்து திருமணம் நடத்தி வைத்தது, கொரோனாவால் உயிரிழந்த ஏழை ஒருவரின் உடலைத் தகனம் செய்ய உதவி செய்தது, ஆதரவற்றோருக்குத் தன்னுடன் பணியாற்றுவோருடன் இணைந்து உணவு, மருந்து ஆகியவற்றைக் கொரோனா காலத்தில் கொடுத்து உதவியது எனத் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார் சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ராஜேஸ்வரி.
Well done, Insp Rajeshawari. Reminded me of your work last year. https://t.co/UaBDMq9FHj pic.twitter.com/kCSck56peJ
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) November 11, 2021
கீழ்ப்பாக்கத்தில் மயங்கிய இளைஞனைத் தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றியது குறித்து கேட்கப்பட்ட போது, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, `பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்த பிறகு, அவரைத் தூக்கிச் சென்றேன். அப்போது ஆட்டோ ஒன்று அந்த வழியில் வந்தது. அதில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, பாதிக்கப்பட்டவரின் தாய் அவருடன் இருந்தார். நான் அவரிடம் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியதோடு, காவல்துறை அவர்களுக்கு உதவும் என்றும் கூறினேன். சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், அச்சப்படத் தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியைச் சமூக வலைத்தளங்களில் பலரும் வெகுவாகப் பாராட்டிக் கொண்டுள்ள நிலையில், சென்னை துணை டிஜிபி மகேஷ் அகர்வால், ராஜேஸ்வரி கடந்த ஆண்டு நிவர் புயலின் போது மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையைப் பதிவு செய்திருந்ததை மீண்டும் ரீட்வீட் செய்துள்ளார். கடந்த ஆண்டு, சென்னையில் நிவர் புயல் ஏற்பட்ட போது, கீழ்ப்பாக்கத்தில் குறுகலான சந்து ஒன்றில் இடிந்து விழும் நிலையில் இருந்த வீடு ஒன்றில் வாழ்ந்து வந்த 33 வயது நபரை மீட்டுக் கொண்டு வந்தார். அவரை மீட்ட சில நிமிடங்களில் அந்த வீடு இடிந்து விழுந்தது. அப்போதும் சாதுர்யமாக செயல்பட்டு, உயிர்ப்பலியைத் தடுத்ததற்காக ராஜேஸ்வரி பாராட்டப்பட்டார். அதனை மீண்டும் மக்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளார் துணை டிஜிபி மகேஷ் அகர்வால்.