சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு வளாகத்தில் ஹரீஷ் என்ற சிறுவனை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை நாய் ஒன்று 5 இடங்களில் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு வளாகத்தில் ஹரீஷ் என்ற சிறுவனை நாய் கடித்துள்ளது. இதையடுத்து நாய் கடித்து காயமடைந்த சிறுவன் ஹரீஷ், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நாயை வாக்கிங் அழைத்து வந்த 10 வயது சிறுவன், கவனக் குறைவாக செயல்பட்ட சிறுவனின் தாய் பிரீத்தா, பாட்டி ஸ்டெல்லா ஆகியோர் மீது பேசின்பிரிட்ஜ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
என்ன நடந்தது - முழு விவரம்:
சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் அருண்- தேன்மொழி தம்பதி. இவர்களது 6 வயது சிறுவன் ஹரிஷ் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில், குழந்தையின் வீட்டருகே ஸ்டெல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த நாய் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் படிக்கட்டில் சிறுவன் ஹரிஷ் வந்து கொண்டிருந்தபோது ஸ்டெல்லாவின் பத்து வயது மகன் நாயை அழைத்து வந்த போது சிறுவன் ஹரீஷை பார்த்து குறைத்ததுடன் பயங்கரமாக கடித்துள்ளது. இதில், அந்த சிறுவனின் முகம் கை கால் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாயை வாக்கிங் கூட்டி சென்ற 10 வயது சிறுவன் உட்பட பலர் மீது பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை நாய் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு மற்றும் ஆதம்பாக்கத்தில் சிறுவர்களை நாய் கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் புளியந்தோப்பு பகுதியில் 5 வயது சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.