Anbumani Ramadoss: "என் தம்பிகளிடம் சொல்ல கூட வேண்டாம், கண் அசைத்தால் போதும் " - அன்புமணி ஆவேசம்
"மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களே, நீங்கள் மதுவிலக்கு துறை அமைச்சரா ? என கேள்வி எழுப்பினர்"
கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம் தர்காஸ் மனோகர் ஆகிய 3 பேர் படுகொலை கண்டித்து, பாமக சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு எதிராகவும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இக்கூட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கண் அசைத்தால் போதும்..
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கொலை சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணம் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தான். மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களே, நீங்கள் மதுவிலக்கு துறை அமைச்சரா ? என கேள்வி எழுப்பினர். காவல்துறையினர் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். உங்களால் முடியவில்லை என சொன்னால், எங்க தம்பிகள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் நாங்கள் அதை செய்ய மாட்டோம். என் தம்பிகளிடம் சொல்ல கூட வேண்டாம், கண் அசைத்தால் போதும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என தொண்டர்கள் மத்தியில் பேசினார். நம்மை குறி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாமகவினர் மத்தியில் கோவம் இருக்கிறது. அந்தக் கோபம் வெடிப்பதற்கு முன்னால் நடவடிக்கை எடுங்கள், நான் சொன்னாலும் என் தம்பிகள் அதன் பிறகு கேட்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது :
பாமக நிர்வாகிகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை, முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறை. இந்த கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் திடீரென வந்ததில்லை, கடந்த பத்து ஆண்டுகளாக பெருகி இப்பொழுது உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டது யார் ? இந்த கொலை சம்பவங்களை ஈடுபட ஏவி விட்டது என்பது குறித்து காவல்துறைக்கு தெரியும். ஆனால் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதுபோன்ற கொலை குற்றங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலைச் சம்பவத்திற்கும் கூலிப்படை அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாக கஞ்சா மற்றும் மது இருந்து வருகிறது என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சிறப்பு கவனம் செலுத்தி
கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க சிறப்பு கவனம் செலுத்தி இதை ஒழிக்க வேண்டும். உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கூலி படை கலாச்சாரம் ஒழிப்பு போன்று தமிழ்நாட்டிலும் , கூலிப்படையை வேரோடு அறுக்க வேண்டும். ஒழிக்க வேண்டும். தயவு தட்சனை பார்க்கக்கூடாது, கூலிப்படையில் இருப்பவர்கள் அனைவரும் 16 ,17 வயது உடையவர்கள் தான் மீசை கூட முளைக்கவில்லை. நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், கூட வெடிகுண்டு வீசுகிறார்கள் . நேற்று கூட பாமக நிர்வாகி ஒருவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நடைபெற்றது அடையாள ஆர்ப்பாட்டம் தான், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
வன்னியர்களுக்கு உரிமையான சொத்து..
மகாபலிபுரம் அருகே, நெமிலி ஆளவந்தார் அறக்கட்டளை சார்ந்த நிலங்கள் உள்ளது. தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு தெரியுமா ? தெரியாதா ? என தெரியவில்லை. இந்த நிலங்களை தனியார் குத்தகைக்கு விடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த ஆளவந்தார் அறக்கட்டளை முழுவதும் வன்னியர்களுக்கு உரிமையான சொத்து, 1330 ஏக்கர் நிலம் வன்னியர்களுக்கு சொந்தமானது . அவர்களுக்காக பயன்படுத்த என அவர் உயிலில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலங்களை பிரித்து குத்தகைக்கு விட அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதை முதலமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த சொத்து வன்னியர்களுடைய சொத்து இது வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. அறக்கட்டளைக்கு கீழ் இருக்க வேண்டும் ,இது யாருக்கும் கொடுக்கவும் கூடாது. ஒரு சென்ட் நிலம் கூட வேறு, யாருக்கும் கொடுக்கக் கூடாது மீறி ஏதாவது நடந்தால், பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளதா ? என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பாமகவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதில் கலந்து கொள்வது குறித்து கட்சி ஆலோசனை செய்து முடிவு எடுக்கும் என தெரிவித்தார். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இருப்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.