Chembarambakkam Lake: செம்பரம்பாக்கம் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்களே உஷார்! முக்கிய அறிவிப்பு
Chembarambakkam Lake: "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை 4 மணி அளவில், 100 கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளது"

"செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இந்த பருவ மழையில் முதல்முறையாக, தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது"
செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (21.10.2025) நீர் இருப்பு 20.20 அடியாகவும், கொள்ளளவு 2653 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 796 கனஅடியாக உள்ளது.
மிகை வெள்ளீநீர் (Flash Flood)
கடந்த வருடம் 21.10.2024 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 14.14 அடியாகவும் கொள்ளளவு 1378 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையிலும் தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருவதினாலும், நீர் பிடிப்பு பகுதிகளின் வகைபாடு மாற்றத்தினால் மிகை வெள்ளீநீர் (Flash flood) பெறப்பட வாய்ப்பு உள்ளதினால், நீர்த்தேக்கத்தின் வெள்ள கொள்ளளவை கூடுதலாக உயர்த்த வேண்டியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எனவே, நீர்தேக்க மட்டத்தினை 21 அடியாக பராமரிப்பது வெள்ள மேலாண்மைக்கு ஏதுவாகவும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து இன்று 21.10.2025 மாலை 4.00 மணியளவில் விநாடிக்கு 100 கனஅடி வெள்ள நீரினை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ?
எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.





















