'நான் கண்ணீரோடு சென்று சிறையில் சந்திப்பேன்'; நினைவுகளை பகிர்ந்த அன்புமணி ராமதாஸ்
மகாத்மா காந்தி எப்படி ஒரு தேசிய தலைவரோ அதே போல அம்பேத்கரும் ஒரு தேசிய தலைவர். ஆனால் அவர் பட்டியல் இனத்துக்கான தலைவர் போல சுருக்குகிறார்கள் - அன்புமணி ராமதாஸ்
30 ஆண்டுகளுக்கு முன்பு வட தமிழ்நாடு வெட்டு குத்து என தினசரி கலவரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது ; மருத்துவர் ராமதாஸ் அரசியல் வருகைக்குப் பின்பு அமைதியாக மாறி இருக்கிறது. பாமகவிடம் 6 மாத காலம் அரசு அதிகாரம் இருந்தால் போதும் எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு நிறைவேற்றித் தருவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எழுதிய போர்கள் ஓய்வதில்லை என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “மருத்துவர் ராமதாஸ் இதற்கு முன்பு எழுதிய பல புத்தகங்களின் தலைப்புகளை குறிப்பிட்டு அந்த புத்தகத்தில் உள்ள உள்ளடக்கங்கள் அதன் சிறப்பு அம்சங்களை விளக்கி அந்த புத்தகத்தை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என கூறினார். பாமகவிடம் 6 மாத காலம் அரசு அதிகாரம் இருந்தால் போதும் எவ்வளவோ நல்ல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு நிறைவேற்றித் தருவோம். தமிழ்நாட்டில் ஆறுகள் எங்கே இருக்கிறது? எங்கே ஓடுகிறது? எந்தெந்த ஆறுகளை இணைக்க வேண்டும் எங்கே ஏரி உள்ளது எங்கே குட்டை உள்ளது என நாங்கள் Phd முடித்துள்ளோம்.
1987 இட ஒதுக்கீட்டு சாலை மறியல் போராட்டத்தின் போது என் தந்தை மருத்துவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார் அப்போது நான் எம்எம்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தேன். மாலை நேரங்களில் கல்லூரி முடிந்ததும் சிறையில் சென்று என் தந்தையை சந்திப்பேன். நான் கண்ணீரோடு சென்று சந்திப்பேன் அவர் சிரித்த முகத்தோடு வெளியே வந்து என்னிடம் பேசுவார். அந்த நேரத்தில் சக கல்லூரி மாணவர்கள் என்னை கிண்டல் செய்வார்கள் உன் தந்தை என்னை சிறையில் இருக்கிறார் என்று... எனக்கு அப்போது மனமெல்லாம் மிகவும் வருத்தமாக இருக்கும்.
மகாத்மா காந்தி எப்படி ஒரு தேசிய தலைவரோ அதே போல அம்பேத்கரும் ஒரு தேசிய தலைவர் ஆனால் அவர் பட்டியல் இனத்துக்கான தலைவர் போல சுருக்குகிறார்கள். இதே போலத்தான் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்காகவும் உலகத்தமிழர்களுக்காகவும் எத்தனையோ பல நல்ல விஷயங்களை செய்திருக்கின்றார். இந்திய அளவில் பல்வேறு சமுதாயங்களுக்காக குரல் கொடுத்து தேசிய அளவில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த தலைவர். ஆனால் அவரை சாதிய வட்டத்திற்குள் சுருக்க பார்க்கிறார்கள்.
பாமக வளர கூடாது என்பதற்காக, அரசியல் ஆதாயத்திற்காக மருத்துவர் ராமதாசை அவமானப்படுத்தி கொச்சைப்படுத்துகிறார்கள். 1998 இல் பாமக MP தலித் எழில் மழையை மருத்துவர் ஐயா மத்திய அமைச்சர் ஆக்கினார். அவர் சைரன் வெச்ச காரில் செல்வதைப் பார்த்து ஐயா மனமகிழ்ச்சி அடைந்தார். ஒருமுறை பிரதமர் வாஜ்பாயை சந்திக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார். அப்போது நான் பாராளுமன்றத்தில் இருக்கிறேன் உடனே வாருங்கள் சந்திக்கலாம் என வாஜ்பாய் கூற, நான் சட்டமன்ற நாடாளுமன்ற வளாகத்தின் காலை மிதிக்க மாட்டேன் என சத்தியம் செய்து உள்ளேன். அதனால் அங்கு வருவதில் சிக்கல் உள்ளது என்பதை கூற ஓ அப்படியா என அந்த தகவலை கேட்டு அதிர்ச்சியான பிரதமர் உடனடியாக தனது இல்லத்திற்கு வரவழைத்து சந்தித்தார்.
அந்த அளவிற்கு முன்னாள் பிரதமர்களும் இந்நாள் பிரதமர்களும் மருத்துவர் ஐயாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். மரியாதை என்பது தானாக கிடைக்க வேண்டும். கேட்டு பெறுவது அல்ல... எத்தனையோ பல சமூக முன்னேற்றத்திற்காக போராடிய பாமகவை வன்னியர் கட்சி என்றும்; மருத்துவர் ராமதாசை ஜாதிய தலைவர் என்றும் சுருக்க பார்க்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு வட தமிழ்நாடு கலவரம் வெட்டு குத்து அடிதடி என்று இருக்கும் ஆனால் ஐயா வந்த பிறகு அமைதியாக மாறி உள்ளது. இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடி வருகிறோம். எத்தனையோ போராட்டங்கள் செய்த ஐயாவுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை” என்றார். தமிழகத்தில் போதையை ஒழிக்க ஒரு கையெழுத்து போதும் எனவும் முதலமைச்சரின் விளம்பரத்தை மறைமுகமாக சாடி பேசினார்.