வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் ; சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு AI சிக்னல் மூலம் முற்றுப்புள்ளி
ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் போக்குவரத்து சந்திப்புகளில் , நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தால் அந்த வாகனங்கள் முதலில் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் நீண்ட நேரம் இயங்கும்

சென்னையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும் சென்னை மாநகர போலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் போக்குவரத்து நெரிசல்களை தானே கண்டறிந்து செயல்படும் ஏ.ஐ.சிக்னல்கள் சென்னை மாநகர சந்திப்புகளில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஈ.வே.ரா. பெரியார் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிக்னல் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தானாகவே சிக்னல்களை மாற்றி அமைக்கும் தன்மை
சென்னை மாநகர் முழுவதும் 50 சிக்னல்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றன. தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலும் வடசென்னையில் சில இடங்களிலும் இந்த சிக்னல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஏ.ஐ.மூலமாக செயல்படும் இந்த போக்குவரத்து சிக்னல்கள் வாகன நெரிசலுக்கு ஏற்ப தாமாகவே சிக்னல்களை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டதாகும்.
நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை
ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டிருப்பதன் மூலம் குறிப்பிட்ட சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தால் அந்த வாகனங்கள் எல்லாம் முதலில் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் நீண்ட நேரம் இயங்கும்.
இப்படி குறிப்பிட்ட சாலையில் வாகன நெரிசல் சரியானவுடன் அருகில் உள்ள சாலைகளில் எங்கு வாகனங்கள் அதிகமாக நிற்கிறதோ அந்த சாலையில் உள்ள வாகனங்கள் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் விழும். இப்படி போக்குவரத்து சிக்னல்களை போலீசார் இல்லாமலேயே செயல்படும் வகையில் ஏ.ஐ. தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசல் சீராகும்
சென்னை மாநகரில் மொத்தம் 165 இடங்களில் இந்த ஏ.ஐ. சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் ஏற்கனவே 50 இடங்களில் சிக்னல்கள் செயல்படும் நிலையில் மீதமுள்ள 115 இடங்களிலும் இந்த சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் அதற்கான பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் இந்த போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜ.டி.எஸ் சிக்னல்கள் என்று அழைக்கப்படும் இந்த போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பழைய சிக்னல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.






















