(Source: ECI/ABP News/ABP Majha)
20 வகையான பத்திர பதிவு முத்திரை தாள் விலை உயர்வு - செல்வ பெருந்தகை கண்டனம்
தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு - செல்வ பெருந்தகை கண்டனம்
தமிழக காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
தமிழகத்தில் வீடு , நிலம் வாங்கும் போது முத்திரை பத்திரம், கிரையம், தானம், வீடு கட்டுமான ஒப்பந்தம் மற்றும் செட்டில்மெண்ட் என பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
பத்திர பதிவுத்துறை நிலம் , வீடு தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்கிறது. இதற்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
உறுதி மொழி முத்திரை தாள்
இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 20 என இருந்த நிலையில் அந்த கட்டணம் தற்போது ரூபாய் 100, 200, 500 என பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூபாய் 20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூபாய் 200 வரை அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி செட்டில்மெண்ட் பத்திரங்களுக்கான பதிவு கட்டணம் ரூபாய் 10,000, முத்திரைத் தீர்வு கட்டணம் ரூபாய் 40,000, பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 10,000 என உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூபாய் 4,000 என்பது ரூபாய் 10,000 ஆகவும், அதிகபட்ச முத்திரை தீர்வு ரூபாய் 25,000 என்பது ரூபாய் 40,000 என உயர்த்தியதோடு, சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவிகிதம் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
இந்த அறிவிப்புகளினால் ஏற்கனவே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையான சுமைகளுக்கு ஆளான நிலையில் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
சொத்தின் சந்தை மதிப்பு உயர்வு
ஏற்கனவே இந்திய முத்திரைத்தாள் சட்டம் 2023 தமிழக பதிவுத் துறையினால் சட்டமன்றத்தில் திருத்தப்பட்டு கடந்த மே 3, 2024 முதல் அமலுக்கு வந்தது. இதன்படி 24 வகைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதன்படி 10 சதவிகிதம் முதல் 33 சதவிகிதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல, சொத்தின் சந்தை மதிப்பும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த உயர்வை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகும், அதை தமிழக அரசு திரும்பப் பெறாமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை. இத்தகைய கட்டண உயர்வுகளின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இந்த கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.