ஜிஎஸ்டி முதல் ஓஎம்ஆர் வரை... 390 பகுதிகள் பாதிக்க வாய்ப்பு.. செங்கல்பட்டு நிலை என்ன ? முக்கிய எண்கள் அறிவிப்பு
Chengalpattu Red Alert: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை மறுநாள் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள செங்கல்பட்டு மாவட்டம் தயாராகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் முன்னேற்பாடுகள் என்ன ?
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கான கிராம/வார்டு அளவிலான வரைபடங்கள் தயார் நிலையில் வைத்திருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மிகவும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை தேர்வு செய்து 11 துறைகள் ஒருங்கிணைத்து 33 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 390 பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், 290 பாதுகாப்பு மையங்கள், மருத்துவ குழுவினர்கள், படகுகள், ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் போர்க்கால அடிப்படையில் மீட்க தயார் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைகள் என்னென்ன ?
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைக்கு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு, பிரட், பிஸ்கட், தண்ணீர், மருத்துவர்கள் போன்ற பொருட்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எல்லா மருத்துவமனைகளிலும் மருந்து பொருட்கள் தயார் நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மின் கம்பிகளுக்கு மத்தியில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும். வணிகர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்க வேண்டாம். நியாய விலை கடைகளில் அரிசி போதுமானதாக இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் மாற்றுத்திறனாளிகளை மீட்க வீல் சேர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைகளில் கடந்த மழையின் போது கீழ்தளத்தில் தண்ணீர் சென்று பாதிப்படைந்தது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவித்து, கீழ்தளத்தில் உள்ளவர்களை மேல்தளம் அல்லது அருகில் உள்ள உயரமான கட்டிடத்தில் நோயாளிகளை தங்க வைத்திட அறிவுறுத்த வேண்டும். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் பாதுகாப்பு மையங்களுக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில் 3 நாட்களுக்கு அவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை இருப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
தீவிர கண்காணிப்பு பணி
கடந்த மழையின் போது வல்லாஞ்சேரி, ஜி.எஸ்.டி.ரோடு, வண்டலூர், கேளம்பாக்கம் ரோடு, தாம்பரம் முடிச்சூர் பகுதியில் ஓ.எம்.ஆர். ரோடு தையூர் ஏரிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது இப்பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் . ட்ரோன் மூலமாக குடியிருப்பில் உள்ளவர்களை கண்டறிந்து மீட்க அவர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
மழைக்கு முன்பும் மழைக்கு பின்பு ஏற்படும் பாதிப்பு குறித்து தெரிவிக்க செங்கல்பட்டு மாவட்டம் பொது மக்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.பொ துமக்கள் பெருமழையினால் ஏற்படும் அவசரநிலை தொடர்பான உதவிகளுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. அவசர உதவி, புகார்கள் மற்றும் தகவல்களை கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்:
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077
தொலைபேசி : 044 _ 2742 7412
எண்கள் 044-2742 7414
Whatsapp எண் : +91 94442 72345