(Source: ECI/ABP News/ABP Majha)
வாக்சின் காரணமில்லையா? உடனே தெளிவுபடுத்துங்கள் ப்ளீஸ் - மருத்துவரின் பேட்டி
நடிகர் விவேக்கிற்கு முதல் அட்டாக்கிலேயே ரத்த குழாயில் 100 சதவீத அடைப்பு ஏற்படுகிறதென்றால், அவருக்கு உடலில் கொழுப்போ, ரத்தக்கொதிப்போ அதிகமாக இருந்திருக்க வேண்டும். அல்லது இது தொடர்பான மருந்துகளை அவர் எடுத்து வந்திருக்க வேண்டும். இப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் அவருக்கு கோவாக்சின் போட்ட மறுநாளே தீவிரமான மாரடைப்பு ஏற்படுகிறதென்றால், அது தடுப்பூசியின் பக்க விளைவா என்பதை நிச்சயம் ஆராயவேண்டும் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்
தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையையும், அதனால் அவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் தமிழக சுகாதாரத்துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களிடையே எழுந்துள்ள அச்சத்தை போக்க வெறும் வாய்மொழி வார்த்தைகளாக இல்லாமல், தரவுகளாக அவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக Abp நாடு செய்தி நிறுவனத்திற்கு அவர் அவர் அளித்துள்ள பேட்டியில்
கோவாக்சின் போட்ட மறுநாளே நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமே இல்லை என பொத்தம் பொதுவாக மறுத்துவிடுவது சரியான நடவடிக்கை இல்லை.
மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணத்தை கண்டடையமுடியாதுதான். ஆனால் இதற்கு முன்னர் விவேக்கிற்கு என்ன மாதிரியான உடல் நலக் கோளாறுகள் இருந்தன ? அவர் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாரா ? என்பதையெல்லாம் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்படி பார்த்தால், அவருக்கு லேசான ரத்த அழுத்தம் மட்டும் இருந்ததாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதோடு கோவாக்சின் போட்ட அடுத்த நாள் இப்படி மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை. தடுப்பூசி போட்ட ஒரே நாளில் மாரடைப்பு வராது, மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்துதான் பக்க விளைவுகள் தெரியும் அல்லது ஊசி போட்ட சில மணி நேரங்களிலேயே தெரிந்துவிடும் என்று சொல்வதெல்லாம் அறிவியல் பூர்வமாக மருத்துவத்தில் நிரூபிக்கப்படாதவை.
நடிகர் விவேக்கிற்கு முதல் அட்டாக்கிலேயே ரத்த குழாயில் 100 சதவீத அடைப்பு ஏற்படுகிறதென்றால், அவருக்கு உடலில் கொழுப்போ, ரத்தக்கொதிப்போ அதிகமாக இருந்திருக்க வேண்டும். அல்லது இது தொடர்பான மருந்துகளை அவர் எடுத்து வந்திருக்க வேண்டும். இப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் அவருக்கு கோவாக்சின் போட்ட மறுநாளே தீவிரமான மாரடைப்பு ஏற்படுகிறதென்றால், அது தடுப்பூசியின் பக்க விளைவா என்பதை நிச்சயம் ஆராயவேண்டும்.
மாரடைப்புக்கான காரணம் கண்டறியமுடியவில்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தடுப்பூசி காரணமே இல்லை என்று மறுப்பதை மருத்துவர்கள் எப்படி ஏற்க முடியும் ?
விவேக்கிற்கு ரத்த அழுத்தத்தை தவிர கொழுப்போ அல்லது இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து செல்லும் குழாய்களில் அடைப்போ இதற்கு முன்னர் ஏற்படாதபட்சத்தில், புதிதாக ஒரு ரத்தக் கட்டி சென்று குழாயில் அடைப்பை திடீரென ஏற்படுத்துகிறதென்றால் அதற்கு காரணம் கோவாக்சின் தடுப்பூசியாக ஏன் இருக்கக் கூடாது?
அரசு கணக்குபடி 5 லட்சம் பேருக்கு இதுவரை கோவாக்சின் தடுப்பூசி போட்டதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் அவர்களில் எத்தனை பேருக்கு என்ன மாதிரியான பின் விளைவுகள் ஏற்பட்டுள்ளன ?
யாருக்குமே எந்த பின் விளைவுகளுமே ஏற்படவில்லை என்று சொன்னால் அது வடிகட்டிய பொய்யாகதான் இருக்க முடியும். ஏனென்றால் மருந்தே இல்லமால் ஊசி செலுத்தினால் கூட சிலருக்கு Injection Shock வரும். குறைந்தபட்சம் இந்த Injection Shock வந்தவர்கள் எத்தனை பேர் என்பதையாவது அரசு தெரியப்படுத்துமா ?
கொரோனா தடுப்புக்காக தடுப்பூசி போடுவதை குறை சொல்லவில்லை, நிச்சயம் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தடுப்பூசியால் பக்க விளைவுகளே இல்லை என்பதை முழு முற்றாக, எந்த வித ஆதாரமும் இல்லாமல், தரவுகளை வெளியிடாமல் மறுப்பதைதான் ஏற்க முடியாது என சொல்கிறேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட The Brazilian regulator Anvisa நிறுவனம் கோவாச்சின் தரத்தை பற்றி கேள்வி எழுப்பியிருந்ததையும், படித்தவர்களும் பணக்காரர்களும் ஏன் மருத்துவர்களும் கூட கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவது ஏன் என்ற கேள்வியையும் நாம் ஓரங்கட்டி வைத்துவிட முடியாது.
எனவே, கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பட்டியலையும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பக்க விளைவுகளையும் அரசு வெளிப்படையாக வெளியிட்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.