Navarasa Web Series Review: ‛வெரைட்டி ரைஸ்’ நவரசா... புளியோதரையா? பொங்கலா? தயிர் சாதமா? ஓப்பன் ரிவியூ!
ஒரு சில படங்கள் அந்தந்த ‘ரசத்தை’ சரியாக கடத்தியிருந்தாலும், எந்த படம் ’செம்ம’ ரகம் எந்த படம் ‘சுமார்’ ரகம் என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
9 different directors including Bejoy Nambiar, Karthik Subburaj, Arwind Swami
Surya, Vijay Sethupathi, Revathi, Arwind Swami, Bobby Simha.
நெட்ப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் நவரசா வெப் சீரீஸ், 9 உணர்வுகளை மையமாகக் கொண்ட 9 கதைகள் அடங்கிய ஆந்தாலஜி (Anthology). ஒவ்வொரு கதையும் 45 நிமிடங்களுக்குள் ரன்னிங் டைம் கொண்டதாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில படங்கள் அந்தந்த ‘ரசத்தை’ சரியாக கடத்தியிருந்தாலும், எந்த படம் ’செம்ம’ ரகம் எந்த படம் ‘சுமார்’ ரகம் என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. எதிரி ; எமோஷன்: கருணை ; இயக்குனர் - பிஜாய் நம்பியார்
படத்தில் வசனங்கள் குறைவு என்பதால் சாவித்திரியாக ரேவதி, பிரகாஷ் ராஜ், தீனாவாக விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பு இந்த படத்திற்கு ப்ளஸ். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணவரிடம் பேசாமல் இருக்கும் ரேவதி, தன்னுடைய கணவனை கொலை செய்வதன் யார் என்பது தெரிந்தும் காட்டிக் கொடுக்கிறாரா இல்லையா என்பதுதான் எதிரியின் கதை. முக்கிய கதாப்பாத்திரங்கள் சொல்ல வரும் மெசேஜ் புரிந்திருந்தாலும் ‘கருணை’ எமோஷனை முழுமையாக கடத்திடவில்லை இயக்குனர் பிஜாய் நம்பியார். எதிரி - ஓக்கே ரகம்.
2. சம்மர் ஆஃப் 92 ; எமோஷன் - சிரிப்பு ; இயக்குனர் - ப்ரியதர்ஷன்
யோகி பாபு, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம், மேக்கிங்கில் சூப்பர். வேலுசாமியாக யோகிபாபு, பல ஆண்டுகளுக்கு பிறகு தான் படித்த பள்ளிக்கூடத்திற்கே விருந்தினராக செல்கிறார். அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது நடந்த ‘அட்ராசிட்டிகளை’ ப்ளாஷ்பேக் கதையாக சொல்லி சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். யோகி பாபு இள வயது கதாப்பாத்திரத்தில் வருபவரை பார்த்து ‘பன்னி வாயா’ என ஆசிரியர் கூப்பிடுவது, உடல் கேலி செய்வது போன்றதுதான் ‘சிரிப்பை’ வர வைக்கும் என இயக்குனர் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார் போல. சம்மர் ஆஃப் 92 - தப்பிச்சுட்டியே!
3. ப்ராஜக்ட் அக்னி ; எமோஷன் - ஆச்சர்யம் ; இயக்குனர் - கார்த்திக் நரேன்
சை-ஃபை படத்திற்கே உண்டான செட், விஞ்ஞானி விஷ்ணுவாக கச்சிதமாக பொருந்தியிருக்கும் அரவிந்த் சுவாமி என படத்தில் சில ப்ளஸ். ஆனால், இதில் சொல்ல வந்த கருத்துகள் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என தெரியவில்லை. ஆனால், படத்தில் வரும் சில ட்விஸ்டுகள், அதை கொண்டு சென்றவிதம் ஆகியவற்றுக்காக படம் ’சுவாரஸ்யம்’ ஆனது என்ற லெவலை எட்டிப்பார்க்கிறது. ப்ராஜக்ட் அக்னி - ஓக்கே, ஆனால் நாட் ஓக்கே!
4. பாயாசம் ; எமோஷன் - வெறுப்பு - இயக்குனர் - வசந்த்
1965-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடக்கும் சம்வங்களாக படமாக்கப்பட்டிருக்கும் பாயாசம், நம்மை அந்த காலக்கட்டத்திற்கே கொண்டு செல்கிறது. தனக்கு பிடிக்காத உறவுக்காரர் பிராமணர் ஒருவரின் திருமண நிகழ்வில், அந்நிகழ்வை சொதப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார் டெல்லி கனேஷ். இதில் ’வெறுப்பு’ எமோஷனை இன்னும் அழுத்தமாக கடத்தியிருக்கலாம், பார்ப்பவர்களுக்கு அவ்வளவு ‘கன்வின்சிங்காக’ இல்லை. பாயாசம் - சுவீட் பத்தல!
5. பீஸ் ; இயக்குனர் ; எமோஷன் - அமைதி ; - கார்த்திக் சுப்புராஜ்
ஈழப் பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட (பீஸ்) ’அமைதி’யில் அமைதியே இல்லை. ஈழப் பிரச்சனையை டிஸ்சார்ஜ் செய்துவிடுங்கள் கார்த்திக் சுப்புராஜ் என மன்றாடும் அளவிற்கு இத்திரைப்படம் இருந்தது. போர் களம் என சொல்லி, எதோ காட்டுக்குள் எடுக்கப்பட்டது போல இருந்தது. கவுதம் வாசுதேவ், சனந்த் ஆகியோரின் நடிப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்த கதைக்கும் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார் பாபி சிம்ஹா. பீஸ் - ஏமாத்திட்டியே குமாரு!
6. ரெளத்திரம்; எமோஷன் - கோபம் ; இயக்குனர் - அரவிந்த் சுவாமி
இயக்குனராக அரவிந்த் சுவாமி கவனிக்க வைக்கிறார். கோபத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை வெவ்வேறு கதாப்பாத்திரங்களின் வழியே வெளிப்படுத்தியுள்ளார். அண்ணன், தங்கை, அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்தவர்கள் சிறப்பு. சந்தோஷ் சிவன், ஏ.ஆர் ரகுமான் என டெக்கினலாக அசத்தலாக இருக்கும் படம், மொத்தமாகவே மனதில் நிற்கிறது. ஆனால், சென்னை கடலோர பகுதியில் நடக்கும் கதைக்களம் கொண்டதாக இருக்கும் இத்திரைப்படத்தில், அப்பகுதி மக்கள் என்றால இப்படிதான் என்ற க்ளீசேவை அரவிந்த் சாமியும் கடைபிடித்தது படத்தின் மைனஸ். ரெளத்திரம் - பெட்டர் லக் திஸ் டைம்!
7. இன்மை ; எமோஷன் - பயம் ; இயக்குனர்- ரதித்திரன் ஆர். பிரசாத்
சித்தார்த், பார்வதி, அம்மு அபிராமி நடித்துள்ள இத்திரைப்படம், 9 கதைகளில் ’பெஸ்ட் 3’ல் வைக்கலாம். மூட நம்பிக்கையை ஆதரிப்பதாக இருக்குமோ என கதைக்களம் நகரும்போது, அதை உடைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுகள். பார்வதியின் பயம் அந்த எமோஷனை பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறது. ஆனால், இதுதான் செய்ய போகிறார் என முடிவான பின்பு, படத்தின் தொடக்கத்தில் வேறு டிராக்கில் படத்தை கொண்டு சென்றதை தவிர்த்திருக்கலாம். இன்மை - பார்க்கலாம்!
8. துணிந்த பின்; எமோஷன் - வீரம் ; இயக்குனர் - சர்ஜூன் கே.எம்
அதர்வா, அஞ்சலி, ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்பில் ‘துணிந்த பின்’. சில வசனங்களுக்கு அரசியல் பேசுகின்றன, ஆனால் அழுத்தமாக இல்லை. அதர்வாவின் கதாப்பாத்திரம் வழியே, கதை ஓக்கே. ஆனால், அந்த வீரம், உத்வேகம் பார்ப்பவர்களை ஃபீல் செய்ய வைக்கவில்லை. கேமரா விஷூவல்ஸ் கண்களுக்கு விருந்து. மற்றபடி, இன்னும் கதையில் மெனக்கெட்டிருக்கலாம். துணிந்த பின் - பெருசா ஒன்னும் இல்ல.
9. கிட்டார் கம்பி மேல நின்று; எமோஷன் - காதல் ; இயக்குனர் - கெளதம் வாசுதேவ்
இந்த வரிசையில், கடைசி படம். ஆனால், ஓடிடி ரிலீஸ் என்பதால் நிறைய பேர் இப்படத்தை முதலில் பார்த்திருப்பார்கள். வழக்கமான ஜி.வி.எம்மின் எலைட் காதல், ஆங்கில வசனங்கள் என்பதால், படம் பார்த்த பிறகு ஏமாற்றமும் இல்லை, ஆச்சர்யமும் இல்லை. வழக்கம் போல, சூர்யாவும், ஜிவிஎம் பட நாயகியும் அழகு! ஆனால், அது மட்டும் போதுமா? ஜிவிஎம் தான் பதில் சொல்ல வேண்டும். 2கே கிட்களுக்கு பிடிக்கலாம், புதுசாக இருக்கலாம். ஆனால் 90ஸ் கிட்களுக்கு ஜிவிஎம் போர் அடித்துவிட்டார். கிட்டார் கம்பி மேல நின்று - அதே கடை, அதே வாடகை!
மொத்தத்தில், நவரசா ஏமாற்றம். எதிர்பார்ப்பு இருந்ததால் மட்டுமல்ல, இல்லாமல் இருந்திருந்தாலும் நவரசா சொதப்பலாக ஃபீல் ஆகியிருக்கும். எனினும், இந்த வீக்கெண்டை கழிக்க, பரிச்சயமான நடிகர் நடிகைகள் நடித்திருப்பதால், டைம் பாஸாக ஒரு முறை பார்க்கலாம். இதுவரை வெரைட்டி ரைஸ் பந்தி. ஆனால் வைக்கும் எல்லா வெரைட்டி ரைஸ்யும் சுவையாக இருப்பதில்லை. தயிர் சாதமோ, புளியோதரையோ, லெமன் சாதமோ, தக்காளி சாதாமோ... ஏதோ ஒன்று... அல்லது பல சொதப்பி விடும். அப்படி தான் இதுவும்!