(Source: ECI/ABP News/ABP Majha)
Rendagam Movie Review: நினைவுகள் மீண்டதா? விறுவிறு த்ரில்லராக ஈர்க்கிறதா அரவிந்த்சாமி-போபன் Duo? ரெண்டகம் ஒரு பார்வை..
Rendagam Movie Review in Tamil:அரவிந்த் சாமி நடிப்பில் டி.பி பெலினி இயக்கத்தில் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியாக உள்ள திரைப்படம்தான் ‘ரெண்டகம்’. இந்தப்படத்தின் விமர்சனம் இதோ!
fellini. T>P
Aravind Swamy, Kunchacko Boban, Eesha Rebba
நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் இயக்குநர் டி.பி பெலினி இயக்கத்தில் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம்தான் ‘ரெண்டகம்’. தமிழில் இந்தப்படம் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை ஆகஸ்ட் சினிமா பேனருடன் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது.
கதையின் கரு:
கேங்வார் மோதல் ஒன்றில் டேவிட்டாக காட்டப்படும் அரவிந்த் சாமிக்கு தலையில் அடிபட்டது போலவும், அதனால் அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து விட்டது போலவும் படம் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் கும்பல் ஒன்று அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அவரின் நினைவுகளை மீட்டெடுக்க கிச்சுவாக வரும் குஞ்சக்கோ போபனை அவரிடம் அனுப்புகிறது.
அவரும் நெருக்கமாக பழகி அரவிந்த்சாமியின் நினைவுகளை மீட்டெடுக்க அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். இறுதியில் அரவிந்த் சாமியின் நினைவுகள் மீட்கப்பட்டதா, கும்பல் குஞ்சக்கோ போபனை அரவிந்த் சாமியிடம் அனுப்பியதற்கான காரணம் என்ன? இவருக்கும் அரவிந்த்சாமிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? போன்றவைகளுக்கான பதில்கள்தான் ரெண்டகம் படத்தின் கதை
அரவிந்த் சாமிக்கு இந்தப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரம். ஆரம்பத்தில் மிகவும் அப்பாவியாக தோன்றி பின்னர் தனது சுயரூபத்தை காண்பிக்கும், அதர பழைய டெம்ப்ளேட்டில் அவரின் கதாபாத்திரம் நகர்கிறது. அவருக்கான மாஸ் மொமண்டுகள் ஏற்கனவே பார்த்து பழகி போன காட்சிகளாக இருப்பதால் அவற்றுடன் நம்மால் பெரிதாக கனெக்ட் ஆக முடியவில்லை.
குஞ்சக்கோ போபன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் புள்ளபூச்சியாக நடித்திருக்கும் அவரின் நடிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், படத்தின் இறுதியில் அவருக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. ஜாக்கி ஷெராப், ஈஷா ரெப்பா உட்பட வேறு எந்த கதாபாத்திரங்களுக்கும் பெரிதான முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அவை வெறுமனே கடந்து செல்கிறன.
ஆரம்பத்தில் அரவிந்த் சாமியுடன் நெருக்கமாக பழகி, அவருடனான நட்பு வட்டத்திற்கு வருவது என படம் நீண்டு கொண்டே செல்வது, சீக்கிரம் கதைக்குள் நுழையுங்கள் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கிடையில் ஒரு கிளாமர் சாங் வேறு.
அரவிந்த் சாமிக்கு நினைவுகள் திரும்பவது போலான காட்சிகளில் இருந்து படம் விறுவிறுப்பை பெற ஆரம்பிக்கிறது. கேங்ஸ்டர் மர்டர், ஸ்லோமோஷன் ஃபைட்ஸ், உண்மையில் குஞ்சக்கோ போபன் யார் என்ற கேள்விக்கான பதில் என இராண்டாம் பாதி நீண்டாலும் படத்தின் திரைக்கதை நம்முடன் கடைசி வரை கனெக்ட் ஆகாமல் செல்வது படத்தின் பலவீனம். மாஸ் மொமெண்ட்டுகள், லொக்கேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.
பாடல்கள் எல்லாம் தேமே என்று கடந்து செல்கிறது. பின்னணி இசையை பொருத்தவரை, பல இடங்களில் படத்தை அதுதான் என்கேஜ் செய்கிறது என்றாலும், சில இடங்களில் அளவுக்கு அதிகமான இசை கதை நகர்தலை பாதிக்கிறது. கெளதம் ஷங்கரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். சிக்கலான கதையை முடிந்த வரை ஆடியன்ஸூக்கு புரியும் படி சொல்லி இருந்தாலும், திரைக்கதை நெருக்கமாக இல்லாதிருப்பதால் ரெண்டகம் நம் மனதிலும் ரெண்டு துண்டாகவே நிற்கிறது.