Sync Movie Review: 'மொத்தமே ஒன்றரை மணி நேரம் படம் தான்' - திகில் கிளப்பியதா “சிங்க்” படம்?.. விமர்சனம் இதோ..!
Sync Movie Review in Tamil: கிஷன் தாஸ் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள “சிங்க்”(sync) படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம் .
Vikas Anand Sridharan
Kishen Das, Monica Chinnakotla,Naveen George Thomas, soundarya nandakumar
அறிமுக இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கத்தில் கிஷன் தாஸ், மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சிங்க்” (sync). சிவராம் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அபிஜித் ராமசாமி இசையமைத்துள்ளார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை நாம் காணலாம்.
தமிழ் சினிமாவுக்கு த்ரில்லர் கதைகள் ஒன்றும் புதிதல்ல. முதலில் பயமுறுத்தும் காட்சிகளாக எடுக்கப்பட்ட திகில் படங்கள், காலப்போக்கில் காமெடி காட்சிகளை கொண்ட படமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ஹாலிவுட்டைப் போல முழுக்க முழுக்க திகில் காட்சிகளை கொண்ட படத்தை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வரிசையில் “சிங்க்”(sync) படம் இணைந்துள்ளது.
படத்தின் கதை
இயக்குநராக முயற்சி செய்யும் கிஷன் தாஸ், ஒரு தயாரிப்பாளரை சந்தித்து விட்டு தோல்வி முகத்தோடு வருகிறார். அவரை உற்சாகப்படுத்தும் வண்ணம் காதலியான மோனிகா சின்னகோட்லா பாண்டிச்சேரிக்கு ட்ரிப் போகலாம் என சொல்கிறார். இந்த பயணத்தில் சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் ஆகிய நண்பர்களும் உடன் செல்கிறனர்.
இதனிடையே மோனிகாவை பிராங்க் செய்யலாம் என மற்ற 3 பேரும் முடிவெடுக்கின்றனர். அதன்படி செய்யும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுகிறது. இதனை காவல்துறையினரை கொண்டு மூடி மறைக்கின்றனர். இதுகுறித்து 4 பேரும் வீடியோ காலில் இணைந்து பேசும் போது, அனைவரது வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கு காரணம் என்ன? இந்த பிரச்சினையில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
நடிப்பு எப்படி?
படம் முழுவதும் கிஷன் தாஸ், மோனிகா சின்னகோட்லா, சௌந்தர்யா நந்தகுமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் ஆகிய 4 பேரை சுற்றி தான் நகர்கிறது. அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தாலும், சௌந்தர்யா நந்தகுமார் தான் கதையில் ஒரு திகில் உணர்வை ஏற்படுத்துகிறார். அவரின் பயந்த சுபாவம், திக்கி பேசுவது என பாராட்டைப் பெறுகிறார்.
படம் எப்படி?
மொத்தமே ஒன்றரை மணி நேரம் தான் படம். ஆனால் அதற்குள் நம்மை ஆட்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட விறுவிறு திரைக்கதை முயற்சியில் இயக்குநர் விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். மொத்த படத்திலும் சில நிமிடங்கள் தவிர்த்து மற்ற நேரம் எல்லாம் 4 பேரும் பேசிக் கொள்ளும் காட்சிகள் தான் இடம் பெறுகிறது. இது சலிப்பை ஏற்படுத்தினாலும் அதனை திகில் காட்சிகளை கொண்டு சரி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
பாண்டிச்சேரி பயணத்தில் ஜாலியாக தொடங்கி, பிரச்சினை என்று வரும் போது ஒருவரையொருவர் குற்றம் சொல்வது, எல்லா பிரச்சினையில் இருந்து தான் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைப்பது வரை ஒரு நண்பர்கள் குழுவின் நிகழ்வுகளை அழகாக கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் ஓடிடி தளம் என்பதால் நண்பர்களுக்குள் பேசிக் கொள்ளும் தகாத வார்த்தைகளையும் வைத்திருக்க வேண்டுமா என்ன?
அபிஜித் ராமசாமியின் பின்னணி இசையால் சில இடங்களில் படம் பார்ப்பவர்கள் ஜெர்க் ஆகிறார்கள். ஆனால் பயப்பட வேண்டிய இடத்தில் பயம் வராமல் போனது, கடைசியில் இதுதான் நடக்கும் என யூகிக்க முடியும் காட்சிகள் என சின்ன சின்ன மைனஸ் பிரச்சினைகள் இருப்பதால் ஆடியன்ஸ் உடன் இப்படம் “சிங்க்” ஆக மறுக்கிறது. இதேபோல் சிவராம் பி.கே.வின் வீடியோ கால் ஒளிப்பதிவும் வித்தியாசமாக உள்ளது.
மொத்தத்தில் காமெடி எதுவும் இல்லாமல் முழுக்க த்ரில்லர் கதைக்களத்துடன் சிங்க் வெளியானதற்கு படக்குழுவினருக்கு பாராட்டுகள்...!