Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Review in Tamil : சிவகார்த்திகேயன் சாய் பல்லவி இணைந்து நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தின் முழு திரை விமர்சனம் இதோ
Rajkumar Periasamy
Sivakarthikeyan , Sai Pallavi , Rahul Bose , Bhuvan Arora
Theatrical Release
அமரன் பட விமர்சனம்
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவர் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள அமரன் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
அமரன் படத்தின் கதை
மேஜர் முகுந்த் வரதஜானனின் வீரமரணத்தைத் தொடர்ந்து இந்திய அரசு அவருக்கு அசோக சக்கரா விருது அறிவித்தது. முகுந்தின் மனைவியாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் பார்வையில் தொடங்குகிறது அமரன் படத்தின் கதை.
மெட்ராஸ் கிறித்தவ கல்லூரியில் இந்துவின் சீனியராக வருகிறார் முகுந்த். பாண்டிச்சேரியில் நடக்கும் ரேம்ப் வாக் போடி ஒன்றில் கலந்துகொள்ள இந்துவுக்கு முகுந்த் பயிற்சி கொடுக்கிறார். இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இந்து தனது காதலை தனது வீட்டில் தெரிவிக்கிறார். ராணுவத்தில் வேலை பார்ப்பவருக்கு தனது பெண்ணை கல்யாணம் செய்துதர மறுக்கிறார் இந்துவின் அப்பா. அவரை சம்மதிக்க வைத்து இந்துவும் முகுந்தும் திருமணம் செய்துகொள்வது வரை முதல் பாதி முடிகிறது.
ராணுவத்தில் கேப்டன் , மேஜர் என அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்கிறார் முகுந்த். 44 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப்பிரிவின் கம்பேனி கமாண்டராக பொறுப்பேற்கிறார். காஷ்மீரில் தீவிரவாத கும்பலின் படைத்தலைவனான அல்தாஃப் வானியை பிடிக்கும் முயற்சியின் போது முகுந்த் உயிரிழக்கிறார்.
அமரன் பட விமர்சனம்
காஷ்மீர் என்கிற சர்ச்சைக்குரிய கதைக்களத்தை கையாண்டாலும் அமரன் படம் தீவிர அரசியல் விவாதங்களுக்குழ் செல்லவில்லை. காஷ்மீரின் அரசியல் சூழலில் இந்திய ராணுவத்யைச் சேர்ந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து காட்டுவதே இயக்குநரின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.
சினிமாவிற்காக எந்த வித மிகைப்படுத்தல்களும் இல்லாமல் எதார்த்தத்துடன் ஒன்றி இருப்பதே அமரன் படத்தின் மிகப்பெரிய பிளஸ். வழக்கமாக போர் பற்றிய படங்களில் திணிக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட எமோஷன் , உணர்ச்சி கொந்தளிப்பு , ஸ்லோ மோஷன் சண்டைக்காட்சிகள் என எல்லாவற்றையும் தவிர்த்திருக்கிறார் இயக்குநர். அதே நேரம் கதையின் போக்கிலேயே பார்வையாளர்களுக்கு தேவையான இடங்களில் மாஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த ஒரு நிஜக்கதையை இயக்குநர் தைரியமாக எடுத்ததற்கு காரணம் என்றால் அது முகுந்த் மற்றும் இந்து இடையிலான காதல் தான். சொல்லப்போனால் ஒரு அழகான காதல் கதையே அமரன். சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் இடையிலான ஒவ்வொரு காட்சிகள் படத்தின் உயிர்நாடியாக இருக்கின்றன. இத்தனைக்கும் நிஜத்திலும் சரி படத்திலும் சரி இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளும் தருணங்களே ஒருசில தான். இந்துவாக சாய் பல்லவியின் கதாபாத்திரம் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. அதற்கேற்றபடி சாய் பல்லவி தன்னை முழுவதுமாக கதாபாத்திரத்திற்குள் பயணித்திருக்கிறார்.
இந்து தனது காதலை தெரிவிக்கும் காட்சி , ஒருபக்கம் துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்க இன்னொரு பக்கம் சாய் பல்லவி அதை கேட்டு அழுதுகொண்டிருக்கும் காட்சி படத்தின் ஹைலைட்.
சிவகார்த்திகேயன் ஒருபக்கம் காதலனாகவும் இன்னொரு பக்கம் கடுமையான ராணுவ வீரனாகவும் ஒரு ஃப்ரேம் வித்தியாசத்தில் மாறுகிறார். வழக்கமான தனது பாடி லாங்குவேஜை கட்டுக்குள் வைத்து படம் முழுவதும் கம்பீரமான ஒரு நபராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார். ராகுல் போஸ் தனது ரோலில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
ஜி.வி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு நியாயம் சேர்கின்ற்ன.
ஏற்கனவே ஆக்ஷன் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும் அமரன் படத்திற்கு பின் அவரது ஸ்கிரீன் வேல்யு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று நிச்சயம் சொல்லலாம்.