PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!
PT Sir Movie Review in Tamil: வீரன் படத்துக்குப் பிறகு பிடி சாராகக் களமிறங்கியுள்ள நடிகர் ஹிப் ஹாப் ஆதி ரசிகர்களைக் கவர்ந்தாரா எனப் பார்க்கலாம்!
Karthik Venugopal
Hiphop Tamizha Aadhi Kashmira Pardeshi Anikha Surendran Ilavarasu Prabhu Thiagarajan
Theatre
ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பிடி சார் (PT Sir).
அனிகா, காஷ்மீரா, பிரபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், தியாகராஜன், இளவரசு, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்துள்ளார். பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற வீரன் திரைப்படத்துக்குப் பிறகு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிடி சார் திரைப்படம் அவரது முந்தைய படத்தைப் போல் ரசிகர்களைக் கவர்ந்ததா எனப் பார்க்கலாம்!
கதைக்கரு
ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக வேலை பார்க்கும் ஹிப் ஹாப் ஆதியை அவரது அம்மா நேரம் சரியில்லாத காரணத்தால் பொத்தி பொத்தி வளர்க்கிறார். தன் பள்ளி நிறுவனத்தில் மேஜிக் சுவர் எனும் சுவாரஸ்யமான விஷயத்தை மாணவர்களுக்கு மத்தியில் உருவாக்கி பாராட்டுகளைப் பெறுகிறார். ஆனால் இதே சுவரால், எதிர்வீட்டுப் பெண்ணான அனிகா சுரேந்திரன் மூலம் எதிர்பாராத பிரச்னை, அதுவும் அவர் வேலை பார்க்கும் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே ஏற்படுகிறது. விளையாட்டுத் தனமாய் இருந்த ஹிப் ஹாப் ஆதி சமூகப் பிரச்னையாய் மாறும் இந்த விஷயத்தை எப்படி டீல் செய்கிறார்? அவர் எதிர்கொள்ளும் போராட்டம், அனிகாவுக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பு, இசை
பிடி வாத்தியார் கனகவேலாக ஹிப் ஹாப் ஆதி. பிடி வாத்தியார் கெட்- அப்புக்கு அருமையாக பொருந்திப்போய் துறுதுறுவென வலம் வந்தாலும், நடிப்பில் இன்னும் பாஸ் மார்க் வாங்கவே இன்னும் திணறுகிறார். நடிகை காஷ்மீரா தமிழ் சினிமாவின் வழக்கமான ஊறுகாய் நடிகையாக, வழக்கம்போல் டூயட்டுக்கும் நாயகன் ஹிப் ஹாப் ஆதியை பின்னால் சுற்ற விடவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
நாயகியைத் தாண்டி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிகை அனிகா. கதை இவரை மையப்படுத்தியே அமைந்துள்ள நிலையில், தேவையான அளவான நடிப்பை வழங்கி படத்துடன் ஒன்ற வைத்துள்ளார். தியாகராஜன் வழக்கமான வில்லனாக கதையில் வந்து செல்கிறார். பிரபு, பாக்கியராஜ், தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா என நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், இளவரசு மட்டுமே கவனம் ஈர்க்கிறார். பாண்டியராஜன், முனீஷ்காந்த் என காமெடிக்காக நடிகர்கள் மட்டுமே படத்தில் இருக்கிறார்கள்.
படம் பேசும் கருத்து
மிக வழக்கமான கதையில், வெகு சாதாரணமாக முந்தைய தலைமுறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் அன்றாடம் அனைத்து வயது பெண்களும் சந்திக்கும் பிரச்னைகளைப் பேச படக்குழுவினர் முயற்சி செய்துள்ளனர். பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டோர் மீது சமூகம் நிகழ்த்தும் தாக்குதல்களையும் அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளனர். ஆனால் இந்த முயற்சிகள் எதிர்பார்த்த வகையில் கதையுடன் இணைந்து கைகொடுத்ததா என்பது கேள்விக்குறியே!
நிறை, குறை
முதல் பாதியில் கமர்ஷியல் படத்துக்குத் தேவையான வழக்கமான மசாலாக்களை அரைத்து முடித்து சுமார் அரை மணி நேரம் கழித்து கதை தொடங்குகையில் ஸ்ஸப்பா.. என்றாகி விடுகிறது. உயிரிழந்த அனிகா கதாபாத்திரத்துக்கு நேர்ந்தது என்ன என்பதை இரண்டாம் பாதி முடியும் வரை சொல்லாமல் நகர்த்தி நம்மை ஆசுவாசப்படுத்தி இருக்கையுடன் ஒன்றவைக்கிறார்கள்.
திரைக்கதையை வழமையாக நகர்த்தி க்ளைமேக்ஸில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. பின்னணி இசை ஓகே ரகம்.
பாலியல் பிரச்னைகளைப் பற்றி பேச எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், வலிந்து புல்லரிப்பு ஏற்படுத்த முயற்சிக்கும் காட்சிகள், பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஹீரோ என க்ளிஷே காட்சிகள் அயர்வையே தருகின்றன. சொல்ல வந்த நல்ல மெசேஜை சுவாரஸ்யம் கூட்டி கொஞ்சம் புதுமையாக ஏதேனும் சேர்த்து முயற்சித்திருந்தால் பிடி சார் அதிரடியாக அனைவரையும் கவர்ந்திருப்பார்.