Michael Movie Review : கேங்ஸ்டர் கதை ... விஜய் சேதுபதி சிறப்பு தோற்றம்... ரசிகர்களை கவர்ந்ததா மைக்கேல்? - முழு விமர்சனம்!
Michael Movie Review : சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மைக்கேல் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
ரஞ்சித் ஜெயக்கோடி
சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கெளதம் மேனன்
‘புரியாத புதிர்’ ‘ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியாகியுள்ள ’மைக்கேல்’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
கதையின் கரு
தன் அப்பாவை பழி வாங்குவதற்காக கத்தியுடன் கிளம்பும் சிறுவன் மைக்கேல், எதிர்பாராதவிதமாக டான் கௌதம் மேனன் உயிரைக் காப்பாற்றி அவரிடத்தில் அடைக்கலமாகிறான். அதைத் தொடர்ந்து அவருக்கு கீழ் வளரும் மைக்கேல் மீண்டும் ஒரு முக்கியமான கட்டத்தில் கௌதம் மேனன் உயிரை காப்பாற்றி அவரது நம்பிக்கைக்குரியவனாக மாறுகிறான். அதன் தொடர்ச்சியாக மைக்கேலிடம் ஒரு முக்கியமான கொலை திட்டம் கொடுக்கப்படுகிறது.
ஆனால் கொலை செய்யப்போன பெண்ணுடனேயே காதல், பெண்ணின் தகப்பனையும் கொல்ல வேண்டும், இந்தச் சூழலை மைக்கேல் எப்படி கையாளப்போகிறான், மைக்கேலின் பின்புலம் என்ன, விஜய் சேதுபதி யார், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மைக்கேல் சரியாக செய்து முடித்தானா என்பது தான் மீதிக்கதை.
மிரட்டும் காட்சிகள்
KGF போன்ற காட்சி அமைப்புடன் நியோ நாயர் ஜானரில் அட்டகாசமாகத் தொடங்குகிறது படம். தொடர்ந்து அனைத்து கதாபாத்திரங்களும் மைக்கேலுக்கு கொடுக்கும் பில்ட்-அப்கள் KGF படத்தை நியாபகப்படுத்துகிறது. அதே போல் தோற்றம், கதாபாத்திரம் என பயமறியா மைக்கேலாக தோன்றும் சந்திப் கிஷன் தோற்றம் பொல்லாதவன் தனுஷையும் நினைவூட்ட தவறவில்லை. கோபக்கார இளைஞராக பொருந்தி போகக்கூடிய சந்தீப் கிஷனுக்கு ரொமான்ஸ் , எமோஷனல் காட்சிகளில் வரமாட்டேன் என அடம்பிடிக்கிறது.
ஹீரோயின் திவ்யான்ஷா ரசிக்கும்படியான பாடலுடன் அறிமுமாகி பின்பு, வழக்கமான கேங்ஸ்டர் பட ஹீரோயினாக மாறிவிடுகிறார். இதற்கு முன்பாக பல படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்த இயக்குநர் கௌதம் மேனன், இதில் கேங்ஸ்டராக வருகிறார். சாதாரண அறிமுகம் தான் என்றாலும் விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து பாராட்டைப் பெறுகிறார். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சில காட்சிகள் மட்டுமே தோன்றி வரலட்சுமியும் அப்ளாஸ் அள்ளுகிறார்.
கேங்ஸ்டர் படங்களுக்கு இசை அமைப்பது என்றால் தனக்கு அல்வா சாப்பிடுவது போன்றது என்பதை மீண்டும் நிருபித்து சிறப்பான பின்னணி இசையை தந்திருக்கிறார் சாம்.சி.எஸ். ஆனால் பாடல்கள் எதுவும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.
R. சத்தியநாரயணனின் எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இடைவேளை காட்சி மற்றும் விஜய் சேதுபதி இன்ட்ரோ காட்சிகளை இன்னும் சிறப்பாக எடிட் செய்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார். படத்தினுடைய கதைக்கு ஏற்றப்படி நிறங்களையும், படம் நடக்கும் காலத்தையும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.
நன்றாகத் தொடங்கிய முதல் பாதிக்கு காதல் காட்சிகள் தடைக் கற்களாக அமைந்துள்ளன . அதேபோல் கதாபாத்திரத் தேர்வில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஆக்ஷன், ஸ்டண்ட் காட்சிகளில் எந்தப் புதுமையும் இல்லை. உள்ளூர் தொடங்கி உலகம் முழுவதும் தொன்று தொட்டு சொல்லப்பட்டு வரும் தன் அம்மாவுக்கு துரோகம் செய்த அப்பாவை தேடிச் சென்று பழி வாங்கும் கதையை க்ளாசிக் கேங்ஸ்டர் பாணியில் மைக்கேல் சொல்லியிருக்கிறது. சுவாரஸ்யம் கூட்டும் கதையும், ட்விஸ்டுகளும் இல்லாததால் மைக்கேல் வழக்கமான கதையாக மாறிவிடுகிறது.