Kannagi Movie Review: நான்கு பெண்களின் கதை.. பெண்ணியம் பேசும் 'கண்ணகி' படம் எப்படி இருக்கு?
Kannagi Movie Review in Tamil: பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் சந்திக்கும் வலி நிறைந்த சூழல்களையும் காட்சிப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றதா கண்ணகி திரைப்படம்..? இங்கே பார்க்கலாம்.
Yashwanth Kishore
Keerthi Pandiyan, Ammu Abhirami, Vidhya Pradeep, Shaalin Zoya
Kannagi Movie Review in Tamil: புதுமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலீன் ஜோயா, மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கண்ணகி. ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதைக்கரு :
சமகாலத்தில் வாழும் நான்கு பெண்கள் சந்திக்கும் பெண்ணியம் சார்ந்த பிரச்சினைகளை எடுத்துக் கூறும் திரைப்படமாக உருவாகியுள்ளது கண்ணகி. நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், திருமணத்திற்கு முன் கருவுற்று கருவை கலைக்க முயற்சிக்கும் பெண்ணாக கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார்.
திருமணத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாய் ஃப்ரெண்டுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஷாலீன் ஜோயா, மேலும் கருவுற முடியாத காரணத்தால் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக நடித்திருக்கிறார் வித்யா பிரதீப். இவர்கள் நால்வரும் தங்கள் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க, அடுத்தடுத்து அவர்கள் வாழ்வில் என்னென்ன நடக்கிறது..? அத்தனை பிரச்சினைகளையும் தகர்த்தெறிந்து தங்கள் வாழ்வின் இலக்கை அடைந்தார்களா..? என்பதே படத்தின் கதை.
நடிப்பு:
நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்திருக்கிறார்கள். படம் முழுவதும் ஒரே முகபாவனையுடன் வரும் கீர்த்தி பாண்டியன் நடிப்பை இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம். உணர்ச்சிகரமான காட்சிகளில் அம்மு அபிராமியின் நடிப்பு சிறப்பு.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை :
பாடல்கள் என்று சொல்லி கொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. பின்னணி இசையும் படத்தோடு ஒன்றாமல் தனியாகவே இருக்கிறது. மொத்தத்தில் இசை சுத்தமாக கவனத்தை ஈர்க்கவில்லை. நான்கு பெண்களின் பாதைகள் ஒன்று சேரும் க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் வைக்கும் என்ற இயக்குநரின் முயற்சி சறுக்கிவிட்டது. பல லாஜிக் ஓட்டைகளும் தேவையற்ற முடிச்சுகளும் ரசிக்கும்படியாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
நிறை குறைகள் :
பெண்கள் சந்திக்கும் சவால்கள் மிகவும் எளிமையான நடிப்போடு காட்சிப்படுத்த முயன்றதற்கு கண்ணகிக்கு பாராட்டுகள். ஆனால் படத்தோடு ஒன்றாத நடிப்பு, பெரிய பெரிய லாஜிக் ஓட்டைகள், மெதுவாக நகரும் கதைக்களம் என படத்தில் நிறைகளைத் தாண்டி குறைகள் தான் தென்படுகிறது. மொத்தத்தில் உங்கள் போரிங்கான வீக் என்டில் திரையரங்கிற்கு சென்று ஒருமுறை கண்ணகியை பார்த்து வரலாம்.
முதல் படத்திலே பெண்ணியம் போன்ற முக்கிய சமூக பிரச்சினையை தன் படத்தின் மூலம் பேசியதற்கு இயக்குநர் யஷ்வந்த் கிஷோருக்கு பாராட்டுகளும் மரியாதையும்.