Kalvan Movie Review: ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன்? திரை விமர்சனம் இதோ!
Kalvan Movie Review in Tamil: ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள கள்வன் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
P.V.Shankar
G.V. Prakash Kumar, Ivana, Bharathiraja, Dheena, Gnanasambandan Gurunathan
டில்லி பாபு தயாரித்து சக்தி பிலிம் ஃபேக்ட்ரி வெளியிட்டுள்ள கள்வன் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். சமகால வெள்ளிக்கிழமை நாயகன் என அழைக்கப்படும் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் இமயம் பாரதிராஜா, இவானா,KPY தீனா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை
ஊருக்குள் திருட்டுத்தனம் செய்துகொண்டு இருக்கும் இளைஞர்களாக ஜி.வி. பிரகாஷ்குமாரும் தீனாவும் உள்ளனர். திருடச் சென்ற இடத்தில் கதாநாயகி இவானாவைச் சந்திக்கும் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கதாநாயகி மீது காதல் வரவே, திருடுவதை விட்டுவிட்டு இவானா மனதில் இடம் பிடிக்க ஸ்கெட்ச் போட்டு காதல் வலையை விரிக்கின்றார். இவானாவுக்கு தன்மீது காதல் வரவைப்பது மட்டும் இல்லாமல் மற்றொரு உள்நோக்கத்துடன், முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்து எடுக்கின்றார் ஜி.வி. பிரகாஷ் குமார். இவானாவுக்கு காதல் வந்ததா இல்லையா? பாரதிராஜாவை தத்துஎடுத்ததற்கான நோக்கம் என்ன? அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது மீதி கதை.
படம் எப்படி இருக்கு?
படம் முழுக்க முழுக்க ஈரோடு மாவட்டத்தின் ஒரு எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநரே ஒளிப்பதிவும் செய்துள்ளதால் கடம்பூர் வனப்பகுதியையும், கடம்பூரில் உள்ள வீடுகளின் அமைப்பையும் கூடுமானவரை அழகாகக் காட்டியுள்ளார். படம் முழுக்க வரும் நக்கல் மிகுந்த கொங்கு மண்டல பேச்சு மொழி ரசிக்கும்படியாக உள்ளது.
தள்ளாத வயதிலும் தன்னை தமிழ் சினிமாவின் இமயம் என தனது நடிப்பின் மூலமும் நிரூபித்துள்ளார் பாரதி ராஜா. களவானி கூட்டாளிகளாக வரும் ஜி.வி. பிரகாஷ் மற்றும் தீனாவின் காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட ஜி.வி-யின் இசை கைகொடுத்துள்ளது. யானைகள் வரும் காட்சிகள் மிகச் சிறப்பாகவே காட்சிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளைமேக்ளில் வரும் யானை காட்சிக்காகவே படக்குழுவுக்கு தனி பாராட்டுகள். பாரதிராஜாவின் செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் கைதட்டல்கள் அள்ளியது.
படத்தின் மற்றொரு பலமாக அமைந்திருப்பது சான் லோகேஷின் படத்தொகுப்பு. குறிப்பாக படத்தில் புலி வரும் காட்சியும், க்ளமேக்ஸ் காட்சியும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை அளித்ததுடன் ரசிக்கும்படியாகவும் அமைந்ததற்கு படத்தொகுப்பும் முக்கிய காரணம்.
படத்தின் மைனஸ்
படத்தின் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் படம் முழுக்க மந்தமாகவே நகர்கின்றது. இதனால் கதையோட்டத்தில் சுவார்ஸ்யம் இல்லை. எப்பதான் மெயின் ஸ்டோரிக்குள்ள போவீங்க என யோசிக்க வைக்கும் அளவிற்கு படத்தின் முதல் பாதியை இழுவையாக இழுத்துள்ளார் இயக்குநர். ஜி.வி. பிரகாஷின் நடிப்பும் மனதில் நிற்கும்படியாக இல்லை. மலைவாழ் மக்களின் வாழ்வியலைப் பேசிய பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் பல காட்சிகளை நிறுத்தியுள்ளது. அப்படி இந்த படத்தில் க்ளைமேக்ஸில் வரும் யானை காட்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மொத்தத்தில் வெள்ளிக்கிழமை நாயகன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன் திரைப்படம் ஓ.கே ரகம்தான்.