Bumper Review: பணத்தால் சோதனை செய்யப்படும் மனிதர்களின் அறம்.. பாராட்டைப் பெற்ற பம்பர் திரைப்படம்.. முழு விமர்சனம்..!
Bumper Movie Review in Tamil: அறிமுக இயக்குநர் எம் செல்வகுமார் இயக்கியிருக்கும் படம் பம்பர் படம் எப்படி இருக்கிறது. பம்பர் பரிசு அடிச்சதா படம்
M Selvakumar
vetri, shivani, harish peradi, kavitha bharathi
அறிமுக இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கியிருக்கும் படம் பம்பர். வேதா பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜீவி படத்தில் நடித்த வெற்றி, ஷிவானி, கவிதா பாரதி, ஹரிஷ் பேரடி, ஜி. பி. முத்து, தங்கதுரை ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.
கதைசுருக்கம்
கேரள மாநிலத்தில் புனலூர் என்கிற ஊரில் இருந்து ஹரிஷ் பேரடி தூத்துக்குடியில் இருக்கும் பேர் தெரியாத ஒருவரை தேடி கிளம்புகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞனான புலிப்பாண்டி (வெற்றி), அவனது நண்பர்களும் தங்களது தேவைக்காக தேவைகளுக்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்துவருகிறார்கள். தனது சின்ன வயதில் தந்தையை இழந்து தனது தாயின் வளர்ப்பில் வளர்ந்த புலிக்கு எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவா இருந்தாலும் ஒரு மனிதனுக்கு பணம்தான் முதலில் தேவை என்பதை உறுதியாக நம்புபவன்.
அதே ஊரில் ஏட்டாக ( கவிதா பாரதி) இருக்கும் இந்த நால்வர் செய்யும் திருட்டுக்களை ஆதரித்து அதில் தனக்கான லாபத்தை எடுத்துக்கொள்பவராக இருக்கிறார். எப்படியாவது தனது அத்தை மகளான பவித்ராவை (ஷிவானி) திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது புலியின் ஆசையாக இருக்கிறது. பணத்தேவைக்காக கொலை செய்வதுவரை முயற்சி செய்கிறார்கள். இத்தகைய சூழலில்தான் புலிப்பாண்டி எதேச்சையாக வாங்கும் லாட்டரி எண்ணிற்கு பத்து கோடி ரூபாய் பரிசு விழுகிறது.
அதை அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பவர் கேரளாவில் இருந்து வந்த ஹரிஷ் பேரடி. இந்தப் பத்து கோடி ரூபாய் புலிப்பாண்டி மற்றும் அவனைச் சுற்றி இருக்கும் மக்கள் அவனது நண்பர்கள். இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் நேர்மையை எப்படி சோதிக்கிறது. பணம் என்கிற ஒன்று மனிதர்களின் அறத்தோடு விளையாடும் விளையாட்டை மிக நேர்மையான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் எம் செல்வகுமார்.
படத்தின் ப்ளஸ்
ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்ட ஒரு கதைதான் என்றாலும் சில புதிய முயற்சிகளை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. படத்தின் தொடக்கத்திலிருந்தே இயக்குநராக நல்லவன் கெட்டவன் என்கிற சார்பை எடுக்காமல் அனைத்துக் கதாபாத்திரத்திற்கு பின்னிருக்கும் நியாயத்தை பதிவு செய்தவாறே வருகிறார். தனது மகன் ப்ளாக்கில் சாராயம் விற்றால் நல்ல வியாபாரம் ஆகும் என்று வந்து நிற்கும்போது அதற்கு அவனது அம்மா நல்ல யோசனைதான் என்று சொல்வது ஒரு நொடி அதிர்ச்சியளித்தது. தனது முதலாளியிடம் கடன் கேட்டு நிற்கும் பாயிடம் அந்த முதலாளி பேசும் வசனம் ஒவ்வொரு மனிதனும் தனது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை உணர்த்துகிறது.
நடிப்பு எப்படி
நடிகர் வெற்றி கதாபாத்திரத்தைப் நன்றாக உள்வாங்கியிருக்கிறார் என்பதை அவரது நிலையான நடிப்பில் தெரிந்துகொள்ள முடிகிறது. கவிதா பாரதி காவல் அதிகாரியாக, பொருந்தியிருக்கிறார். ஷிவானி மிகையல்லாத ஒரு கதாபாத்திரங்கள் அவருக்கு வழங்கப்பட்டால் அவர் மேலும் நல்ல நடிகையாக வர வாய்ப்பிருக்கிறது. இவை அனைவரையும் விட நம் மனதை கவரப்போவது ஹரிஷ் பேரடியின் நடிப்புதான்.
அவரவர் சுயநலத்திற்காக ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் யாரோ ஒரு மனிதனின் நேர்மை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்கிற நம்பிக்கை ஹரிஷ் பேரடியின் கதாபாத்திரத்திரம் உணர்த்தக் கூடியது.
என்ன தவித்திருக்கலாம்
நம்பிக்கையான ஒரு கதையை வைத்திருந்த இயக்குநர் சில இடங்களில் கமர்ஷியலான விஷயங்களை சேர்த்ததை தவித்திருக்கலாம். உதாரணத்திற்கு படத்தின் முதல் பாடல் ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட ஊர் பெருமை பேசும் பாடல்கள். மேலும் அதிகமான பாடல்கள் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் ஏற்கனவே உணர்வுப்பூர்வமான ஒரு படத்தில் மிகைப்படுத்தலாக தொக்கி நிற்கிறது. திரைக்கதை கொஞ்சம் விரைவாக இருந்திருக்கலாம்.
நேர்மையான அதே உணர்வுப்பூர்வமான ஒரு படமாக வெளிவந்திருக்கிறது பம்பர் திரைப்படம். இயக்குநர் எம். செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.