Achcham Madam Naanam Payirppu : பழமைவாதத்தில் இருந்து மீள விரும்பும் இளம்பெண்ணின் கதை.. எப்படி இருக்கிறது `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’?
தன் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் பழமைவாத வழக்கங்களில் இருந்து மீளும் நவீன கால இளம்பெண்ணின் கதையாக உருவாகியிருக்கிறது `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’.
Raja Ramamurthy
Akshara Haasan, Usha Uthup, Malgudi Subha, Anjana Jayaprakash, Shalini Vijayakumar, George Maryan, Kalairani,
தன் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் பழமைவாத வழக்கங்களில் இருந்து மீளும் நவீன கால இளம்பெண்ணின் கதையாக உருவாகியிருக்கிறது `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’.
பழமைவாதத்தைப் பின்பற்றும் உயர்சாதி குடும்பப் பின்னணியைக் கொண்ட பவித்ராவுக்கு ( அக்ஷரா ஹாசன்) ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியானது. கிரிக்கெட் வீரரான தனது காதலன் விளையாடும் போட்டியைத் தினமும் காலையில் தன் தந்தையுடன் தொலைக்காட்சியில் காண்பது, தன் தாய், பாட்டி ஆகியோரிடம் சங்கீதம் கற்றுக் கொள்வது, தன் நாய் `பிக்ஸி’யுடன் வாக்கிங் செல்வது, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றில் பொருள்கள் வாங்குவது, தன் இரண்டு நண்பர்களின் வீட்டில் சென்று மீன் சாப்பிடுவது, அவர்களோடு உரையாடுவது எனத் தன் வாழ்க்கையைக் கழிக்கும் பவித்ரா தன் காதலனுடன் திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ள விரும்புகிறாள்.
தன் இரண்டு நண்பர்களும் எதிரெதிர் துருவங்களாக நின்றபடி, தங்கள் ஆலோசனைகளைச் சொல்கின்றனர். கர்நாடக சங்கீதத்தின் மூத்த பாடகரான தனது பாட்டியின் புகழைத் தானும் சுமக்க வேண்டும் என்ற சுமையையும் ஒருபக்கம் அனுபவிக்கும் பவித்ரா, தன் பிரச்னைகளில் இருந்து வெளியே வந்தாரா, என்ன ஆனது என்பதைப் பேசியிருக்கிறது `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’.
ஒரு குறும்படத்திற்கான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும், இதனைத் திரைப்படமாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா ராமமூர்த்தி என்பது சிறப்பு. இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்தது அதன் நீளம். மேலும், இதில் தொடப்பட்டிருக்கும் விவகாரம் பெரிதும் பேசப்படாதது என்றாலும், அதை பேச முயற்சி செய்திருக்கிறது இந்தத் திரைப்படம். அதுவும் படத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கிறது.
`அச்சம் மடல் நாணம் பயிர்ப்பு’ திரைப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் அக்ஷரா ஹாசனின் நடிப்பு. தன் உணர்வுகளுக்கும், தன் பழமைவாதக் கண்ணோட்டத்திற்கும் இடையில் தவிக்கும் பவித்ராவின் கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். தவிர்க்க முடியாத உரையாடல்களில் சிக்கிக் கொள்ளும் போதும், ஆணுறை வாங்கத் தயங்கும் போதும், இறுதிக் காட்சிகளில் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் போதும், அக்ஷராவின் பங்களிப்பு இந்தப் படத்தின் பலவீனமான திரைக்கதைக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது.
தன் தாயைப் போல மகளும் புகழ்பெற வேண்டும் என விரும்பும் தாயாக மால்குடி சுபா, தன் பேத்தியின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் பாட்டியாக உஷா உதுப், பவித்ராவை இன்னும் குழந்தையாகவே கருதி தினமும் சாக்லேட் தரும் கடைக்காரராக ஜார்ஜ் மரியான், பவித்ராவின் தோழிகளாக வரும் அஞ்சனா ஜெயபிரகாஷ், ஷாலினி விஜயகுமார் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் சரியாக தந்திருக்கின்றனர்.
ஷ்ரேயா தேவ் தூபேவின் ஒளிப்பதிவும், புதிதாக முயற்சி செய்யப்பட்டிருக்கும் மாறுபட்ட பார்வை விகிதமும் இந்தத் திரைப்படத்தை ஓடிடி படைப்புக்கு ஏற்ற மனநிலையை உருவாக்கித் தருகிறது. கீர்த்தனா முரளியின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தைச் சமாளித்து தருவதாக அமைவதோடு, 85 நிமிடங்களில் இந்தப் படம் முடிவடைந்து விடுவதால் அதனைக் காப்பாற்றுகிறது.
உயர்சாதியினரின் பழக்க வழக்கங்களை மேலோட்டமாக எதிர்ப்பதாகத் தொடங்கினாலும், பெண் விடுதலை என்ற தொலைநோக்கு விவகாரங்களில் இருந்து விலகி, ஒரு குறும்படம் என்ற அளவில், `கறை நல்லது’ என்ற சோப் விளம்பரம் போல, `மீறல் நல்லது’ என்று சொல்கிறது `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ திரைப்படம். அது மட்டுமின்றி, இந்தப் படத்தில் காட்டப்படும் பிற சாதியினர் இடையூறு செய்பவர்களாகக் காட்டப்பட்டிருக்கின்றனர். உதாரணமாக, தினமும் பவித்ராவை ஸ்டாக்கிங் செய்யும் ஆணின் நாய் பெயர் `ப்ளாக் பேந்தர்’ எனச் சூட்டப்பட்டிருப்பது, `நாயுடு’ ஆண்ட்டி என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜானகி சபேஷ் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் என உயர்சாதியினரின் வாழ்க்கையை, உயர்சாதி கண்ணோட்டத்தில் படம் பிடித்திருக்கும் விதத்தில் `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ திரைப்படம் பெரும்பாலான தமிழ்ப் பெண்களின் அன்றாடப் பிரச்னைகளில் இருந்து விலகிச் செல்வதாக அமைந்திருக்கிறது. மேலும் நண்பர்களாக வரும் இருவரும் பவித்ராவின் மனசாட்சியின் இரண்டு பக்கங்களின் பிரதிபலிப்பாக இருப்பதும் இந்தத் திரைப்படத்தைக் குறும்படமாக மாற்றுகிறது.
இதுவரை பெரிதும் பேசப்படாத பெண்களின் பாலியல் சுதந்திரம் குறித்து பேசியிருப்பதால், `அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ திரைப்படம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதன் மைனஸ்கள் கூடுதலாக இருப்பதால் இதுவும் ஒரு குறும்படத்தின் நீண்ட வடிவமாக மட்டுமே சுருங்கி விடுகிறது.
`அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.