ரத்தமும் சதையுமாய் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் - எப்படி இருக்கிறது கள?
கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கள திரைப்படத்தை இயக்கியுள்ளார் ரோஹித். படம் பார்த்தால், இந்த அர்ப்ப காரணத்துக்காகவா இவ்வளவு கொடூர ரிவெஞ் என்று தோன்றலாம்.
Rohith V S
Tovino Thomas, Sumesh Moor, Divya Pillai, Lal,
தந்தை, மகன், மனைவி, ஒரு உயர் வகை நாய் என ஒரு சிம்பிளான, கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் டொவினோ தாமஸ். பெரிய தோட்டம், அதன் நடுவே வீடு என வழக்கமான கேரள வாழ்க்கை. பிசினஸில் அதிக பணத்தை விட்ட டொவினோ வீட்டைச் சுற்றி உள்ள பண்ணையத்தில் விவசாயத்தை கவனித்து வருகிறார். அப்படி தோட்ட வேலைக்காக வழக்கமாக வரும் வேலையாள், அவரது உறவினர் ஒரு இளைஞரையும் வேலைக்கு அழைத்து வருகிறார். அந்த இளைஞர் வேலைக்காக மட்டுமே டொவினோ தோட்டத்துக்குள் நுழையாமல் பகையை தீர்க்கும் பழி வாங்கும் உணர்வோடு நுழைகிறார். யார் அந்த இளைஞர்? அவருக்கும், டோவினோக்கும் உள்ள பழைய பகை என்ன? பழி வாங்கும் சண்டையில் வெற்றி பெறுவது யார்? என்ற பல கேள்விகளுக்கு பதிலளித்து முடிவடைகிறது கள திரைப்படம்.
கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கள திரைப்படத்தை இயக்கியுள்ளார் ரோஹித். படம் பார்த்தால், இந்த அர்ப்ப காரணத்துக்காகவா இவ்வளவு கொடூர ரிவெஞ் என்று தோன்றலாம். ஆனால் இது உண்மையாகவே நடந்த ஒரு சம்பவம் என்பதால், ரிவெஞ் என்பது அவரவர் மனநிலையையும், உணர்வையும் பொருத்ததே தவிர அதற்கு குறிப்பிட்ட எல்லை இல்லை என்பதை புரியவைக்கிறது. மலையாள படங்களுக்கே உரிய லொகேஷன். கேமராவை எங்கே தூக்கி வைத்தாலும் மலையும், காடும், வீடும், ஆறும் சூப்பர் லோகேஷனாகவே இருக்கும். கள படம் காட்டையும், மரத்தையும் அழகாக காட்டுகிறது. ஒரு வரிக்கதையை வைத்துக்கொண்டு 2 மணி நேரம் கடத்தி இருக்கிறார்கள். தொடக்கம் முதலே ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு வித மிரட்சியோடே காட்டத்தொடங்குகிறார்கள். யார் என்ன ட்விஸ்ட் வைப்பார்கள் என்றே பார்ப்பவர்களுக்கு தோன்றுகிறது. ஆனால் நேரத்தை கடத்த வேண்டுமென்றே சின்ன சின்ன விஷயங்களையும் மிரட்சியாக காட்டி பில்டெப் கொடுத்து ஆடியன்ஸை ஒருவித அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனுமே வைத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் இரண்டாம் பாதி தொடக்கம் முதல் க்ளைமேக்ஸ் வரை சண்டை காட்சி மட்டுமே பிரதானமாக இருக்கிறது. உலக சினிமாவில் இவ்வளவு நீள சண்டைக்காட்சி இருக்கிறதா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். பழி வாங்குவதற்காக டொவினோவின் வீட்டுக்கு வரும் இளைஞராக சுமேஷ் மூர் நடித்துள்ளார். படம் என்றால் நாயகன் தான் அடிப்பான் என்ற விதியெல்லாம் இந்தப்படத்தில் இல்லை. டொவினோவும், சுமேஷும் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து பிய்த்துக்கொள்கிறார்கள். இரண்டாம் பாதிக்கு பிறகு படம் ரத்தக்களறியாகவே செல்கிறது. ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்று சொல்லுமளவுக்கு டொவினோ - சுமேஷ் காட்சிகள் நகர்கின்றன. ரத்தம் சொட்ட சொட்ட நகரும் காட்சிகள் ஒருகட்டத்தில் மெல்லிய இசையோடு முடிவடைகிறது.
மனைவியாக திவ்யா பிள்ளை, அப்பாவாக லால் ஆகியோர் அவரவர் நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். ரத்தமும், சதையுமான ஒரு ஆக்ஷன் படத்தில் மிகச் சொற்பமான நேரத்தில் ரொமான்ஸ் வந்தாலும் டொவினோ - திவ்யா பிள்ளை அதை ரசிக்க வைக்கிறார்கள். த்ரில்லர் வகை திரைப்படங்களை தாங்கி செல்வதே விஷுவலும், இசையும் தான். கள படத்துக்கும் விஷுவலும், இசையுமே பெரிய பலம். அதுவும் படத்தின் பாதிக்காட்சிகள் சண்டை என்பதால் விஷுவல் நின்று விளையாடுகிறது. ஒளிப்பதிவாளர் அகில் சார்ஜ் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். நாயகன் டோவினோவும், சுமேஷும் நடிப்பில் ரகளை செய்திருக்கிறார்கள். ஒரு சாக்லெட் பாய்போல மலையாளத்தில் நடிக்கத்தொடங்கிய டொவினோ, தாடி, தலைமுடி, சிக்ஸ் பேக் என இந்தப்படத்தில் மிரள வைக்கிறார்.
மிக குறைவான பட்ஜெட்டில் திரைப்படத்தை கொடுத்துவிடும் மலையாளத்தின் அதே சூத்திரம் தான் கள திரைப்படமும். ஒரு பெரிய தோட்டமும், ஒரு வீடும் என படம் முடிவடைகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் என்பதால் நிச்சயம் ஆக்ஷன் பட ரசிகர்களை மட்டுமே படம் திருப்திப்படுத்தும். சென்சாரில் வன்முறைக்காக A சான்றிதழ் கொடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற திரைப்படம் அல்ல. காமெடி, ரொமான்ஸ், சோகம் என கலவையை விரும்பும் சினிமா ரசிகர்கள் கள பக்கம் செல்லத்தேவையில்லை. சண்டைக்காட்சியின் நீளமே உங்களை சோர்வாக்கிவிடும். உங்களுக்கு ரத்தம் சொட்ட சொட்ட சண்டைக்காட்சிகள் கொண்ட ஆக்ஷன் படம் பிடிக்கும் என்றால் கள உங்களுக்கான திரைப்படம். கள திரைப்படம் அமேசான் பிரைமில் கிடைக்கிறது.