Joshua Review: மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்.. ஆனால் கதை? கெளதம் மேனன் இயக்கியிருக்கும் ஜோஸ்வா பட விமர்சனம்!
கெளதம் மேனன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் ஜோஸ்வா : இமை போல் காக்க படத்தின் விமர்சனம்

Gautham Vasudev Menon
Varun , Raahei , Vichitra , Mansoor Ali Khan , Dhivyadharshini, Krishna
Theatrical Release
கெளதம் மேனன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் ஜோஸ்வா : இமை போல் காக்க. வருண் , ராஹேய் திவ்யதர்ஷினி, விசித்ரா, கிருஷ்ணா, மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜோஸ்வா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ஜோஸ்வா இமை போல் காக்க
வழக்கம்போல் கெளதம் மேனன் படங்களில் வருவதுபோல் நாயகனான ஜோஸ்வா மற்றும் நாயகி குந்தவை ஆகிய இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஜோஸ்வா தான் பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையை சேர்ந்தவன் என்கிற உண்மையை குந்தவையிடம் சொல்கிறான். இருவரும் பிரிகிறார்கள்.
குந்தவை சர்வதேச அளவில் பிரபல வழக்கறிஞராக இருக்கிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான மாஃபியா கும்பலின் தலைவனின் வழக்கை வாதாட இருக்கிறார் குந்தவை. இதனால் அவருடைய கூட்டாளிகள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். குந்தவையை கொல்வதற்கு பெரும் தொகை பரிசாக அறிவிக்கப்படுகிறது. குந்தவையை இந்த கொலைகார கும்பல்களிடம் இருந்து காப்பாற்றி அந்த வழக்கை அவர் வாதாட வைப்பதே ஜோஸ்வாவின் இலக்கும் படத்தின் கதையும்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். இந்த ஆக்ஷனை படமாக்கத் தேவையான வகையில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லாமல் ஒரு சாதாரணத்துக்கும் சுமாரான திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்.
ஜேம்ஸ் பாண்ட் படத்தைப்போல் நாயகனுக்கு காஸ்டியூம் எல்லாம் கொடுத்து சண்டைக் காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். யானிக் பென் வடிவமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் அதற்கேற்ற வகையில் ஸ்டெடி கேம் ஷாட்கள் இந்த காட்சிகளை இன்னும் மெருகேற்றுகின்றன. ஆனால் கதையும் திரைக்கதையும் இல்லாத இந்தப் படத்தை வெறும் ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் ஒளிப்பதிவாளரால் காப்பாற்ற முடியாமல் போகிறது.
ஆக்ஷன் காட்சிகளைத் தவிர்த்து வருணின் நடிப்பு சகித்துக்கொள்ளமுடியாத அளவிற்கு சுமாராக இருக்கிறது. ரொமான்ஸ் மற்றும் செண்டிமெண்ட்டான காட்சிகளில் அவருக்கு க்ளோஸ்-அப் வைத்தது தவறான முடிவு. கெளதம் மேனனின் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு உடல்மொழி இருக்கும் இல்லையா? அதை செய்துகாட்டுகிறேன் என்கிற பெயரில் ஜி.டி.ஏ அனிமேஷன் வீடியோ கேமில் வருவது போல் உடலை அசைத்துக்கொண்டே இருக்கிறார் வருண். குந்தவையாக நடித்திருக்கும் ராஹே செயற்கையான பாவனைகளால் பார்வையாளர்களை எரிச்சல்படுத்துகிறார்.
கார்த்திக்கின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் நேரத்தை கடத்த உதவுகின்றன. கெளரவ தோற்றத்தில் வரும் கிருஷ்ணா இன்னும் தன் பங்கிறகு கொஞ்ச நேரம் பேசிவிட்டு போகிறார். இந்தப் படத்திற்கு பின் இயக்குநர் கெளதம் மேனனுக்கு இருந்த அழுத்தமும் அதன் விளைவாக திரைக்கதையில் மெனக்கிடல் இன்மையும் வெளிப்படையாக தெரிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

