Haseen Dillruba Movie Review: டாப்ஸி நடிப்பில் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர்! - ஹசீன் தில்ரூபா படம் எப்படி இருக்கு?
முதல் காட்சியிலேயே கதை எப்படி நகரும் எனப் புரிந்துவிடும் அளவுக்கு அரதப் பழைய த்ரில்லர் ஜானரை உருவாக்கியிருக்கிறார் படத்தின் கதையை எழுதிய கணிகா தில்லான்.
Vinil Mathew
Aditya Srivastava, Taapsee Pannu, Vikrant Massey, Harshvardhan Rane
நெட்ஃபிளிக்ஸுக்கு இது மோசமான படங்களின் மாதம் எனச் சொல்லலாம். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகவும் எதிர்பார்த்த ’ஜகமே தந்திரம்’ கடைசியில் கதையின் சில பகுதிகளைத் தவிர ரசிகர்களை ஏமாற்றும் ரகமாக அமைந்திருந்தது. அந்த வரிசையில் தற்போது இந்தியில் டாப்ஸி நடிப்பில் வினில் மாத்தீயூ இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ’ஹசீன் தில்ரூபா’. ராஜேஷ் குமார் நாவல்களின் இந்தி திரையாக்கம் இந்தப் படம். திருமணம் உறவில் ஏற்படும் சிக்கல்களை த்ரில்லர் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் ஒன்று சிக்கலையாவது தீர்த்திருக்கலாம் அல்லது த்ரில்லரையாவது சரிவர நகர்த்தியிருக்கலாம் என்னும் ரகமாக இரண்டு ஜானரிலும் அரைகுறையாகக் கால்பதித்து நகர்கிறது திரைக்கதை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். கேம் ஓவர், தப்பட் என டாப்ஸியின் நடிப்புக்கு பல சோறு பதத்தைப் பார்த்தாகிவிட்டது . ராணி எனும் கதாப்பாத்திரமாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ராணியின் கணவர் ரிஷூவாக விக்ராந்த் மாஸே. பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என குடும்பம் நடத்துவதற்காக முன்னதாகவே வீட்டில் பர்னிச்சர்களை வாங்கிவைத்து திருமணம் செய்துகொள்ளப் பெண்ணுக்காகக் காத்திருக்கும் நம்மூர் மிடில் கிளாஸ் மாப்பிள்ளை ரக கேரக்டர் . இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.கணவன் கொலை செய்யப்படுகிறான். மனைவியின் திருமணம் கடந்த உறவுதான் அதற்குக் காரணம் என நகர்கிறது கதை.
கதையின் தொடக்கத்தில் கொள்ளை கொள்ளையாக வரும் கேரக்டர்கள் படம் இறுதி நோக்கி நகர நகர காணாமல் போகிறார்கள். த்ரில்லர் வகையறா ரசிகர்களுக்கு படத்தின் தொடக்கத்தில் கணவனின் வெடித்துச் சிதறிய கை காண்பிக்கப்படும் காட்சியிலேயே கதை எப்படி நகரும் எனப் புரிந்துவிடும் அளவுக்கு அரதப் பழைய த்ரில்லர் ஜானரை உருவாக்கியிருக்கிறார் படத்தின் கதையை எழுதிய கணிகா தில்லான். இதில் ’த்ரிஷ்யம்’ படத்தின் நெடி வேறு படத்தில் ஆங்காங்கே வீசுகிறது.
த்ரில்லர்களுக்கே உரித்தான பாப்-அப் கலர்களில் படத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயகிருஷ்ண கும்மாடி. அவருக்கு ஒரு அப்ளாஸ். பாடல்கள் இசை அமித் திரிவேதி, சட்டென மனதில் நிற்கும் ரகங்களாப் பாடல்கள் இல்லாதது ஏமாற்றம்.
திருமணம் கடந்த உறவைக் கொலைபாதகமாகப் பார்ப்பவர்களுக்கிடையே போலீஸ் மற்றும் உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வித அலட்டலும் இல்லாமல் அசால்ட்டாக ராணி கதாப்பாத்திரம் பதில் சொல்லும் இடத்தில் மட்டும் படம் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறது. மற்றபடி தன்னை டார்ச்சர் செய்வது, கொலை செய்வது வரை முயற்சிக்கும் டாக்சிக் கணவனை விடாப்பிடியாகத் துரத்தி நேசிக்கும் ’கல்லானாலும் கணவன்...’ ரகக் கேரக்டர்களை எல்லாம் இந்த ஜெனரேஷன் பெண்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது கதையை எழுதுவதற்கு முன்பு சக பெண்ணாகக் கனிகா தில்லான் யோசித்திருக்கலாம். தினேஷ் பண்டிட் எனும் கற்பனை எழுத்தாளர் கதாபாத்திரத்தை உருவாக்கக் கொடுத்த முக்கியத்துவத்தை இதற்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம் குடும்ப வன்முறையை நியாயப்படுத்தி கமர்ஷியல் திரைப்படங்கள் எடுப்பதை நாம் எப்போது நிறுத்தப்போகிறோம்?