Rebel Movie Review: புரட்சியா இல்லை சோதனையா.. ஜி.வி.பிரகாஷ் - மமிதா பைஜூ நடித்துள்ள ரெபல் படத்தின் விமர்சனம்!
Rebel Movie Review in Tamil: ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள ரெபல் படத்தின் விமர்சனம் இதோ!
Nikesh
G.V.Prakash, Mamitha Baiiju, karunaas, Adithya Bhaskar
Theatrical Release
ஜி.வி.பிரகாஷ், மமிதா பைஜூ நடித்துள்ள ரெபல் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. நிகேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ரெபல் (Rebel Movie) படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ரெபல்
சுதந்திரத்திற்குப் பிறகு தென் மாவட்டங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. பல வித போராட்டத்திற்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த மூணார் கேரளாவுடன் இணைக்கப்பட்டது. இந்த மூணாரின் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தமிழர்களில் ஒருவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன் கதிரேசன் (ஜி.வி.பிரகாஷ்). எப்படியாவது படித்து நல்ல வேலைக்குச் சென்றுவிட்டால் தங்களது நிலை மாறிவிடும் என்கிற ஆசையில் பாலக்காட்டு சித்தூர் கல்லூரியில் தனது நண்பனுடன் செல்கிறார் கதிரேசன்.
எஸ்.எஃப்.ஒய் மற்றும் கே.எஸ்.ஜி என இரு வேறு கட்சிகளாக மாணவர்கள் கல்லூரியில் பிரிந்து இருக்கிறார்கள். இவர்களில் இரு தரப்பினராலும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள் தமிழர்கள். தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் அடையாளமும் இல்லாமல் இருக்கும் தமிழ் மாணவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அடிதடியில் இறங்குகிறார்கள். தமிழர்களாக தங்களது அடையாளத்திற்காக நடத்தும் இந்தப் போராட்டத்தில் அவர்கள் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பதே ரெபல் படத்தின் கதை.
விமர்சனம்
அதிகாரம், அதை எதிர்த்துப் போராடும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படமாக எடுக்கப்பட்டிருக்கும் ரெபல் படம் அதே வழக்கமான தேய்ந்துபோன திரைமொழியை கையாள்கிறது. நாயகன் அறிமுகத்தில் இருந்து பில்டப் காதல் காட்சிகள் என எல்லாமே மிகைப்படுத்தப்பட்டு இரைச்சலான இசையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
யூகிக்கக் கூடிய திரைக்கதையும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளும் படத்தின் நீளம் என எல்லாம் சேர்ந்து பார்வையாளர்களை செல்ஃபோன்களை பார்க்கத் தூண்டுகின்றன. கருணாஸ், ஆதித்யா பாஸ்கர் போன்ற துணைக் கதாபாத்திரங்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தத் தவறி விடுகிறார்கள். ராம் பிரசாதின் ஒளிப்பதிவு மிக எதார்த்தமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒளிப்பதிவை தாங்கிச் செல்ல வேண்டிய படத்தொகுப்பு அதை இன்னும் கெடுக்கவே செய்கிறது. பிளாஷ்பேக் என்று திரும்பி திரும்பி வரும் ஒரே காட்சிகள்.
ஸ்லோ மோஷன் சரியான விதத்தில் பயன்படுத்தப்படாமல் ஒவ்வொரு காட்சியும் ஜவ்வு மிட்டாய் போல் இழுக்கப்பட்டு இரண்டரை மணி நேரப் படம் 4 மணிநேரப் படமாக தோன்றுகிறது. மலையாளத்தில் அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்த மமிதா பைஜூ தமிழில் அறிமுகமாகிய முதல் படத்திலேயே வெறும் செட் ப்ராபர்டி போல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் நடிப்பு சாதாரணத்திற்கும் சுமாராக இருக்கிறது. மலையாளிகளுக்கும் தமிழர்களும் இடையில் மோதல்கள் இருக்கதான் செய்கின்றன. ஆனால் இப்படியான கதையை கமர்ஷியல் படத்தில் நாயக பிம்பத்தில் பொருத்தும்போது மலையாளிகளையும் வில்லன்களாக சித்தரிக்கும் பிம்பமே ஏற்படுகிறது. ரெபல் படம் தேவையற்ற ஒரு புரட்சியுணர்வை வலிந்து திணிக்க முற்படுகிறது.