Driver Jamuna Review: ட்ரைவர் ஜமுனா த்ரில் ரேஸில் ஜெயித்ததா? விறுவிறு விமர்சனம் இங்கே..
Driver Jamuna Review in Tamil: த்ரில்லர் திரைப்படம் என்ற டேக்லைனில் வெளிவந்த டிரைவர் ஜமுனா திரைப்படம் அதை பூர்த்தி செய்ததா என்பதை காண்போம்.
Kinslin
Aishwarya Rajesh, Aadukalam Naren, Sri ranjani
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகைக் கார் ஓட்டுநராக நடித்துள்ள த்ரில்லர் வகை திரைப்படம் டிரைவர் ஜமுனா. 2013 ஆம் வெளிவந்த வத்திக்குச்சி திரைப்படத்தின் இயக்குநர் கின்ச்ளின் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, ரஞ்சனி, அபிஷேக் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி.சௌத்ரி இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.ஜிப்ரான் இசையில், கோகுல் பினாய் ஒளிப்பதிவில் டிரைவர் ஜமுனா உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் டிசம்பர் 30 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கதையின் கரு:
கால் டாக்ஸி டிரைவரான ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை கொலை செய்யப்படுகிறார். தந்தையின் இறப்பிற்குப் பிறகு, தந்தை ஓட்டிக் கொண்டிருந்த கால்டாக்சி டிரைவராக மாறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு அரசியல் தலைவரை கொலை செய்யும் நோக்கில் புறப்படும் கூலிப்படைகளிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் சிக்கிக் கொள்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடமிருந்து தப்பித்தாரா ?அந்த கூலிப்படை அரசியல் தலைவரை கொன்றதா ? ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பதே டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் கதை. த்ரில்லர் திரைப்படம் என்ற டேக்லைனில் வெளிவந்த டிரைவர் ஜமுனா திரைப்படம் அதை பூர்த்தி செய்ததா என்பதை காண்போம்.
விமர்சனம்:
வத்திக்குச்சி திரைப்படத்தின் இயக்குனர் கின்சிளின் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. வத்திக்குச்சி திரைப்படத்திலும் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தார். தற்போது பெண் கால் டாக்ஸி ஓட்டுநரை மையப்படுத்தி, வாரிசு அரசியல் குறித்து 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தில் பேசியுள்ளார் இயக்குநர் கின்சிளின்.
படத்தில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சமில்லை. முதல் பாதி சற்று மந்தமாகவும் இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பாகவும் சென்றது. பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதாநாயகிகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். தந்தையை இழந்த ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மூத்த மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் கால்டாக்ஸியிலேயே இடம் பெற்றதால், கார் ஓட்டிக் கொண்டே வில்லன்களை சமாளிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விரைவாக கார் ஓட்டும் காட்சிகளில் கதையின் நாயகி என்பதை நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
படத்தில் த்ரில்லர் எங்கே என முதல் பாதி கேள்வி எழுப்பினாலும், இரண்டாம் பாதியில் படத்தின் முடிச்சுகளை அவிழ்த்துள்ளார் இயக்குநர். சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு படத்தில் த்ரில்லிங் இடம்பெறவில்லை. ஜிப்ரானின் இசை படத்திற்கு பக்கபலம். படத்தின் குறைவான ரன்டைம் புத்திசாலித்தனமான முடிவு. நெடுஞ்சாலை மற்றும் கார் பயணம் இதனை சுற்றியே நகர்ந்த ஒட்டுமொத்த கதையை கோகுல் பினாய் சிறப்பாக கையாண்டுள்ளார்.
ஆடுகளம் நரேன் தந்திரமிக்க அரசியல் தலைவராக நடிப்பில் அசத்தியுள்ளார். கூலிப்படை கொலைகாரனாக நடிப்பில் பட்டையை கிளப்பிவிட்டார்.
ஸ்டேன்டப் காமெடியன் அபிஷேக் குமார் நடிப்பு நேர்த்தி. நோய்வாய்ப்பட்ட தாயாக ஸ்ரீ ரஞ்சனியும், நேர்மையான தந்தையாக பாண்டியனும் சில காட்சிகளில் இடம் பெற்றிருந்தாலும் தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.
வாரிசு அரசியலின் ஆதிக்கம், அரசியல்வாதிகளின் தந்திரம் என அரசியலில் உள்ள நுணுக்கங்களையும் இத்திரைப்படம் பேசியுள்ளது. பெண்ணியம், அரசியல் சூழ்ச்சி, குடும்ப பாசம், கர்மா என பல விஷயங்களை ஒருங்குபடுத்த பேசியுள்ளது இந்த திரைப்படம்.
"வாழ்க்கையோட இன்பம் பணம், பதவி, புகழ்ல இல்ல…அன்பு தான் எல்லாமே" என்ற கருத்தை பதிவு செய்துள்ளது டிரைவர் ஜமுனா.
ஆக மொத்தம், தந்தையை கொன்றவர்களை பழிவாங்க மகள் செய்யும் சூழ்ச்சியே டிரைவர் ஜமுனா.