Annabelle Sethupathy | `அனபெல் சேதுபதி’ : சிரிக்க வைக்கிறதா இந்த ஃபேண்டஸி காமெடி?
ராஜா பார்த்துப் பார்த்துக் கட்டிய அரண்மனையைக் காட்டி, படத்தைத் தொடங்குகிறார்கள்.கதையும் அப்படி இருக்குமோ என்று நினைத்தால், நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. எப்படி இருக்கிறது `அனபெல் சேதுபதி’?
தீபக் சுந்தரராஜன்
டாப்சி பன்னு, விஜய் சேதுபதி, யோகி பாபு, ராதிகா, ஜகபதி பாபு, ஜார்ஜ் மரியான், சுப்பு பஞ்சு, சேத்தன், பிரியதர்ஷினி, மதுமிதா
`ஒரு ஊர்ல ஒரு நல்ல ராஜா இருந்தாராம்.. அவரோட காதல் மனைவிக்காக பார்த்துப் பார்த்து, பெரிய அரண்மனை கட்டினாராம்.. அந்த அரண்மனை மேல ஆசைப்பட்ட கெட்ட ராஜா அதை அடையுறதுக்காக திட்டம் போட்டாராம்.. ராஜாவையும், அவரோட மனைவியையும் கொலை பண்ணி, அந்த அரண்மனையை அவரோடது ஆக்கிட்டாராம். ஆனா அவரும் அவரோட குடும்பமும் அரண்மனைல ரொம்ப நாள் வாழ முடியாம, சீக்கிரமா செத்துப் போயிட்டாங்களாம்.. அவங்களோட ஆவிகள் இன்னும் சாந்தியடையாம அந்த அரண்மனைலயே சுத்தி சுத்தி வருதாம்’ என்ற குழந்தைகளுக்குச் சொல்லும் பேய்க் கதையாக, இல்லை இல்லை.. ஃபேண்டஸி காமெடி கதையாக உருவாகியிருக்கிறது `அனபெல் சேதுபதி’.
ராஜா பார்த்துப் பார்த்துக் கட்டிய அரண்மனையை நமக்கு அறிமுகப்படுத்தி படத்தைத் தொடங்குகிறார்கள். அவ்வளவு அழகான அரண்மனையாக இருக்கிறதே, கதையும் அப்படி இருக்குமோ என்று நினைத்தால், நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.
குடும்பத்தோடு திருட்டுத் தொழிலில் ஈடுபடும் ருத்ரா (டாப்சி பன்னு) காவல்துறை அதிகாரி (லிங்கா) ஒருவரால் அரண்மனையை சுத்தம் செய்யும் பணிக்கு அனுப்பப்படுகிறார். சில தலைமுறைகளுக்கு முன், அந்த அரண்மனையைச் சொந்தமாக்கிய அந்தக் காவல்துறை அதிகாரியின் தாத்தா (சுரேஷ் சந்திர மேனன்) அங்கு பேய்கள் இருப்பதாகவும், ருத்ராவின் குடும்பத்தின் நிலை என்னவாகிறது என்று பார்த்துவிட்டு, அரண்மனைக்குள் மீண்டும் நுழையலாம் எனவும் திட்டமிடுகிறார். அரண்மனைக்குள் யோகி பாபு, சேத்தன், தேவதர்ஷினி, ஜார்ஜ் மரியன், சுப்பு பஞ்சு, மதுமிதா எனப் பேய்களின் பட்டாளமே இருக்கிறது. அந்தப் பேய்களோடு அந்த அரண்மனையை அபகரிக்கத்த கதிரேசன் (ஜகபதி பாபு) பேயாக இருக்கிறார். சமையல்காரப் பேயான சண்முகம் (யோகி பாபு) சமைத்ததைச் சாப்பிடுபவர்கள் அங்கு பேயாக உலா வருவார்கள் எனக் கூறப்படுகிறது. எனினும், அந்த வித்தை ருத்ராவிடம் பலிக்கவில்லை. ஆனால் ருத்ராவின் கண்களுக்கு மட்டும் பேய்கள் தென்படுகின்றன. திருடர்களான ருத்ராவின் குடும்பம் அந்த அரண்மனையைச் சொந்தமாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டம் பலித்ததா, பேய்கள் என்ன ஆனார்கள், ஜகபதி பாபு என்ன ஆனார் என்பது மீதிக் கதை.
ஒரு காட்சியில் யோகி பாபு டாப்சியிடம், `புதுசா எவன்மா கதை சொல்றான்? பழைய கதையை உல்டா பண்ணி கதை பண்றாங்க’ என்று சொல்கிறார். நாம் ஏற்கனவே பார்த்த `அரண்மனை’ படங்கள், `அருந்ததி’, `சந்திரமுகி’, `முனி’ முதலான படங்கள், `அனபெல்’ என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்பும், டாப்சியின் திருமண உடை அலங்காரமும் எனப் பலவற்றின் சாயல் இதில் இருக்கிறது. அறிமுக இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்குநர் ஏ.எல்.விஜயிடம் அசிஸ்டண்டாகப் பணியாற்றியதால், அவரது `துரையம்மா’ கதாபாத்திரத்தை கேமராவோடு கடன் வாங்கி, இதில் அனபெல்லாக மாற்றியிருக்கிறார்.
ஆங்கிலத்தின் கிளாசிக் திரைப்படமான Sunset Boulevard படத்தில் வரும் அரண்மனையைப் போலவே இருக்கிறது `அனபெல் சேதுபதி’ காட்டியிருக்கும் அரண்மனை. தொடக்க காட்சியில் எழும் சர்ப்ரைஸ் படம் முழுவதும் மிஸ்ஸிங். படம் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் கழித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்த 35 நிமிடங்கள் டாப்சியைக் காதலிக்கிறார். பிறகு காணாமல் போய்விடுகிறார். இது பேய்ப் படமா, மறுஜென்மம் பற்றிய படமா, பழிவாங்கல் படமா என நாம் குழம்ப வேண்டியதாக இருக்கிறது. பேய்களும் நம்மை பயமுறுத்தவில்லை; மறுஜென்மம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இறுதியில் யாரும் யாரையும் பழிவாங்கவும் இல்லை. மொத்தமாக வெறும் காமெடியையும், அழகான அரண்மனை ப்ராபர்டியையும் வைத்து திரைக்கதையை நகர்த்த முயன்றிருக்கிறது படக்குழு.
தீபக் சுந்தரராஜன் திரைக்கதையிலும், இயக்கத்திலும் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். `மாஸ்டர் செஃப்’ படப்பிடிப்பில் இருந்தவரை வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தது போல தலைகாட்டுகிறார் விஜய் சேதுபதி. மனைவியோடு வாள் சண்டையில் இருப்பவரைத் தாக்க அடியாள்கள் வரும் போது, `விருந்து வெச்சிட்டு வர்றேன்’ என்று சொல்லும் ஹீரோயிச வீர சேதுபதி ராஜா, தான் உயிருக்கும் மேலாக நேசிக்கும் காதலி இறக்கும் போது, `அவனும் மனுஷன் தானே’ என்று யூட்யூப் பேட்டிகளில் வரும் விஜய் சேதுபதி ஆகிவிடுகிறார். `முல்க்’, ‘பத்லா’, ‘மன்மர்ஸியான்’, ‘கேம் ஓவர்’, ‘தப்பட்’ ’ஹசீன் தில்ரூபா’ என வரிசையாக நல்ல படங்களாக நடித்துக் கொண்டிருந்த டாப்சி அனபெல்லாகவும், ருத்ராவாகவும் இதில் நடித்திருக்கிறார். கதை முழுவதும் அவர் நடித்திருந்தாலும், அனபெல்லாக வரும் பகுதிகள் மட்டுமே அழகாக இருக்கின்றன. யோகி பாபுவின் டைமிங் காமெடி மட்டுமே படத்தில் ப்ளஸாக இருக்கிறது.
கௌதம் ஜார்ஜின் கேமரா மாயாஜாலம் சில இடங்களில் அரண்மனையின் அழகைக் காட்டுகிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் காமெடி என்ற பெயரில் பேய்கள் செய்யும் அராஜகத்தை வெட்டியிருக்கலாம். வீர சேதுபதி வரும் போர்ஷன்களில் கிருஷ்ணா கிஷோரின் இசையை அனுபவிக்க முடிகிறது. முக்கியமாக, விஜய் சேதுபதியும், டாப்சியும் வாள் சண்டை வீசும் காட்சி. மற்ற இடங்களில், சுமார் இசை தான்.
`அனபெல் சேதுபதி’ அரண்மனையில் வாழும் பேய்கள் சுமார் 70 ஆண்டுகளாக அங்கு சிக்கிக் கொண்டு, மோட்சத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என்று காட்டப்படுகிறது. படம் தொடங்கிய சில நிமிடங்களில், நாமும் அவர்களோடு காத்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது. அவர்களையும், நம்மையும் காப்பாற்றுவது யோகி பாபுவின் காமெடி மட்டுமே!