OMG 2: செக்ஸ் எடுகேஷன் சொல்லித்தரும் சிவன்...! எப்படி இருக்கிறது அக்ஷய் குமாரின் ஓ.எம்.ஜி 2 - முழு விமர்சனம்
பள்ளிகளில் பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை பேசுகிறது அக்ஷய் குமார் நடிப்பில் பங்கஜ் திரிபாதி ஓ.எம்.ஜி 2
![akshay kumar starrer omg 2 movie review OMG 2: செக்ஸ் எடுகேஷன் சொல்லித்தரும் சிவன்...! எப்படி இருக்கிறது அக்ஷய் குமாரின் ஓ.எம்.ஜி 2 - முழு விமர்சனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/14/63ba7cc3c8db6d967c4868a1f00d99af1692006239807572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
AMITH RAI
AKSHAY KUMAR, PANKAJ TRIPATHI
அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி, யாமி கெளதம் நடித்து வெளியாகி இருக்கிறது ஓ.எம். ஜி 2 படம் . அமித் ராய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை விபுல் டி.ஷா, ராஜேஷ் பெஹல், அஷ்வின் வர்தே உள்ளிடவர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்த்துவதன் நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது ஓ.எம்.ஜி 2. அதை ஒரு படமாக சிறப்பாக செய்திருக்கிறாரா என்பதைப் பார்க்கலாம்.
கதைச்சுருக்கம்
மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் மகாகாலீஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் கடைவைத்திருப்பவர் காந்தி ஷரன் என்கிற சிவபக்தர். அவரது மகன் விவேக் திடீரென்று மருத்துவமனையில் இருப்பதாக கேள்விபடுகிறார். மருத்துவமனையில் அவரது மகன் மூன்று வையகரா மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கிறார் மருத்துவர். பள்ளியில் சக மாணவர்கள் அவனது ஆண்மையைப் பற்றி கட்டியெழுப்பிய தவறான புரிதல்களால் குழப்பமடைகிறான். தனது குழப்பங்களை ஆசிரியர்கள்வரை கேட்டுத் தெரிந்துகொள்ள அவன் முயற்சி செய்தும் அவனை சமாதானப் படுத்தும் எந்த பதிலும் அவனுக்கு கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் இந்த முடிவிற்கு வந்திருக்கிறான் அவன். அதே நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் சுய இன்பம் செய்த வீடியோ ஒன்றையும் பரப்பப்படுகிறது. இதனால் அவனை அவமானப்படுத்தி பள்ளியில் இருந்து நீக்குகிறது பள்ளி நிர்வாகம். மனவுளைச்சலுக்கு உள்ளாகும் அந்த சிறுவன் தற்கொலை வரை முயற்சிக்கிறான். தனது மகனின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிதைந்து போகப்போவதை நினைத்து கடவுளிடம் உதவுமாறு மன்றாடுகிறார் கதாநாயகர்.
மனித உருவத்தில் கடவுள்
மனித அவதாரத்தில் தோன்றும் சிவன் காந்தி (அக்ஷய் குமார்) தனது மகனின் சார்பாக பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து வாதிட வைக்கிறார் சிவன். அவரை எதிர்த்து பள்ளி சார்பாக வாதிடுகிறார் காமினி (யாமி கெளதம்) அறிவை வளர்க்கும் கல்வி காமம் என்கிற ஒன்றைப் பற்றிய சரியான புரிதலை உருவாக்க தவறுவதால் ஒரு ஒட்டுமொத்த தலைமுறைக்கும் காமம் சார்ந்து எத்தனை தவறான பிம்பங்களை நம்பத் தொடங்குகிறார்கள். காமத்தைப் பற்றி கட்டமைத்திருக்கப் பட்டிருக்கும் பிம்பங்களால் யார் லாபமடைகிறார்கள் என்கிற விவாதத்தை மிக வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் அனுகியிருக்கிறது ஓ.எம்.ஜி 2. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தினால் இன்றையத் தலைமுறையினர் தங்களது உடலைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்திற்காக குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதையும் சுட்டிக்காட்டப் படுகிறது
ரொம்ப மெசேஜ் சொல்கிறார்களா
மிகத் தீவிரமான ஒரு கதைக்களம் என்றாலும் அதை மிக நகைச்சுவையான வழியில் கொண்டு சென்றிருப்பது படம் கருத்தூசி போடும்போது நமக்கு வலி தெரிவதில்லை. மேலும் தனது மகன் சார்பாக வாதிடும் தந்தை நீதிமன்றங்களில் ஒவ்வொரு முறையும் புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்துவது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
எல்லாம் சரி சிவனுக்கு என்ன வேலை
மேல் குறிப்பிட்ட கதையை கடவுள் இல்லாமலும் எடுத்திருக்க முடியும் இல்லையா. அந்த அளவிற்கு தான் சிவனாக வரும் அக்ஷய் குமாரின் கதாபாத்திரம் இருக்கிறது. அவ்வப்போது சாம்பலை உடம்பில் பூசிக்கொண்டு தாண்டவமாடுவது, ஒரு குழப்பத்தில் கதாநாயகன் இருக்கும்போது ஒரு புதிர் போட்டு அவருக்கு உதவி செய்வது மட்டுமே அவரது வேலை.
அவ்ளோ நல்லாவா இருக்கு
ஒரு சாதாரண தந்தை தனது மகனுக்காக அதிகார பலம் இருப்பவர்களிடம் போராடும் உணர்வுப்பூர்வமான கதை என்றாலும் கடவுளை தன் பக்கம் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் என்று பார்க்கும் போது நமக்கு சில காட்சிகளில் இருந்திருக்க வேண்டிய பதற்றமும் விறுவிறுப்பும் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது. அதே நேரத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தபோதும் சிவன் கொடுக்கும் புதிர்களில் இருந்து சட்டென்று பல்பு எறிந்தது போல் அடுத்த காட்சியில் நாயகன் ஸ்கோர் செய்வதுமாக இருப்பது ஏற்கனவே யூகிக்க முடிந்த கதையை இன்னும் சுலபமாக யூகிக்கக் கூடியதாக மாற்றிவிடுகிறது.
சொன்னதெல்லாம் நம்பலாமா
சில இடங்களில் படம் முன்வைக்கும் கருத்துக்களை பார்வையாளர்கள் ஒருமுறை சிந்திக்க வேண்டியதாகவும் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய மெக்கலே கல்வி முறையை முற்றிலுமாக நிராகரித்து பாரம்பரிய குருகுல கல்வியை ஆதரித்து முன் நிறுத்துகிறது படம். அதே நேரத்தில் மாணவர்களுக்கு பாலியல் கல்வியை சொல்லிக்கொடுக்க ஒரு சிறந்த வழிமுறையாக இந்து மத புராணங்களையும் காமசூத்திரத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்த பரிந்துரைக்கிறது. விவாதத்திற்குரிய இந்த இடங்கள் படங்களில் இருக்கத்தான் செய்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)