Ganesh Chaturthi 2022 : இந்த விநாயகர் சதுர்த்திக்கு ரெசிப்பியும் புதுசு.. வைரலாகும் குல்கந்த் கொழுக்கட்டை ரெசிப்பி..
விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் இந்த கொழுக்கட்டையும் ஒன்றாகும். அதனால் அவர் 'மோதகப்பிரியர்' என்று அழைக்கப்படுகிறார்.
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் இந்துக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது சிவனின் மைந்தன் யானை முகம் கொண்ட கணபதியை போற்றி நடத்தப்படும் ஒரு திருவிழாவாகும். கணபதி என்பவர் ஓம்கார தத்துவத்தின் அடிப்படையை உலகுக்கு உணர்த்துபவர் என்றும் இந்து மக்களால் நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட கணபதி ஆனவர் எளிய மக்களின் கடவுளாக பார்க்கப்படுகிறார்.
விநாயகர் சதுர்த்தி இது விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் குறிக்கிறது, மற்றும் இந்தியா முழுவதும் மற்றும் முக்கியமாக மகாராஷ்டிராவில் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இது ஆகஸ்ட் 31, 2022 அன்று கொண்டாடப்படும்.
மற்ற இந்தியப் பண்டிகைகளைப் போலவே, இந்த கொண்டாட்டங்களின் போது இனிப்பு பலகாரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் அவருக்குப் மோதகம் செய்து படைக்கிறார்கள் . ஏராளமான உணவுகள் மற்றும் இனிப்புகள் தயாரிக்கப்படும் போது, 'மோதகம்', பாலாடை போன்ற இனிப்பு படையல்கள் வழிபாட்டில் முன்னிலை பெறுகிறது. விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் இந்த மோதகமும் ஒன்றாகும். அதனால் அவர் 'மோதகப்பிரியர்' என்று அழைக்கப்படுகிறார்.
இவருக்கு நீங்கள் மிகப்பெரிய மலைகளை விலை கொடுத்து வாங்கி வந்து போட வேண்டும் என்று விரும்ப மாட்டார் என நம்பப்படுகிறது. நிலங்களில் கிடைக்கும் வெள்ளெருக்கில் மாலையை செய்து சாத்தினால் கூட அவர் அதை ஏற்றுக் கொள்வார். இதைப் போலவே வீதிகள் எங்கும் ஓரமாகக் கிடக்கும் அருகம்புல்லை எடுத்து அவருக்கு அணிவித்தாலும் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார். இப்படியாக எளிமையின் கடவுளாக விளங்கும் விநாயகருக்கு படைக்கப்படும் நெய்வேத்தியங்கள் கூட எளிமையாக இருக்கும் படியே அவர் விரும்புகிறார் என நம்பப்படுகிறது
ஆம் மிக எளிதாக செய்யக்கூடிய சுண்டல் கொழுக்கட்டை,மோதகம்,அவல் மற்றும் பொரிகடலை என எளிமையின் சின்னமாக விளங்குகிறார். இதில் மோதகத்தை விநாயகர் நிரம்ப விரும்புகிறார் என்ற ஒரு நம்பிக்கையும் பக்தர்களிடத்தில் இருக்கிறது. கொழுக்கட்டை இந்தியா முழுவதும் ஒவ்வொரு விதத்தில் செய்யப்படுகிறது.தென்னிந்தியாவை பொருத்தவரை அதிலும் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை பச்சரிசி மாவினை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கொழுக்கட்டை எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை நாம் இப்போது தெரிந்து கொள்வோம்:
இதற்கு நீங்கள் பச்சரிசியை நன்றாக அரைத்து கெட்டியான மாவாக செய்து கொள்ள வேண்டும். பின்னர் பச்சைப் பயிரை அவித்து எடுத்துக்கொண்டு,அதனுடன் பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். இதில் முந்திரிப் பயிரையோ அல்லது வறுத்த வேர்க்கடலையோ சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு அரிசி மாவை சிறு உருண்டையாக எடுத்து.அதை வட்டமாக தட்டையாக தட்டி கொள்ள வேண்டும். மோதகம் செய்வதற்கான அச்சினை எடுத்து,வட்டமாக தட்டிய அந்த அரிசி மாவை அதில் வைத்து, அரிசிமாவிற்கு உள்ளாக, பச்சை பயிறு மற்றும் வெள்ளம் கலந்து தயாரித்து வைத்திருக்கும் அந்த களியை,சிறிது இதன் மத்தியில் வைத்து மோதக அச்சினை மூடி அழுத்தி எடுத்தால்,அழகான விளிம்புகளுடன் கூடிய மோதகம் தயாராகிவிடும். இதை இட்லி கொப்பறையில் இட்லியை அவிப்பது போன்று அவிழ்த்து எடுத்தால், சுவையான மோதகம் தயாராகிவிடும். இப்படி தயாரிக்கப்படும் மோதகத்தில் உள்ளே வைப்பதற்கு,பாசிப் பருப்பு, பனைவெல்லத்தை பயன்படுத்துவதைப் போல,தேங்காய் துருவல்,பனைவெல்லம் மற்றும் வேர்க்கடலை கலவையையும் அனேக இடங்களில் பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த மோதகம் வட இந்தியாவில் வேறு விதமாக தயாரிக்கப்படுகிறது அது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்:
1 கிலோ முந்திரி பருப்பு,800 கிராம் சர்க்கரை,250 கிராம் பிஸ்தா மற்றும் குல்கந்த்50 கிராம். முந்திரி பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். தண்ணீரை நீக்கி கெட்டியாக மாவு போல அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, சர்க்கரை சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும். பிறகு கேஸை ஆன் செய்து 45 நிமிடம் மெதுவான தீயில் கிளறவும். இப்போது மோதகத்திற்கான மேல்புற மாவு தயாராகிவிட்டது. மோதகத்தின் உள்ளே வைப்பதற்காக பிஸ்தா மற்றும் குல்கந்தை சேர்த்து சிறு உருண்டைகளாக்கவும். நீங்கள் தயாரித்த முந்திரி மாவை வட்டமாக தட்டி எடுத்து மோதக அச்சில் வைத்து பிஸ்தா மற்றும் குல்கந்து கலந்த கலவையை சிறு உருண்டைகளாக, இந்த மாவின் மீது வைத்து அச்சை, ஒரு அழுத்து அழுத்தி எடுத்தால் விநாயகருக்கு படைப்பதற்கான குல்கந்த் கொழுக்கட்டை தயாராகிவிடும்.