(Source: ECI/ABP News/ABP Majha)
Hair Fall Solution: மழைக்காலத்தில் முடி உதிர்வு பிரச்சனையா? இந்த மசாலா பொருட்கள் உதவலாம்..
மழைக்காலத்தில் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய எந்த மாதிரியான மசாலாப்பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
மழைக்காலங்களில் நம்மில் பலர் முடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறோம். முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்ய உணவு முக்கிய பங்கை வகிக்கிறது. முடி உதிர்தலை சரி செய்ய நம்மில் பலர் விலை உயர்ந்து ஷாம்புகளையும் எண்ணெய்களையும் பயன்படுத்துகிறோம். சிலருக்கு இதனால் மன அழுத்தம் கூட ஏற்படுகிறது.
உணவில் ஒரு சில பொருட்களை சேர்த்துக் கொண்டாலே இந்த முடி உதிர்தல் பிரச்சனை சரியாகி விடும் என சொல்லப்படுகின்றது. மசாலா மற்றும் மூலிகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது. இங்கே, அத்தகைய சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
மழைக்கால முடி பராமரிப்பு
1. கருப்பு மிளகு:
உங்கள் உணவிற்கு நல்ல சுவையை தருவதுடன், அடர்த்தியான, நீளமான, கருப்பு முடியைப் பெறவும் மிளகு உதவுகிறது. கருப்பு மிளகில் வைட்டமின் ஏ, சி, கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என சொல்லப்படுகிறது. நீங்கள் உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக் கொள்ளலாம். அல்லது ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மிளகுத்தூளை சேர்த்து பானமாக பருகலாம்.
2.எள்
எள் விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உச்சந்தலையில் இயற்கையான எண்ணெய் மற்றும் உங்கள் தலைமுடியின் பளபளப்பை மேம்படுத்த உதவுகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த ஓட்டம் மற்றும் உடல் முழுவதும் ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதை உட்கொள்வதால் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால் இதை மிதமாக உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, எள் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் சமநிலையை பாதிக்கலாம்.
3. சீரகம்
சீரகம் எடை இழப்பு, வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய மேலாண்மைக்கு சிறந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. , ஜீரகம் உங்கள் தலைமுடிக்கும் நல்லது. மசாலாவில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன மற்றும் வேர்களை வலுப்படுத்துகின்றன. மேலும் சீரகம் உச்சந்தலையில் இயற்கையான எண்ணெயைத் தடுக்கவும், ஈரப்பதத்தால் ஏற்படும் முடி உதிர்வதைக் குறைக்கவும் உதவுகிறது. டிடாக்ஸ் வாட்டர் வடிவில் இதை எப்போதும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
4. கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்தில் தைமோகுவினோன் உள்ளது. இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதற்கு உதவுவதாக கூறப்படுகிறது. மேலும் இது அதிகப்படியான முடி உதிர்தலை தடுக்கிறது. அடிக்கடி உங்கள் உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்து இதன் முழு பலன்களை அனுபவியுங்கள்.
5. இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே உள்ளிட்டவை நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைக்கவும், மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், முடி வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது. இலவங்கப்பட்டையை தண்ணீரில் ஊறவைத்து, மூலிகை தேநீராக அருந்தலாம்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீரியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.