Diwali 2022 : தங்கம், வெள்ளி நகைகள் பளிச்சிடணுமா? மத்தாப்பு தீபாவளி ஜொலிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பளிச்சென்று மாற்ற மெருகேற்றும் கடைகளுக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு நகைகளை பளிச்சிட வைக்கலாம்.
தீபாவளி என்றாலே, கொண்டாட்டங்களே நமது நெஞ்சில் நிறைந்திருக்கும். இதிலும் குழந்தைகள் என்றால்,புது துணி மற்றும் பட்டாசு என்பது அவர்களின் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளை பொருத்தவரை, பட்டாசு என்பதே அவர்களை மகிழ்விக்கும் ஒரு பொருளாக இருக்கும். பெண்களைப் பொறுத்தவரை புது துணிகள் மற்றும் நகைகள் அணிவது என்பது,அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.இப்படி தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, அணிவதற்காக வீட்டில் வைத்திருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்து,சுத்தம் செய்து,பளிச்சென்று மாற்றிக் கொள்ளுங்கள்,இதற்கு மெருகேற்றும் கடைகளுக்கு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு தங்க மற்றும் வெள்ளி நகைகளை பளிச்சிட வைக்கலாம்.
டூத் பேஸ்ட்:
டூத் பேஸ்ட் எனப்படும் பற்பசையானது,நம் பற்களை பளிச்சிட மட்டுமல்லாது,வேறு உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளி நகைகளை பளிச்சிட வைப்பதற்கு,இந்த டூத் பேஸ்ட் ஆனது பயன்படுகிறது. டூத் பேஸ்ட்டை சிறிது எடுத்து,உங்களுடைய வெள்ளி நகைகளில் முழுவதும் பூசி,பத்து நிமிடம் நன்றாக ஊர வைத்து, பின்னர் பயன்படுத்தாத பழைய டூத் பிரஷ்சை கொண்டு, நகையின் மேல் நன்றாக தேய்த்து எடுத்து, பின்னர் நீரில் கழுவி, நகைகளில் இருக்கும் தண்ணீரை அகற்ற, ஒரு துணியில் வைத்து நன்றாக துடைத்து எடுத்து பார்த்தீர்கள் என்றால், பிரகாசமான ஜொலிப்புடன் உங்களுடைய வெள்ளி நகைகள் நீங்கள் அணிந்து மகிழ்வதற்கு தயாராக இருக்கும்.
சமையலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பு:
உவர்ப்பு சுவையை உணவில் தருவதற்கு, இன்றியமையாத பொருளாக இருக்கும் உப்பு,சமையலுக்கு மட்டுமல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கும் பயன்படுத்தலாம். முதலில்,உங்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தேவைக்கு ஏற்றார்போல உப்பை சேர்த்து, சிறிது தண்ணீரை அதில் ஊற்றி சிறிது நேரம் ஊற விடுங்கள். பின்னர் பயன்படுத்தாத டூத் பிரஷ்சை கொண்டு,நகையின் மேல் நன்றாக தேய்த்து எடுக்க,உங்கள் தங்க மற்றும் வெள்ளி நகைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி பளிச்சிடும்.
குறிப்பு: வெள்ளி மற்றும் தங்க நகைகளில் கல் அல்லது முத்து பதிக்கப்பட்டிருந்தால், அந்த நகைகளை தண்ணீரில் முழுவதுமாக மூழ்கி இருக்கும்படி வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக உப்பில் சிறிது நீர் சேர்த்து,நன்றாக குழைத்து,அதை, நகைகளின் மேல் முழுவதுமாக பூசி தண்ணீரில் போடாமல் தனியாக ஊற வையுங்கள். இதிலும் கூட கல் பதிக்கப்பட்டு இருக்கும் நகையின் பக்கத்தை பூமியை நோக்கி இருக்கும் படியாக திருப்பி வையுங்கள். இதனால் தண்ணீர் ஆனது நகைகளுக்குள் இறங்குவது தவிர்க்கப்படும்.
துணிகள் துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் வாஷிங் பவுடர்:
துணிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு மட்டுமல்லாது,தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் உள்ள அழுக்குகளை நீக்கவும்,வாஷிங் பவுடரை நீங்கள் பயன்படுத்தலாம்.
முத்துக்கள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை நீரில் முழுவதும் போடாமல்,மேல் சொன்ன படி வாஷிங் பவுடரை நன்றாக குழைத்து,நகை முழுவதும் பூசி,கற்கள் இருக்கும் பகுதி பூமியை நோக்கி இருக்கும்படி வைத்து விடுங்கள். முத்துக்கள் மற்றும் கற்கள் இல்லாத, முழுவதும் வெள்ளியாலோ அல்லது தங்கத்தாலோ ஆன நகைகளை, ஒரு பாத்திரத்தில் போட்டு,அந்த பாத்திரத்தில் தேவையான அளவு சோப்புத்தூளை போட்டு நன்றாக சோப்பு தூள் கரையச் செய்து,ஒரு 20 நிமிடங்கள் கழித்து டூத் பிரஷை கொண்டு,அந்த நகைகளை மீது தேய்த்து எடுத்தீர்களேயானால், பளபளப்பான நகைகள் நீங்கள் அணிவதற்கு தயாராக இருக்கும்.
இவ்வாறு வீடுகளில் நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களைக் கொண்டு உங்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பளிச்சிட வையுங்கள்.