மேலும் அறிய

பயிரை மேயும் வேலிகள்? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பிஞ்சுகள்... தீர்வுகள் என்ன?

மாணவிகளுக்கு அவர்களின் ஆசிரியர்தான் ஹீரோ. விடலைகளின் அந்த ஈர்ப்பு, இனக்கவர்ச்சியை வயதில் மூத்த ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.

செய்தித்தாள்களைப் பிரித்தாலே போக்ஸோ செய்திகளுக்கு எனத் தனி இடம் ஒதுக்கும் அளவுக்கு பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

பாலியல் துன்புறுத்தலின் அதீதத்தைத் தாங்க முடியாமல் கோவை, கரூர் பள்ளி மாணவிகள் தற்கொலை, விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை, சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுமிக்குப் பாலியல் சீண்டல், சிவகாசி கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட திருச்சி அரசு உதவிபெறும் பள்ளி தாளாளர் கைது உள்ளிட்ட செய்திகளைக் கடந்த சில நாட்களில் நாம் கண்டிருக்கலாம், ஆனால் அவற்றை அனைவரும் வெறும் செய்திகளாகக் கடந்திருக்க முடியாது. 

இந்த செய்திகள் அனைத்தும் சமூகத்தில் பாலின வேறுபாடும் குழந்தைகள் மீதான அறநெறியற்ற செயல்பாடுகளும் பல்கிப் பெருகியுள்ளதையே காட்டுகின்றன. தங்களின் சொந்த வீடே ஏராளமான குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாறிவரும் சூழலில், பாடம் சொல்லித் தரும் பள்ளிகளில் பாதுகாப்பு தர வேண்டிய ஆசிரியர்களால் நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. ஆனால் இதற்கு ஆசிரியர்களை மட்டும் மொத்தமாய்க் குற்றம்சாட்டிவிட்டு, பொது சமூகம் கடந்து செல்ல முடியாது. 

வாழ்வில் சாதிக்க எத்தனையோ இலக்குகள் இருந்தும், இத்தகைய இடர்களால் தடம் மறந்து வீழும் பெண் குழந்தைகளுக்கு நாம் காட்டப்போகும் வழி என்ன? ஆலோசனை சொல்கிறார்கள் சிலர்.


பயிரை மேயும் வேலிகள்? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பிஞ்சுகள்... தீர்வுகள் என்ன?

தேவநேயன், குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் 

’’நாட்டில் பாலின சமத்துவம் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வின்படி தமிழ்நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் 900-க்கும் கீழ் குறைந்துள்ளது. வளர்ந்த மாநிலத்திலேயே உள்ள இந்த சூழல், மிகவும் ஆபத்தானது. 

நெருக்கமானவர்களால்தான் பாலியல் வன்முறை 

பொதுவாகப் பெண்கள் பிறக்கும் முன்பே கருக்கொலையை, பிறகு சிசுக்கொலையை எதிர்கொள்கின்றனர். அந்த ஆபத்து தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களால்தான் பாலியல் வன்முறை ஏற்படுகிறது. 2007-ம் ஆண்டு, 3-ல் 2 குழந்தைகள் வன்முறைக்கு ஆளானது ஆய்வில் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2012-ல் போக்ஸோ சட்டம் உருவாக்கப்பட்டது. அதில், 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரிக்கப்பட்டு, முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறை வேறாக உள்ளது.

தமிழகத்தில் 2020-ம் ஆண்டில் மொத்தம் 3,090 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவெனில், அந்த ஆண்டில் மார்ச் மாதத்துக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்கே செல்லவில்லை என்பதுதான். மாணவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்த சூழலில், இந்தக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் நிலையத்துக்கே வராமல், கட்டப் பஞ்சாயத்து மூலம் முடிக்கப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். இதன்மூலம் வீடுகளும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாததாக மாறியது தெரிய வந்துள்ளது. 

என்சிபிஆர் அறிக்கைப்படி 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. போக்ஸோ குற்றவாளிகளில் 20 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை அளிக்கப்படவில்லை. இதன்மூலம் வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, முடிக்கப்படாதது தெளிவாகிறது. இந்த வழக்குகளை யார் நடத்துவார்கள் என்ற தெளிவும் போக்ஸோ சட்டத்தில் இல்லை’’ என்கிறார். 

பிரச்சினைகளை முன்வைக்கும் தேவநேயன், அவற்றை முளையிலேயே கிள்ளவும், நடக்காமல் தடுக்கவும் என்ன செய்ய வேண்டும்? என்று சில முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார்.





பயிரை மேயும் வேலிகள்? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பிஞ்சுகள்... தீர்வுகள் என்ன?
குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன்

குழந்தைகளுக்கெனத் தனிப்பிரிவு காவல் நிலையங்கள் 

காவல் நிலையங்களில் சட்டம் - ஒழுங்கு, குற்றத் தடுப்பு, போக்குவரத்து, மகளிர் எனத் தனித்தனிப் பிரிவுகள் இருக்கும்போது, நாட்டில் 45% இருக்கும் குழந்தைகளுக்கு எனத் தனிப் பிரிவு தொடங்கப்பட வேண்டும். அதில், குழந்தை நலக் காவலர்கள் குழு பிரத்யேகமாக நியமிக்கப்பட்டு, வழக்குகளை விசாரிக்க வேண்டும்.  

குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தபிறகு, அதை விசாரித்தால் போதும் என்று நினைக்காமல், அத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 

கிராமங்களில் குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் 

2020 செப்டம்பர் அரசாணையின்படி, கிராமங்களில் குழந்தை பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும். அதன் தலைவராக கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் இருப்பார். கிராம நிர்வாக அலுவலர் செயலாளராக இருப்பார். அந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி, சுகாதார, சமூகப் பணியாளர்கள் உறுப்பினர்களாக இருப்பர். 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் ஒன்றுகூடி, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும். 

பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரித்துள்ள சூழலில், அங்கு குழந்தை பாதுகாப்புக் கொள்கையையும் அதை நடைமுறைப்படுத்தும் குழுவையும் உருவாக்க வேண்டும். பள்ளிகளில் சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில், மாணவர்களுக்கான புகார் பெட்டியை வைக்க வேண்டும். குழுவினர் முன்னிலையில் அதைத் திறந்து பார்த்து, படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பயிரை மேயும் வேலிகள்? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பிஞ்சுகள்... தீர்வுகள் என்ன?

1098 எண் குறித்து விழிப்புணர்வு

பள்ளிகளில் 1098 என்ற குழந்தை பாதுகாப்பு எண்ணை அனைத்து வகுப்பறை அறிவிப்புப் பலகைகளிலும் ஒட்ட வேண்டும். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், உளவியலாளர்களின் எண்களையும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். வளரிளம் குழந்தைகள் தங்களின் வாழ்க்கையை முடித்துக்கொள்வதால் குற்றம் செய்தவன் தப்பித்துக்கொள்கிறான், உண்மை இறந்துவிடுகிறது என்பதைப் புரியவைக்க வேண்டும். 

பள்ளிகளில் பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று அரசாணையே (G.O.121, 2012) உள்ளது. அதை ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

பெற்றோரின் பங்கு

பெற்றோர்கள், தங்கள் குழந்தை படிக்கப் போகும் பள்ளிகளில் அபாகஸ், ரோபோட்டிக்ஸ், சங்கீதம், நடனம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளதா என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, குழந்தைகளுக்குப் பள்ளி பாதுகாப்பாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்களின் பின்புலம் குறித்து கவனிக்க வேண்டும். 

நிறைவான நேரத்தைக் குழந்தைகளிடம் செலவிட வேண்டும். ’என் உடல்- என் உரிமை’ என்பதைக் குழந்தைகளிடம் கசடறக் கற்பிக்க வேண்டும். எது பாதுகாப்பான தொடுகை, எது பாதுகாப்பற்ற தொடுகை? என்பதை எளிமையாக விளக்க வேண்டும். ’உனக்கு சங்கடமாக ஏதேனும் நடந்தால், அந்த இடத்தைவிட்டு அகல வேண்டும், உரக்கக் கத்த வேண்டும், பிறரிடம் சொல்ல வேண்டும்’ என்பன உள்ளிட்டவற்றைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். 

பாலினம், உடல், உறுப்புகள் குறித்த புரிதல், வயது வந்தோரின் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். குழந்தைகள் தங்களின் கருத்துகளை, எண்ணங்களை முழுமையாகச் சொல்ல அனுமதிக்க வேண்டும். 

இவ்வாறு தேவநேயன் தெரிவித்தார்.

’ஆசிரியர்கள் அல்ல, அயோக்கியர்கள்’

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபர்கள் எல்லாம் ஆசிரியர்கள் அல்ல, அயோக்கியர்கள் என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறார் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் இளமாறன். இத்தகைய சம்பவங்களில் ஒருசில மட்டுமே வெளிவந்திருப்பதாகவும், இன்னும் நிறையச் சம்பவங்கள் வலியாலும் பயத்தாலும் சொல்லத் தயங்கி, காத்துக் கிடப்பதாகவும் கூறுகிறார் இளமாறன்.



பயிரை மேயும் வேலிகள்? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பிஞ்சுகள்... தீர்வுகள் என்ன?
தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத் தலைவர் இளமாறன்

அவர் மேலும் கூறும்போது, ’’அரசுப் பள்ளிகளைக் கண்காணிக்க 32 மாவட்டங்களிலும் 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் தனித்தனி மாவட்டக் கல்வி அதிகாரிகள் உள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளைக் கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி மட்டுமே உள்ளார். சுமார் 400 பள்ளிகளை அவர் கவனிக்க வேண்டியதைக் கருத்தில்கொள்ள வேண்டும். 

முன்பெல்லாம் வகுப்புகளில் நீதிபோதனை, ஒழுக்கநெறிக் கல்வி இருந்தது. இதை அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும்.  

மாணவர்கள் மாறிப்போவது ஏன்?

முந்தைய காலகட்டங்களில் கூட்டுக் குடும்பங்களாக இருந்தோம். பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தாத்தா, பாட்டி ஆகியோர் குழந்தைகளிடம் மனம்திறந்து நட்புடன் அளவளாவினர். குழந்தைகளின் எண்ணம் சிதறவிடாமல் பார்த்துக்கொண்டனர். இப்போது குடும்ப சூழல் மாறிவிட்ட சூழலில், அவர்களிடம் வகுப்பில் என்ன நடந்தது என்று கேட்க ஆளில்லை. குழந்தைகளின் நண்பனாக மொபைல்கள் மாறிவிட்டன. 

அம்மா, அப்பாவிடம் பெற முடியாத பாசத்தை வெளியில் யாராவது சாதாரணமாகக் காட்டினாலே, வளரிளம் பருவத்தினர் சாய்ந்து விடுகின்றனர். 

ஒத்த வயது மாணவர் குழு

ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்முறை ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சியில் 12-ம் வகுப்பு மாணவரை பெண் ஆசிரியர் அழைத்துச் சென்றதை யாராலும் மறக்க முடியாது. இந்தப் பிரச்சினைகளைத் தடுக்க, ஒத்த வயதுள்ள மாணவர் குழுவைப் பள்ளிகளில் உருவாக்க வேண்டும். அவர்கள் வாரமொருமுறை கூடிப் பேசி, தங்களின், நண்பர்களின் பிரச்சினைகளை மனதுவிட்டுப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதைத் தங்களிடம் தயக்கமின்றி எடுத்துச்சொல்ல, பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் வட்டார அளவில் பள்ளிகளுக்கென உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும்’’ என்று இளமாறன் தெரிவித்தார்.


பயிரை மேயும் வேலிகள்? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பிஞ்சுகள்... தீர்வுகள் என்ன?

பாலியல் விழிப்புணர்வுக் கல்வியை அளிப்பதில் இன்னும் ஆசிரியர்களிடையே வீண் தயக்கம் நிலவுவதைப் பட்டவர்த்தனமாக உடைக்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியர் பார்வதி ஸ்ரீ.

அவர் கூறும்போது, ’’உடலுறுப்புகள் குறித்த பாடங்களைத் தவிர்த்துவிட்டு, நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் சூழல் இருப்பதும் உண்மை. ஆசிரியர்களுக்கே இன்னும் இதுகுறித்த புரிதல் இல்லை. பாலியல் கல்வியை விழிப்புணர்வு என்ற கோணத்தில் பார்க்காமல், அது தனிப்பட்ட ஒன்று, ரகசியம் என்றே இன்னும் பல ஆசிரியர்கள் நினைக்கின்றனர். ஆனால் இதை உடற்கூறு என்ற நிலையில் வைத்துக் கற்பிக்க வேண்டும். 

வளரிளம் பருவத்தினருக்குத் தங்களின் உடலில் ஏற்படும் மாற்றம் குறித்த சரியான புரிதல் இல்லாததாலேயே, எதிர்பாலின ஈர்ப்பு இயல்பாகி விடுகிறது. இதை உணர்ந்து ஆசிரியர்கள், விழிப்புணர்வுக் கல்வியை அளிக்க வேண்டும். முதலில் இதற்கான பயிற்சிகளை உளவியலாளர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும்’’ என்கிறார் ஆசிரியர் பார்வதி ஸ்ரீ. 

ஒப்பீட்டளவில் இன்றைய தலைமுறை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், குழந்தைகளுக்கான பாலியல் கல்வி எந்த வயதில் தரப்படலாம் என்று சந்தேகம் நிலவுகிறதே என்று கேட்டதற்கு, ’’6-ம் வகுப்பு முதல் பாலியல் கல்வி கட்டாயம் தேவை. எனினும் குழந்தைகளின் வயதுக்கேற்ப படிநிலைகளின் அடிப்படையில் இதைக் கற்றுத்தரலாம். 1-ம் வகுப்புக் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் ஆகியவற்றில் தொடங்கலாம். அந்த வயதுக் குழந்தைகள் சிலர் தொடுதலுக்கு ஏங்கவும் செய்யலாம். அதை இதத்துடன் அவர்களுக்கு விளக்க வேண்டும். 

’இவன் ’லவ்’னு சொல்றான் டீச்சர், ’கிஸ்’னு சொல்றான் டீச்சர்!’ என்று குழந்தைகள் என்னிடமே சொல்லி இருக்கின்றனர். குழந்தைகளிடம் அன்பையே நாம் கெட்ட வார்த்தைகளாக்கி விட்டோம். 

 

பயிரை மேயும் வேலிகள்? பாலியல் வன்முறைக்கு பலியாகும் பிஞ்சுகள்... தீர்வுகள் என்ன?
ஆசிரியர் பார்வதி ஸ்ரீ. 

கலைகள் மூலமாக பாலியல் கல்வி

கலைகள் மூலமாகவும் வயதுக்கேற்ற வகையிலும் வகுப்புக்கு ஏற்றாற்போலும் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலமாகவே சகல வித பாலியல் தொந்தரவுகளையும் குழந்தைகளால் எதிர்கொள்ள முடியும். 

அதேபோல பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகளுக்கு உளவியல் சிகிச்சைகளும் அவசியம். ஏனெனில் நிறையக் குழந்தைகள், தங்களுக்கு நெருக்கமானவர்களாலேயே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். எனக்குத் தெரிந்த மாணவியுடைய சகோதரனின் நண்பர்கள், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர். அந்தக் குழந்தைக்கு நான் உளவியல் சிகிச்சை அளிக்கும்போது இது தெரியவந்தது’’ என்னும் ஆசிரியர் பார்வதி ஸ்ரீ, தெரிந்தே, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மரண தண்டனை வரை அளிக்கலாம் என்கிறார். 

தவறிழைப்போருக்கு தூக்கு தண்டனை

அவர் கூறும்போது, ‘’மாணவிகளுக்கு அவர்களின் ஆசிரியர்தான் ஹீரோ. விடலைகளின் அந்த ஈர்ப்பு, இனக்கவர்ச்சியை வயதில் மூத்த ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. ஆசிரியர்கள் தங்களுடைய மனதை முறைப்படுத்தி நடக்க வேண்டும். 

அதேபோலப் பாலியல் விவகாரங்களில் தவறிழைக்கும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் என்றில்லாமல், தொடர்ந்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு, குற்றத்தின் தன்மையைப் பொருத்து சிறைத் தண்டனை, அதிகபட்சமாகத் தூக்கு தண்டனை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் இத்தகைய செயல்களால் இயல்பான வாழ்க்கையையே மாணவிகளால் வாழ முடியாமல் போய்விடும். 

ஆசிரியர்கள், மாணவிகளைத் தனியாகத் தன் அறைக்கு, ஆய்வகங்களுக்கு, நூலகங்களுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றையும் மீறி ஏதேனும் நடந்தால், அதுகுறித்து மாணவி பெற்றோர்களிடம் தைரியமாகக் கூற வேண்டும். வாய்ப்பிருக்கும்போது பெற்றோர்களுக்கும் பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வை அளிக்க வேண்டும்’’ என்று ஆசிரியர் பார்வதி ஸ்ரீ தெரிவித்தார். 

சிறுமிகள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரிக்கக் காரணமே அவர்கள் அச்சத்தால் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம்தான். வெளியில் தெரியவரும் குற்றங்கள் மட்டும்தான் நாம் படிப்பவை, பார்ப்பவை எல்லாமே... நிரந்தரத் தீர்வு வேண்டும் எனில் பெண் குழந்தைகளிடம் நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் அனைத்தும் வெளிக்கொணரப்பட வேண்டும். 

அந்தக் காலமே பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் காலம். அந்தத் தருணம் அரசு, பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் மனது வைத்தால்தான் கனியும். 

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதி ஏற்போம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget