Facial: முகம் பளபளக்க இதுவே போதும்! பேசியல், பேஸ்பேக், பிளீச்சிங் இனி தேவையில்லை!
தயிருடன் மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்பேக் ஆக முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஒவ்வொருவரின் அடையாளமாக இருப்பது முகம் தான். அதை பளபளப்பாகவும், அழகாகவும் வைத்திருக்க வேண்டும் என பெரும்பாலானோர் விரும்புவது உண்டு. குறிப்பாக பெண்கள் முகத்தை அழகாக வைத்திருக்க அழகு நிலையங்களுக்கு சென்று பேஷியல், பேஸ்பேக், பிளீச்சிங் செய்வதுண்டு. ஆனால், சிலருக்கு அதில் இருக்கும் கெமிக்கல் இன்கிரீடியன்ஸ் ஒத்துக்கொள்ளாமல் சரும பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு.
முகம் பள, பளக்க வேண்டுமா?
சிலர், பேஸ் மாஸ்க், ஸ்கின் குளோ கேர் கிரீம் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் ஒவ்வொருவரின் சருமத்திற்கு ஏற்றார் போல் அதன் பலன்கள் மாறுபடலாம். கெமிக்கல் கலந்த சில பொருட்கள் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என நினைப்பவர்கள் எளிதில் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து முகத்திற்கான பேஷியல், பேஸ் பேக் செய்து முகத்தின் பொலிவை பராமரிக்கலாம்.
அப்படி வீட்டில் இருக்கும் எளிமையான ஒரு பொருளான தயிர் முகத்தின் பளபளப்பிற்கு உதவக்கூடியது. தயிருடன் சில பொருட்களை கலந்து முகத்தில் அப்ளை செய்து, கழுவினால் பளபளப்பான சருமம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தயிரில் கலோரிகள், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, டி, பி12 இருப்பதால் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுகிறது. மேலும் தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் தோல் பராமரிப்புக்கு உதவக்கூடியது. இது புதிய தோலின் வளர்ச்சியையும் தூண்டக்கூடியது.
நன்மைகள் என்னென்ன?
சரும பாதுகாப்புக்கு தயிரை பயன்படுத்துவதால், தோலில் பெரிய துளைகள் ஏற்படுவதை தடுக்கலாம், வடுக்களை போக்கலாம், ஹைப்பர் பிக்மெண்டேஷன்ஸை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
தயிரை பயன்படுத்தும் முறைகள்:
* வெள்ளரிக்காயை தோல் சீவி மசித்து அதனுடன் தயிர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை சருமத்தில் தடவி வரலாம்.
* தக்காளியை அரைத்து அதனுடன் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் பளபளவென பொலிவு கிடைக்கும்.
* தயிருடன் கால் டியூஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவி வந்தால் தொற்றுகள் ஏற்படாது. சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அகலும் என கூறப்படுகிறது. ( மஞ்சளை ஆண்கள் பயன்படுத்த கூடாது)
* உருளைகிழங்கை வேக வைத்து அரைத்து அதனுடன் தயிர் கலந்து வாரத்துக்கு இருமுறை முகத்தில் பயன்படுத்தி வந்தால் குளோ ஸ்கின் கிடைக்கும் என கூறப்படுகிறது.
* தயிருடன் பாசிப்பருப்பு மாவு அல்லது கடலை மாவு கலந்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவாக இருக்கும்
* தயிருடன் மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்பேக் ஆக முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
இவை மட்டும் இல்லாமல் தயிருடன் ஆரஞ்சு பழ தோலின் பொடி, கற்றாழை ஜெல், ஓட்ஸ் கலந்தும் சருமத்திற்கு பயன்படுத்தி குளோ ஸ்கின் பெறலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக தயிருடன் எந்த பொருட்களை சேர்த்தாலும் நேரடியாக முகம் அல்லது கைகளில் தடவாமல், ஏதேனும் ஒரு பகுதியில் சிறிது பேட்ச் செய்து பரிசோதித்த பிறகே பயன்படுத்த வேண்டும். தோலில் அரிப்பு, வீக்கம் உள்ளிட்ட ஒவ்வாமையை தடுக்கவே இதை செய்ய வேண்டும்.