ஃப்ரிட்ஜில் வைத்தும் தோசை மாவு, தயிர் சீக்கிரம் புளித்துவிடுகிறதா? தடுப்பதற்கான டிப்ஸ் இதோ!
வெயில் காலத்தில் என்னதான் ஃபிரிட்ஜிற்குள் இருந்தாலும் மூன்று, நான்கு நாட்களில் புளித்து விடும், அதன் பின் தோசையை வாயில் வைக்க முடியாது. தயிராக இருந்தாலும் அதே கதைதான்.
இட்லி, தோசை தென்னிந்திய கலாச்சாரத்தில் ஒன்றிப்போன உணவு வகையாக மாறிவிட்டது. மிகவும் எளிதாக காலையில் செய்ய முடிந்த உணவாக இருப்பதால் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் உணவு வகையாக உள்ளது. வெயில் காலம் என்றாலே இட்லி, தோசை, தயிர் சாப்பிடுவதற்கு கொஞ்சம் அதிக சிரமம் எடுக்க வேண்டி இருக்கும்.
மறந்து ஒரு இரவு வெளியில் வைத்து விட்டாலே கலையில் புளித்து வாயில் கூட வைக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால் மொத்தமாக மாவு அரைத்து பழகியவர்கள் ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது உண்டு. வெயில் காலத்தில் என்னதான் ஃபிரிட்ஜிற்குள் இருந்தாலும் மூன்று, நான்கு நாட்களில் புளித்து விடும், அதன் பின் தோசையை வாயில் வைக்க முடியாது. தயிராக இருந்தாலும் அதே கதைதான். இதற்கு என்னதான் வழி என்றால், சில சிறிய விஷயங்கள் மூலம் அறிவியலை பயன்படுத்தி இதனை சரி செய்யலாம்.
தயிர் கெடாமல் தடுப்பது எப்படி
உறை ஊற்றும் முறையில் தான் பிரச்சனை உள்ளது. முறையாக தயிரை உறைய வைத்தால் இந்த பிரச்சனைகள் வராது. முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிரை போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மேல் மிதமான சூட்டில் உள்ள பாலை டீ ஆற்றுவது போல ஆற்றி ஊற்ற வேண்டும். நன்றாக ஆற்றியதும், அதனை அப்படியே எடுத்து ஒரு பீங்கான்(செராமிக்) பாத்திரத்தில் சேமிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் தயிர் கெட்டியாக, புளிப்பில்லாமல், சுவையாக கிடைக்கும்.
பொதுவாக செய்யும் தவறு
வெயில் காலத்தில் பெரும்பாலும் தயிரை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. அது போக தயிர் உறை ஊற்றுவதில் பலர் செய்யும் தவறு, பால் காய்ச்சிய அதே பாத்திரத்தில் உறை ஊற்றுவதுதான். அது சரியான முறை அல்ல. வேறு பாத்திரத்தில் மாற்றிதான் ஊற்ற வேண்டும். இன்னொன்று பாலை அதிக சூட்டிலோ, குளிர்ந்த நிலையிலோ ஊற்றுவதும் ஒரு பிரச்சனைதான். அதற்கென மிதமான சூட்டில் உறை ஊற்றுவதே சிறந்தது.
மாவை புளிக்காமல் தடுக்கும் முறைகள்
- உப்பு போடுவது: முதலில் உப்பு போடுவதுதான் பிரச்சனை. பெரும்பாலும் அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும். தெரியாதவர்கள், மாவை ஒன்றாக அரைத்து பெரிய பாத்திரத்தில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அந்த மொத்த மாவிலும் உப்பு போடக்கூடாது. பயன்படுத்தும்போது எடுக்கும் கொஞ்ச மாவில் மட்டுமே உப்பு போட்டு பயன்படுத்தவேண்டும். மொத்தமாக உப்பு போட்டால் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்துவிடும்.
- வெற்றிலை: மாவு வைத்திருக்கும் பாத்திரத்தின் மீது வெற்றிலைகளை காம்போடு சேர்த்து வைக்கவேண்டும். அதிலும் வெற்றிலை காம்புகள் மட்டும் மாவிற்குள் புதைந்திருப்பதுபோல் வைத்து வெற்றிலையை மேலே அழுந்த வைக்க வேண்டும். வெற்றிலையின் காரம் மாவை புளிக்க விடாமல் தடுக்கும்.
- கற்பூரவல்லி இலை: மாவை புளிக்க விடாமல் செய்ய கற்பூரவல்லி எனப்படும் ஓமவல்லி இலையும் நமக்கு உதவும். அதே போல மாவின் மேல் பகுதியில் இந்த இலைகளை போட்டு வைக்கவும். இதனால் மாவில் எந்த வாசமும் ஏறாது. தோசை சுடும்போது சாதாரண வாசம்தான் இருக்கும். ஆனால் உடலுக்கு நல்லது.