Fathers Day 2023 Wishes: எந்தன் பொன்வானத்திற்கு அன்புடன்... தந்தையர் தின வாழ்த்துகள் இதோ!
Fathers Day 2023 Wishes in Tamil: சர்வதேச தந்தையர் தினத்தில் அப்பாக்களுக்கும் அன்புடன் வாழ்த்து செய்திகளை இக்கட்டுரையில் காணலாம்.
" என் வாழ்வில் என்றும் நான் கடக்க முடியாத பாதைகள். முதன்முதலாக உங்கள் கைப்பிடித்து பள்ளிக்குச் சென்றது; சலூனுக்குச் சென்றது; கடற்கரைக்குச் சென்றது என எத்தனையோ நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. சின்ன வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் போது என் இடுப்பைப் பிடித்துக் கொண்டே வந்து, சட்டென்று ஒரு கணத் தில் பிடியைவிட்டீர்கள். நீங்கள் பிடித்துக் கொண்டு இருப்பதாக நினைத்து, சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருந்தேன். இப்போதும் அப்படித்தான் நீங்கள் பிடித்துக்கொண்டு இருப்பதாக நினைத்து ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.
அப்பா... உங்கள் உயிரின் ஒரு துளியில் இருந்து என் உலகம் தொடங்கியது." - அணிலாடும் முன்றில் தொகுப்பில் இப்படி எழுதியிருப்பார் நா.முத்துக்குமார்.
அப்பா என்ற வார்த்தை சொல்ல முடியாத அர்த்தங்களை கொண்டிருக்கிறது எனலாம். இந்த உலகிற்கு நம்மை அறிமுக செய்பவர்கள் நம் பெற்றோர்கள். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு இன்றியமையாதது. சரி.. எதுக்கு இப்போ இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்னா.. தந்தையர் தினம் நெருங்கிவிட்டது, வரும் ஞாயிற்றுக்கிழமை 18-ஆம் தேதி தந்தையர்களை கொண்டாடும் விதமாக ‘சர்வதேச தந்தையர்கள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
தந்தையர் தினம்
சர்வதேச தந்தையர் தினம் 1910-இல் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. இந்த நாளுக்கு அமெரிக்காவில் விடுமுறை என்பது தன ஹைலைட். கொண்டாட தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1916-ஆம் ஆண்டு முதல், இந்த நாள் அதிகாரப்பூர்வ விடுமுறையாக மாறியது. ஒரு கட்டத்தில் பல மக்கள் தங்கள் தந்தைகளை கௌரவிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதால், இந்த நாள் அமெரிக்கா முழுவதும் பரவியது. மகள்/மகன் அப்பாவுக்கு பரிசுகளை வழங்குவது அல்லது அவர்களின் வாழ்க்கையை கௌரவிப்பதற்காக தங்கள் தந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது போன்ற வழிகளில் இவை கொண்டாடப்படுகிறது.
யார் முன்மொழிந்தது?
அன்னையர் தினம் கொண்டாடப்படுவது போலவே, தந்தையர் தினம் உருவாக்கப்பட்டது. இது 1908-இல் வணிக விடுமுறையாக மாறியது மற்றும் 1914-இல் ஜனாதிபதி உட்ரோ வில்சனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்னையர் தினம் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தாய்மார்களுக்காக ஒரு நாள் அர்ப்பணிக்கப்பட்ட பிறகு, ஸ்போகேனின் சொனோரா ஸ்மார்ட் டோட் என்பவர், தந்தைகளுக்காக இதேபோன்ற நாளை கொண்டாட ஊக்கமளித்தார்.
சொனோரா ஸ்மார்ட் டோட் தன்னோடு சேர்த்து 14 குழந்தைகளுடன் தாய் இல்லாமல் தந்தையால் தனியே வளர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தந்தையின் சேவையை மதிக்க முடிவு செய்த அவர் அதற்கான சமூகத்தின் ஆதரவையும் பெற்றார். இது ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினத்தை கொண்டாட வழிவகுத்தது. இது படிப்படியாக அமெரிக்காவின் மற்ற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், 1916 இல், வில்சன் விடுமுறையாக அங்கீகரித்தார்.
தந்தையர் தின வாழ்த்துகள்
- அன்புள்ள அப்பா! எல்லாமுமாக.. நான் தேடும் கடலாக, வேடந்தாங்கலாக இருப்பதற்கு அன்பும் முத்தங்களும்...
- நான் கூடடையும் பெருங்காடு நீ.. அப்பா! உன்னை கொண்டாடுவதில் மகிழ்கிறேன்.!
- இந்த உலகில் நான் பறந்து திரிந்திட பெரு வெளியை உருவாக்கினாய்.. அன்பான வாழ்த்துக்கள்
- என் ஹீரோவான உன்னை கொண்டாடுவடுதில் என்றும் மகிழ்கிறேன் அப்பா.. அன்பான தந்தையர் தின வாழ்த்துகள்.
- நாம் விரும்பிய பாதையில் நடந்தாலும் உன் விரல் பிடித்து, உன்னுடன் நடந்து செல்லும்போது ஏற்படும் நிம்மதி என்றும் இருந்திட வேண்டுவேன்.. தந்தையர் தின வாழ்த்துகள்..அப்பா!
- உலகின் சிறந்த அப்பாவிற்கு என் வாழ்த்துகள்!
- வாழ்க்கையில் என்ன நடந்தாலும், கூட்டிற்கு திரும்பிவிட்டால் பாதுகாப்பு என்ற உணர்வை தரும் உனக்கு என் மனமார்ந் வாழ்த்துகள் அப்பா!
- எந்நாளும் என்னை காதலிக்கும் உனக்கு பேரன்பும்..முத்தங்களும்,!