மேலும் அறிய
Cryptic Pregnancy: கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் குழந்தை பிறக்கும்; அதிர்ச்சி அடைய வைக்கும் மருத்துவ உண்மைகள்!
கர்ப்ப காலத்தில் வராமல் இருக்க வேண்டிய மாதவிடாய் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு லேசாகப்படுவது ஓர் அறிகுறி.

கர்ப்ப காலம்
Source : சிறப்பு ஏற்பாடு
கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் பத்து மாதங்கள் கழித்து திடீரென வயிற்று வலிக்கு மருத்துவமனை சென்று அதிர்ச்சிகரமான ஆச்சரியமாக பிரசவம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா??? இருக்கிறது என்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா.
இதுகுறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது:
இது க்ரிப்டிக் ப்ரெக்னன்ஸி (cryptic pregnancy) என்று அழைக்கப்படுகிறது. க்ரிப்டிக் (CRYPTIC) என்றால் புரிந்து கொள்வதற்கு அரிதான, எளிதில் புரியாத / தெளிவாகப் புலப்படாத என்று அர்த்தம்.
இது எப்படி சாத்தியம்?
கர்ப்ப காலத்தில் நடக்க வேண்டிய விஷயங்கள் நடக்காமல் போவதால் கர்ப்பமடைந்திருக்கிறோம் என்பதே அறியாமல் இருக்க அரிதாக வாய்ப்பு உண்டு.
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் வர வேண்டிய வாந்தி, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றாமல் இருப்பது,
கர்ப்ப காலத்தில் வராமல் இருக்க வேண்டிய மாதவிடாய் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு லேசாகப்படுவது
அல்லது பிசிஓடி போன்ற ஹார்மோன் கோளாறு இருப்பவர்களுக்கு மாதவிடாய் ஏற்கனவே சீரான இடைவெளியில் வராது.
எனவே அவர்கள் மாதவிடாய் வராமல் இருப்பதை அது தங்களுக்கு இருக்கும் பிசிஓடி பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.
கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய அளவு எடை அதிகரிக்காமல் இருப்பது அல்லது அதிகரிக்கும் எடையை சாதாரணமாக எடை கூடுகிறது என்று நினைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
கொழுப்பு அதிகமாக இருப்பின்...
வயிறுப் பகுதியை சுற்றி சேரும் கொழுப்பு அதிகமாக இருப்பின், சிசு வளரும்போது இரண்டாவது மும்மாதத்தில் தாய்மார்களுக்கு வரும் பேபி பம்ப் எனும் சிசுவினால் ஏற்படும் தொப்பை பெரிதாக வெளியே தெரியாமலும் போகலாம். அதனால் பார்ப்பவர்களுக்கு கர்ப்பத்தை அடையாளம் காண இயலாமலும் போகலாம்.
அல்லது தாய் குறைந்த ஊட்டச்சத்துள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டாலோ மனநலப் பிரச்சனை காரணமாக சரியாக உண்ணாமல் இருந்தாலோ சிசுவின் எடை மிகக்குறைவாக இருந்து அதனால் வயிற்றுப் பகுதி பெரிதாக வெளியே தெரியாமலும் போகலாம்.
கர்ப்ப காலத்தின் மத்திய பகுதியில் இருந்து உணர வேண்டிய குழந்தைகளின் அசைவுகள் - உண்மையிலேயே தெரியாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
குடலுக்குள் இருக்கும் வாயுத் தொல்லை
அல்லது பிரசவத்தை எதிர்பார்க்காமல் இருப்பதால் குழந்தையின் லேசான அசைவை குடலுக்குள் இருக்கும் வாயுத் தொல்லை என்று நினைத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
தாய்க்கு ஏற்படும் அதீத மனச்சோர்வு/ மனத்தாழ்வு நிலை / தனிமை ஆகியவற்றால் மனநிலை சிக்கலுக்கு உள்ளாகி தான் கர்ப்பமடைந்திருப்பதை உணராத வண்ணம் இருந்திருக்கும் வாய்ப்பும் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் சீனாவில் நடந்த இந்த சம்பவத்தில், லி என்ற பெண் இரண்டாவது குழந்தை பிறப்பு வேண்டாம் என்ற எண்ணத்துடன் இருந்துள்ளார். அதற்குரிய கர்ப்பத்தடை முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்.
எனவே அவர் கர்ப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால் அது குறித்து கவனமும் எடுக்கவில்லை.
வெளியே வந்தே தீரும்
இவருக்கு நேர்ந்தது அரிதினும் அரிதான "க்ரிப்டிக் ப்ரெக்னன்சி". அதாவது என்னதான் தாயே நினைத்தாலும்
இம்மண்ணில் வர வேண்டிய பிறக்க வேண்டிய ஒரு உயிர் அத்தனை தடைகளையும் மீறி, ஏன் தன் தாய் கர்ப்பமானதை வெளியே தெரியாமல் கூட மூடி மறைத்து வெளியே வந்தே தீரும் என்பது புலனாகிறது.
நானும் எனது அனுபவத்தில் சில தாய்மார்களை அவர்களின் ஐந்து மாதத்துக்கு மேல் கர்ப்பம் அடைந்திருப்பதை ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்பிக் கண்டறிந்துள்ளேன். அமெரிக்காவின் பி2 ஸ்டெல்த் பாம்பர் எனும் விமானம் ரேடார் கருவிகளையும் நேக்கு போக்கு காட்டி விடும் என்று படித்தேன்.
இங்கு கருவில் உருவான சிசு, தனது தாய் கர்ப்பம் என்று அறிந்தால் கலைத்து விடுவார் என்பதை உணர்ந்து
தாய்க்கும் நேக்கு போக்கு காட்டி உலகில் பிறந்து விட்டிருக்கிறது.
"வெல்கம் டூ தி க்ரிப்டிக் வேர்ல்ட்
டியர் க்ரிப்டிக் பேபி"
இவ்வாறு .ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்






















