ITBP-யில் விளையாட்டு வீரர்களுக்கு 126 காவலர் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
இந்தோ திபெத் எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பில் ஜூடோ விளையாட்டுக்கு 12 இடங்களும், குத்துச்சண்டைக்கு 9 இடங்களும், டேக்வாண்டோவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தோ திபெத் எல்லைக் காவல் படையில் (ITBP) விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் கான்ஸ்டபிள் (பொது பணி) பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 126 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விளையாட்டுத் திறனும் கொண்ட ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு அக்டோபர் 3-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 1-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பில் ஜூடோ விளையாட்டுக்கு 12 இடங்களும், குத்துச்சண்டைக்கு 9 இடங்களும், டேக்வாண்டோவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வாலிபால், பாட்மின்டன், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளுக்கு தலா 6 இடங்களும், தடகளம் மற்றும் வில்வித்தைக்கு தலா 5 இடங்களும் உள்ளன. இதர விளையாட்டுப் பிரிவுகளுக்கும் காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 126 இடங்களுக்கான விளையாட்டுப் பிரிவு வாரியான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2026-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றது அல்லது பதக்கங்கள் பெற்றது தொடர்பான தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். விளையாட்டுச் சாதனைகளுக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முறையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதுடன், உடல் தகுதித் தரநிலை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளும் இடம்பெறும். விளையாட்டுச் சாதனைகள், கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும் என்பதால், விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள நிபந்தனைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்வது அவசியம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும் பெண்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விளையாட்டு வீரர்கள் recruitment.itbpolice.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு தனிப்பட்ட விவரங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டுச் சாதனை தொடர்பான தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















