Strokes signs: பெண்களை அதிகம் பாதிக்கும் பக்கவாதம் - முக்கிய அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Strokes signs: பெண்களிடையே அதிகம் காணப்படும் பக்கவாதத்தை உணர்த்தும் அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக இந்த தொகுப்பில் விரிவாக அறியலாம்.
Strokes signs: பக்கவாதம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதி உலக பக்கவாத தினம் பின்பற்றப்படுகிறது.
பக்கவாத பிரச்னை:
பக்கவாதம் என்பது திடீர் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு மருத்துவப் பிரச்னையாகும். மூளையின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது ரத்தக் குழாயில் ஏற்படும் சிதைவு காரணமாக பக்கவாதம் ஏற்படலாம். இதன் விளைவாக மூளைக்குள் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால் மூளை செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட, செல்கள் விரைவாக சேதமடைகிறது அல்லது இறப்பை சந்திக்கிறது. உடல் பலவீனமாவது, உணர்வின்மை, பேசுவதில் சிரமம், கடுமையான தலைவலி மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவை பக்கவாதத்தின் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களுக்கு அதிக பாதிப்பு:
பக்கவாதம் உலகளாவிய மருத்துவ பிரச்னையாக இருந்தாலும், ஆண்களை விட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வயதாக வயதாக பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ஆண்களை விட பெண்கள் அதிக ஆயுட்காலம் கொண்டிருப்பதன் காரணமாகவே, ஆண்களை விட பெண்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதோடு, கருவுற்ற காலத்தில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளும், கருத்தடை மாத்திரைகளும் கூட பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், பக்கவாதத்திற்கான முக்கிய அறிகுறிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
"FAST “ அறிகுறி:
பக்கவாதத்தின் உடனடி அறிகுறிகள் சுருக்கமாக ”FAST” என குறிப்பிடப்படுகிறது. அதன்படி, முகம் தொங்குதல் (face dropping), கை பலவீனம் (arms), பேசுவதில் சிரமம் (speech) ஆகியவை உடனடி அறிகுறிகளாகும். இவற்றை உணரும் நபர் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் ஆண், பெண் என இருவருக்கும் பொருந்தும்.
முகம் மற்றும் மூட்டு பலவீனம்:
முகம் தொய்வு அல்லது பலவீனம் என்பது மிக முக்கியமான பக்கவாத அறிகுறியாகும். இது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஏற்படும். அதாவது முகத்தின் ஒரு பக்கம் அசைவற்றதாக மாறும். கை பலவீனமடைவதும் பக்கவாதத்தின் முக்கிய அறிகுறியாகும். பெண்கள் ஒன்று அல்லது இரண்டு கைகளை தூக்குவதில் அல்லது கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இது பெண்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
பார்வை குறைபாடு:
மங்கலான அல்லது இரண்டு கண்களிலும் பார்வை குறைபாடு ஏற்படுவதும், பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. திடீரென ஏற்படும் அதிகப்படியான வெளிச்சத்தை காண்பதில் சிரமம், ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் திடீரென குருட்டுத்தன்மையை அனுபவிப்பது பக்கவாதத்தின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.
சுயநினைவின்மை:
குழப்பம், திசைதிருப்பல் அல்லது சுயநினைவின்மைக்கு பக்கவாதம் வழிவகுக்குகிறது. இது பெண்களுக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது. திடீர் சோர்வு, பலவீனமாவது அல்லது தினசரி பணிகளை செய்வதில் சோம்பல் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். இந்த அறிகுறிகள் பொதுவாக பக்கவாதத்தை சார்ந்தது இல்லை என்றாலும், பெருமூளை ரத்தக் குழாய் பிரச்னைகளை குறிக்கலாம்.
குமட்டல் & வாந்தி:
பக்கவாதத்தின் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம், ஆனால் பெண்கள் இந்த அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பக்கவாதத்தின் போது மூளையின் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபடுவதால், இந்த அறிகுறிகள் மூளை தொடர்பான பிரச்னையைக் குறிக்கலாம்.
விக்கல் & மூச்சு திணறல்:
விக்கல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பக்கவாதத்துடன் குறைவாகவே தொடர்புடையவை, ஆனால் அவை சில பெண்களால் உணரப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகளும் இதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. மிக விரைவாக சாப்பிடுவது அல்லது பதட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் அவை ஏற்படலாம் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் அவை நரம்பியல் பிரச்னையைக் குறிக்கலாம்.
பக்கவாதத்தை தடுப்பது எப்படி?
மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆஸ்பிரின் உட்கொள்வது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துவது அல்லது புகைபிடிக்காமல் இருப்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது, குறைந்த அளவு சோடியம் கொண்ட ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலமும் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதோடு, தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமும், பக்கவாதத்திற்கான அறிகுறிகளை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ALSO READ | Kerala Blast: கேரளாவில் கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு.. ஒருவர் உயிரிழப்பு
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )