புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த முத்துராமன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு  எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த போராட்டத்தின் போது தமிழக முதல்வரை தரக்குறைவாகவும், அவர்களின் குடும்பத்தினரை அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதாக முரளிதரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பதியப்பட்ட பொய்யான வழக்கு. ஆகவே எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

 



இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த விசாரணையின்போது நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, "அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பொது இடத்திலோ, பொதுக்கூட்டங்களிலோ பேசமாட்டேன். இரு பிரிவினருக்கு இடையேயோ, இரு குழுக்களுக்கு இடையேயோ மோதல் ஏற்படும் வகையில் பேச மாட்டேன் என உறுதி அளித்து,  முத்துராமன் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.




 


காயல்பட்டினம் ஊராட்சியில் வார்டு மறுவரையை ரத்து செய்ய கோரிய வழக்கு - நகராட்சி நிர்வாகத்துறை செயலர் பதில் தர உத்தரவு 

 

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் செயலாளர் வாவுசம்சுதீன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதில், "தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நகராட்சி. இங்கு 18 வார்டுகள் உள்ளன.  2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த பகுதியில் 40 ஆயிரத்து 558 பேர் இருந்தனர். தற்போது 65 ஆயிரம் பேர் உள்ளனர். 35 ஆயிரம் வாக்காளர்கள் தற்போது உள்ளனர். காயல்பட்டினத்தில் 18 வார்டுகள் மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு காயல்பட்டினம் நகராட்சியில்  வார்டு மறுவரையறை  நடைபெற்றது. அப்போது  இந்த வார்டு மறு  வரையறைக்கு காயல்பட்டினம் மக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இவை எதுவுமே கருத்தில் கொள்ளாமல் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது, இதன் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே, கடந்த 2017ஆம் ஆண்டு காயல்பட்டினம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட  வார்டு மறுவரையறை பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்,  வார்டு மறு வரையரை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.